Sunday 18 September 2011

செய்திகள் 18/09


ஸ்ரீலங்காவை அச்சுறுத்தும் நிபந்தனைகள்!
போர்க் குற்றம் இழைத்த இலங்கைக்கு எதிராக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் சில நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், வடக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைத்தல் அல்லது மாகாணசபைத் தேர்தலை நடத்தி ஜனநாயக பொறிமுறைமையை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்படக் கூடும் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைக் கவுன்ஸிலில் இம்முறை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
******************

ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியா காலக்கெடு!
மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் சாதகமான அபிவிருத்தியை எட்ட வேண்டுமென பிரித்தானியா அறிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான தீர்வுகளை இலங்கை முன்வைக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கம் உரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறினால் ஏனைய உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையும் செனல்4 ஊடக ஆவணப்படமும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அழுத்தங்களின் மூலம் பலவந்தமாக விசாரணைகள் நடத்தப்படுவதனை விடவும் இலங்கையாகவே பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தினால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும் என பிரித்தானியா நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
******************

அமெரிக்கா செல்லும் மகிந்த
ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று நியுயோர்க் பயணமாகின்றார்.
ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நியுயோர்க்கில் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு திரும்புவதற்கு முன்னதாக சிறிலங்கா அதிபர் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், வெளிவிவகார அமைச்சர்களையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குறிப்பாக அனைத்துலக அரங்கில் சிறிலங்கா எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தே இந்தச் சந்திப்புகளில் கலந்துரையாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை போன்றோர் குறித்து சிறிலங்கா அரசு கடும் அதிருப்தியடைந்துள்ள நிலையில்- மகிந்த ராஜபக்ச தனது ஐ.நாவுக்கான பயணத்தில் இதுபற்றியும் கலந்துரையாடலாம் என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
******************

பான் கீ மூன் மீது கண்டனம் தெரிவிக்கும் ஸ்ரீலங்கா
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அடிப்படையான இராஜதந்திர வழிமுறைகளை பின்பற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டி, கண்டனக் கடிதம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்த விவகாரத்திலேயே மீண்டும் பான் கீ மூனுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் திரும்பியுள்ளது.
பான் கீ மூனின் நடவடிக்கையைக் கண்டித்து, காட்டமான- கடுமையான வார்த்தைகளினால் ஆன கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி வைக்குமாறு நியுயோர்க்கில் உள்ள, ஐ.நாவுக்கான தனது வதிவிடப் பிரதிநிதிக்கு சிறிலங்கா அரசாங்கம் பணித்துள்ளது.
பான் கீ மூன் மரபுகளுக்கு மாறாக நடந்து கொண்டுள்ளதை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இந்தக் கடிதம் அமைய வேண்டும் என்றும் பாலித கொஹன்னவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பான் கீ மூன் இந்த அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது சிறிலங்காவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்துக்குத் தெரியாமலேயே இந்த விவகாரம் இருட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நிபுணர்குழு அறிக்கையை வெளியிட்ட பின்னர், அடுத்த கட்டம் குறித்து அனைத்துலக சமூகம் முடிவு செய்யட்டும் என்று கூறியிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன், அதற்கு மாறாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி விமர்சித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐ.நா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பான் கீ மூன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ள போதும், நிபுணர்குழுவின் அறிக்கை ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட பின்னரே சிறிலங்கா தூதரகத்துக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
அதற்கு முன்னதாக ஐ.நா முறைப்படி எந்தத் தகவலையும் தரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
******************

அதிகரிக்கும் அனைத்துலக அழுத்தம்!
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள 19வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கையை 16 சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் டுயரசய னுரிரல டுயளளநசசந விடம் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன.
2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதியன்று இலங்கையின் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப, வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது நல்லிணக்கக்குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டும்.
ஏற்கனவே 17 மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின்போது இலங்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நல்லிணக்கக்குழுவின் அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் அந்த அறிக்கையும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையும் 19 வது செயலமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்புக்கள் கோரியுள்ளன.
ஆபிரிக்க ஜனநாயக அமைப்பு, சர்வதேச மன்னிப்புசபை, மனித உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய அமைப்பு, ஆசிய சட்டவாக்க நிலையம்,கெய்ரோ மனித உரிமைகள் கற்கை மையம், பொதுநலவாய மனித உரிமைகள் அமைப்பு, கிழக்கு மற்றும் ஆபிரிக்க மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டம், ஜேர்மன் மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம், இனத்துவேசம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, சர்வதேச கத்தோலிக்க புத்திஜீவிகள் அமைப்பு மற்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு என்பனவே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.
******************

தமிழரை மீண்டும் ஏமாற்ற முனையும் சிங்களம்!
கூட்டமைப்புடனான பேச்சை ஒரு காலவரையறைக்குள் முடிப்பதற்கு இலங்கை அரசு மறுத்துவிட்டது.
பேச்சுக்களை எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் கூறினர்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள தாம் மறுத்துவிட்டதாகவும், 30 வருட காலப் பிரச்சினைக்கு அவசர அவசரமாக நிலையான தீர்வைக் கண்டுவிடமுடியாது என்பதே அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மாதா மாதம் ஒரு நாள் சந்தித்துப் பேசி உருப்படியாக எதையும் செய்ய முடியாது என்பதால், ஐந்து நாளோ பத்துநாளோ தொடர்ச்சியாக அமர்ந்து பேசி இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்போம் என்ற யோசனையை கூட்டமைப்புத் தெரிவித்தது உண்மைதான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காலத்தை இழுத்தடிக்காமல் விரைவில் ஒரு தீர்வைக் காண்பதற்காக ஜனவரிக்குள் பேச்சை முடிக்குமாறு கூட்டமைப்பு அரச தரப்பிடம் வலியுறுத்தியதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
5 நாளோ 10 நாளோ இரு தரப்பினரும் தொடர்ச்சியாக அமர்ந்து மனம்விட்டுப் பேசி உண்மையான அர்ப்பணிப்போடு தீர்வு ஒன்றைக் காண உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால், மூன்று மாத கால அவகாசம் தமக்குப் போதாது என்று கூறிய அரசுத் தரப்பினர், தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சினைகளும் இருப்பதால் அது சாத்தியமானது அல்ல என்று நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசு கூட்டமைப்பு பேச்சில் எட்டப்படும் தீர்வை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் வைப்பதற்கும் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர் என்றும் அறிய வந்தது.
******************

கூட்டமைப்பை எச்சரிக்கும் புத்துஜீவிகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.
கடந்த 60வருடத்திற்கு மேலாக தமிழ் தலைமைகள் சிங்களத் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எவ்வித தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதுவரை 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியிருந்தது.
எனினும் இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்தும், அரசுத் தலைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பை அடுத்தும், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
அரச தரப்பு தீர்வு யோசனை ஒன்றை முன் வைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து அரசுத் தலைவர், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனான சந்திப்பின்போது விளக்கிக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றும் பேச்சுவார்த்தையில் பகுதி பகுதியாகக் காணப்படும் இணைக்கப்பாட்டினை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைப்பது என்றும் அரசுத் தலைவர் சம்பந்தன் சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையிலேயே தற்போது பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பகுதி பகுதியாக இணக்கம் காணப்படும் விடயங்களை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவோ அல்லது அரச தரப்போ ஏற்றுக் கொள்ளவில்லையானால் மீண்டும் பேச்சுவார்த்தை அர்த்தமற்றதாகிவிடும்.
அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளது.
கூட்டமைப்பினர் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் அவர்கள் பங்குபற்ற வேண்டும் என அரச தரப்பு எதிர்பார்க்கிறது.
எனவே, அரசதரப்பு இரு முனைகளுக்கு ஊடாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றது.
கூட்டமைப்பினரையும் இதில் பங்குபற்ற வைக்க முனைகிறது.
இந்த ஒரு நிலையில் பகுதி பகுதியாக பேச்சுவார்த்தையை நடத்த முயலாது கூட்டமைப்பினர் இதுவரை அரசதரப்பின் முன் வைத்ததாகக் கூறப்படும் ஒரு சில யோசனைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் சார்பில் ஒரு முழுமையான அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என தமிழர் தரப்பு கோரி நிற்கின்றது.
இவ்வாறு செய்யாவிடில் பகுதி பகுதியாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஒரு சில முக்கியமற்ற விடயங்களில் அரச தரப்பு ஒத்துழைப்பை வழங்குவதுடன் அதனைக் காரணம் காட்டி கூட்டமைப்பினரை முக்கிய விடயங்களில் விட்டுக்கொடுக்கும் போக்கினை கடைப்பிடிக்குமாறு கோரலாம்.
இல்லையேல் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இறுக்கமான போக்கை கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டை அரச தரப்பு முன்வைக்க இடமுண்டு.
எனவே, கூட்டமைப்பு முழுமையான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும்.
அது இன்னும் ஒரு பேச்சுவார்த்தை பொறியில் கூட்டமைப்பினர் சிக்காதிருக்க வழி வகுக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
******************

தொடரும் காணாமல் போதல்கள்
யாழ். குடாநாட்டில் தொடரும் காணாமல் போதல்களின் பின்னணி பற்றிய குழப்பம் தொடர்கின்றது.
காணாமல் போன இளைஞர், யுவதிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமேயுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் இந்து மதகுரு ஒருவரும், யுவதிகள் இருவரும் காணாமல் போயிருந்தமை தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறுபுறத்தே நல்லூர் ஆலய உற்சவ காலப் பகுதியான கடந்த மாதம் 20 ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமியொருத்தி, இரு வாரங்களின் பின்னர் அநாதரவாக மீட்கப்பட்டுமுள்ளார்.
ஆனால் தன்னை கடத்திச் சென்றவர்கள் பற்றி விபரிக்க முடியாத நிலையில் அவருள்ளார்.
இறுதியாக கடந்த புதன்கிழமை கைதடிப்பகுதியில் 21 வயதான யுவதி காணாமல் போயுள்ளார்.
தனது தாயாருடன் யாழ் நகரப் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவர் காணாமல் போயுள்ளார்.
அதேபோன்றே அண்மை நாட்களில் யாழ். நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கென புறப்பட்டுச் சென்றிருந்த இரு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் மானிப்பாய் மற்றும் நாச்சிமார் கோவிலடி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போன இந்து மதகுரு, நல்லூர் கந்தசாமி கோவிலில் உதவி பூசகராக பணி யாற்றியுள்ளார்.
இவர் யாழ்.நகருக்கு சென்ற நிலையிலேயேய காணாமல்போயுள்ளார்.
******************