Thursday 15 September 2011

செய்திகள் 15/09


சிபார்சை நடைமுறைப்படுத்த கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர் குழு அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியன பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்து ஆராய்ந்து தமக்கு ஆலோசனை வழங்குமாறும் 2010 ஆம் ஆண்டின் மே மாதமளவில் ஐ.நா செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை நியமித்திருந்தார்.
இதன் பிரகாரம் இந்தக் குழு தனது அறிக்கையை இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 25 அம் திகதி வெளியிட்டது.
நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான பணிப்பாளர் சாம் சரீஃபி மனித உரிமைகள் பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை நிபுணர் குழு அறிக்கையை ஆராய்ந்து இலங்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு மனித உரிமைகள் பேரவைக்கு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயத்திற்கான பணிப்பாளர் பிரெட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவை தனது பொறுப்பினை நிறைவேற்றத் தவறியுள்ளாதாகவும் பிரெட் அடம்ஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறுகின்ற பட்சத்தில், அதற்கு சர்வதேச தலையீடு அவசியமாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
*******************

லியாம் பொக்ஸ் என்ன செய்வார்?
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நெய்ஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை அக்ற் நவ் என்ற அமைப்பும் மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் வீதியால் சென்றவர்களிடம் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன், அதுதொடர்பான மனுவொன்றிலும் கையெழுத்துகளை திரட்டியுள்ளனர்.
வடக்கு சொம்செற் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லியம் பொக்ஸ், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரியுள்ளனர்.
இதுதொடர்பான மனுவையும், ஆதரவாகத் திரட்டிய கையொப்பங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் லியம் பொக்சின் தொகுதி செயலகத்தில் கையளிக்கவுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைக்கு லியம் பொக்ஸ் ஆதரவு தெரிவிக்கும் வரை தாம் தொடர்ந்து வடக்கு சொம்செற் தொகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
*******************

அச்சமடைந்த மகிந்த!
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் இராஜதந்திர வழிமுறைகளை மீறிச் செயற்படுவதாகவும், அவர்களை கடுமையாக எச்சரிக்கும்படியும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பணித்துள்ளார்.
நேற்றுமாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பரப்புரை செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சுக்களுக்குத் தெரியாமலே, திணைகளங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களை வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்திப்பதாகவும் சிறிலங்கா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜதந்திர வழிமுறைகளை மீறிச் செயற்படக் கூடாது என்று சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதுவர்களை அழைத்து எச்சரிக்குமாறும் வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம் சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.
திணைக்களத் தலைவர்கள், ஏனைய உயரதிகாரிகளுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் தொடர்புகளை வைத்திருப்பது பற்றி அமைச்சர்களுக்கோ, அமைச்சுக்களின் செயலர்களுக்கோ தெரியப்படுத்தப்படுவதில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவில் நல்லாட்சி பற்றி பேசுகின்ற நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு தவறான முறையில்- இராஜதந்திர வழிமுறைகளை மீறிச் செயற்படுவதாகவும் சிறிலங்கா அதிபர் மேலும் கூறியுள்ளார்.
அவ்வாறு மீறிச் செயற்படும் நாடுகளில் சீனா இல்லை என்றும் சீனா அத்தகைய தந்திரத்தைக் கையாள்வதில்லை என்றும் கூறியுள்ள, மகிந்த ராஜபக்ச சிறிலங்காவில் நல்லாட்சி பற்றிய விவகாரங்களில் தலையிட சீனா எப்போதும் முயற்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
*******************


வெளியேற்றும் வீரகேசரி
வீரகேசரியின் நிர்வாகத்தின் கீழுள்ள  ஏஷியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிட்டட்  இலிருந்து கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் வெளிவந்த தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த 25 ஊடகவியலாளர்கள் நேற்று புதன்கிழமை காலை அலுவலகத்துக்குள் நுழையவிடாது நிர்வாகத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
தினக்குரலின் செய்தி ஆசிரியர், தினக்குரல் வாரவெளியீடு பிரதம ஆசிரியர், உதவி செய்தி ஆசிரியர், சிரேஷ்ட உதவி ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிர்வாகத்தினரால் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இந்த ஊடகவியலாளர்கள் தமது நிலை குறித்து தொழில் திணைக்களத்திடம் முறையிட்டனர்.
இதேபோன்று கொழும்பு 15 இல் உள்ள முகத்துவாரம் காவல் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட தினக்குரல் ஆசிரிய பீடத்தினரை தொழில் திணைக்களத்தின் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான தொழில் ஆணையாளர் விக்கிரமசிங்க 10.00மணிக்கு விசாரணைக்கு அழைத்திருந்தார்.
அதேபோன்று நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் விசாரணைக்குச் சமூகம் கொடுக்கவில்லை.
இதனையடுத்து தினக்குரல் ஆசிரியர் பீடத்தினரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர், வியாழக்கிழமை 10.30 மணிக்கு நிர்வாகத்தினரை கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பணித்துள்ளார்.
அத்துடன் தொலைபேசி ஊடாக தினக்குரல் நிர்வாக இயக்குனர் பி.கேசவராஜாவைத் தொடர்பு கொண்ட உதவி ஆணையாளர், தினக்குரல் ஊழியர்களிடம் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கோரமுடியாது எனத் தெரிவித்ததுடன் ஊழியர்களை உடனடியாக அலுவலகத்துக்குள் அனுமதிக்குமாறு கூறியபோதும் பி.கேசவராஜா அதற்கு மறுத்துவிட்டார்.
இது வீரகேசரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறிய அவர், அவர்களின் முடிவின்படியே தன்னால் செயற்படமுடியும் எனவும் கூறிவிட்டார்.
இதையடுத்து இன்று வியாழக்கிழமை இரு தரப்பினருடனும் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு வருமாறு உதவி தொழில் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஒரு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் நிர்வாகத்தினரால் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள பல ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தமது பூரண ஆதரவையும் தினக்குரல் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
தினக்குரல் ஊடகவியலாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சிங்கள ஊடகவியலாளர்கள் உட்பட பொது அமைப்புகள் பலவும் முன்வந்துள்ளன.
இச்சட்டவிரோதமான நடவடிக்கைக்கு இடங்கொடுத்தால் இலங்கையின் ஊடகவியலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும் எனவும் ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
*******************


மர்மனிதராகும் இராணுவம்
சந்தேகத்திற்கு இடமான முறையில் மலசல கூடத்தில் மறைந்திருந்த இராணுவச் சிப்பாய் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதி வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துக் கொண்டிருந்த போது இராணுவச் சிப்பாய் ஒருவர் அங்குள்ள மலசல கூடத்தினுள் மறைந்துகொண்டதை அவதானித்தார்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்ததை அடுத்து ஒன்றிணைந்த மக்கள் குறித்த சிப்பாயை பிடித்து யாழ் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இராணுவச் சிப்பாய் யாழ் நகரப்பகுதியிலுள்ள 512வது படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் மகியங்கனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.
*******************


வவுனியாவில் தமிழர்களை அச்சுறுத்தும் தாக்குதல்கள்
வவுனியாவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மத போதகர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவின் புறநகர்ப்பகுதிகளான அரபா நகர், செக்கடிப்புளவு, மற்றும் சாம்பல் தோட்டம் ஆகிய கிராமங்களிலேயே ஒரே நாளில் மர்மனிதர்களின் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
செக்கடிப்புளவில் இரவு வேளையில் வீட்டு வளவுக்குள் சென்றவர்கள் காவல்துறையினர் போன்று நடித்து கதவைத் திறக்குமாறு கோரியுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டின் மறுப்பகுதியில் கணவனும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தமையினால் இரண்டு மாத கர்ப்பிணிப்பெண் வீட்டுக் கதவைத் திறந்துள்ளார்.
இவ்வேளையில் திடிரென அவரது தலையில் தடிகள், மற்றும் இரும்புக் கம்பியினால் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளளனர்.
இதன் காரணமாக அச்சமடைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியே ஓடி மதபோதகரின் வீட்டுப்பக்கமாக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை துரத்திச் சென்ற மர்ம மனிதர்கள் அப்பெண்ணை தாக்கியுள்ளனர்.
இதனால் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் அயலவர்களினால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதிக் அருகிலுள்ள அரபா நகரில் ஜெயம் என்பவரது வீட்டுக்குச் சென்ற மர்ம மனிதர்கள் அவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில தினங்களாக மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
*******************


இலங்கையில் அதிகரிக்கும் மனநோய்
இலங்கையில் வாழும் மக்களில் 10 பேரில் ஒருவர் சில வகையான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் தெரிவித்தது.
இந்த கணிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மன நோய் பரவுவதற்கு 30 வருட கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றனவே காரணம் என நிபுணர்கள் பலர் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் 100 இலங்கையருக்கு இருவர் என்ற விகிதத்தில் தீவிர மன நோய்களுக்கு ஆளாவர் என இந்நிறுவகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நோய்களுக்கு சிகிச்சை பெறுவதன் மூலம் தீர்வு காண முடியும் என தேசிய மன ஆரோக்கிய நிறுவகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்நோய்க்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்காக உளவியல் ஆதரவுக்கான தேசிய சபை மற்றும் சுமித்ராயோ போன்றவற்றை நாட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*******************