Tuesday 20 September 2011

செய்திகள் 20/09


பொங்கியெழுந்த தன்மானத் தமிழன்
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய் என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது.
பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள்.
ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது.
ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது.
3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது.
கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன.
சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.
தற்காலிக முகாம்களில் உள்ள மக்களையும் சிறையில் உள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்வதுடன்  நிபந்தனையின்றிச் சொந்தஇடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் குடியமர்த்த வேண்டும்.
தமிழரின் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறிலங்காப் படையினர் வெளியேற்றப்படுவதுடன் - அத்துமீறிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தினையும் மேலதிகமாகக் கிடைக்கப் பெற்ற ஆவணங்களையும் மற்றும் நேரடிச் சாட்சியங்களையும் போர்குற்றச் சாட்சியங்களாக கொண்டு சிறிலங்கா போர்குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த சகல நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தமிழரின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனிநாட்டை இலங்கைத்தீவிற்குள் அமைப்பதற்கான சுதந்திரமான வெகுசன வாக்கெடுப்பை தமிழர் தாயகத்தில் ஐ.நா.வின் கண்காணிப்பில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளையும் வேண்டுதல்களையும் சிறிலங்கா அரசு ஏற்பதோடு சர்வதேச ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எம் மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இவை மறுக்கப்படும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இலங்கைத்தீவிற்குள் தமிழரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை புலம்பெயர் தேசங்களில் அகதிச் தஞ்சம் கோரிய இலங்கையர்களை திருப்பி அனுப்பபுவதை நிறுத்த வேண்டும் ஆகிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட பொங்குதமிழ் உரிமைமுழக்கப் பேரணியில் பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
காலத்தின் தேவை இது கலங்கிக் கிடக்கும் தமிழர் அல்ல நாம் கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் என விடுக்கப்பட்ட ஒற்றை அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெனீவா வீதிகளில் அணிதிரண்ட தமிழர் பெரும்படை கண்டு சிங்களம் சித்தம் கலங்கிப் போயுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
**************************

தொடரும் அழுத்தம்
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 19 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கையை 16 சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் லாவுறா டியுபுனிலரோவிடம் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன.
2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதியன்று இலங்கையின் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப, வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது நல்லிணக்கக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.
ஏற்கனவே 17ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் போது இலங்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் அந்த அறிக்கையும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையும் 19 ஆவது செயலமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் கோரியுள்ளன.
**************************


எப்போது உரை?
ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று நியுயோர்க் சென்றடைந்துள்ளார்.
அவரை நியுயோர்க் விமான நிலையத்தில் வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணமாக அவர் செல்லாததால், அமெரிக்க அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவை வரவேற்கச் செல்லவில்லை.
சிறிலங்கன் விமானசேவை அதிகாரிகளும், நியுயோர்க்கில் உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரிகளுமே சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் நாள்- வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளதாக சில கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இது சிறிலங்கா அதிபரின் உரை இடம்பெறும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா முன்றலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வை குழப்புகின்ற முயற்சியாகவே கருதப்படுகிறது.
ஆனால் சிறிலங்கா அதிபர் இன்று ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா பொதுச்சபையில் பொதுவிவாதம் நாளையே தொடங்கவுள்ளது.
நாளை 21ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையும், எதிர்வரும் 26ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரையுமே பொதுவிவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை பொதுவிவாதத்தின் போது, பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் நடுநிலைமையின் பங்கு என்ற தொனிப்பொருளில் அரச தலைவர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன.
இந்த விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது தரப்பின் தலையீடுகள் மற்றும் நடுநிலைமை முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
**************************

பதிலுக்கு பொய்யுரைக்க முனையும் ஸ்ரீலங்கா
வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் முப்பதாண்டு கால வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த பிரதிநிதிகளை சந்தித்த ஐ.நாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுமே இவ்வாறு கூறியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, போரின் இறுதிகட்டம் குறித்தே மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கவலைப்படுவதாக குறிப்பிட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, விடுதலைப் புலிகள் முப்பதாண்டு கால மரணங்களுக்கும், அழிவுகளுக்கும் காரணமாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த அடேல் பாலசிங்கமும் ருத்திரகுமாரனும் மேற்கு நாடுகளில் சுதந்திரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
போரில் அழிந்துபோன புலிகளின் இராணுவத் தலைவர்களை பொறுப்புக்கூற வைக்க முடியாது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவிலும், ருத்திரகுமாரன் அமெரிக்காவிலும் இருந்து கொண்டு வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தனிநாடு அமைப்பதற்கான பரப்புரைகளில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் புலிகளின் தலைவர்கள் மீது குற்றசாட்டுகளை சுமத்துமாறு அந்தந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்திடம் சிறிலங்கா பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது மீள்குடியமர்வு, முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, நல்லிக்க ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்று இந்தச் சந்திப்பின்போது மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.
அதனை நிராகரித்த பாலித கொஹன்ன, காணி விவகாரங்கள் மற்றும் இறப்புச்சான்றிதழ் வழங்கும் விவகாரங்கள் குறித்த அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்கா முன்னேற்றமான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டது நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதன் ஆகப்பிந்திய உதாரணம் என்று மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழு அறிக்கையும், சனல் 4 வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படமும் விசாரணகளை ஆரம்பிக்கப் போதுமான சான்றுகள் என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் எடுத்துக் கூறியுள்ளது.
ஆனால் இவையிரண்டும் நம்பகமற்றவை என்று மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பதிலளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சூடானதாக இருந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
**************************

ஆதரவு தேடும் ஸ்ரீலங்கா
நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக ஐநா நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மாலைதீவு, பங்களாதேஸ், அல்ஜீரியா, கியூபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த நடவடிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**************************

தீர்வு நிச்சயம் என்கிறார் டியூ!
எந்தப் பக்கத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் அரசு முன்வைத்த காலைப் பின் வைக்காது என அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசு முனைப்பாகவே இருக்கிறது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை புறக்கணிக்காது அதில் பங்குகொண்டு ஒத்துழைக்க வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் டியூகுணசேகர வலியுறுத்தினார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற 11ஆவது சுற்றுப் பேச்சின் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு காண இரு தரப்பினரும் இணங்கினர்.
ஆனால், அரசுத் தலைவர் நாட்டில் இல்லாத வேளையில் அரசில் இருக்கும் தீவிரவாதப் போக்குடைய அமைச்சர்கள் சிலர் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
கடைசி வரை இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் டியூ குணசேகரவிடம் கேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
தான் ஆரம்பம் முதலே இனப்பிரச்சினைக்கு பேச்சுகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் அப்போதே 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவன் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு தீர்வை முன்வைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கும்.
ஐக்கிய தேசியக் கட்சி முன் வைத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கும்.
இவை இரண்டும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டால் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்யும். இதுதான் அரசியல் நிலைப்பாடு எனம் சுட்டிக்காட்டினார்.
**************************

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரகசியம்?
அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நோக்கம் பற்றிய கருத்துரையை மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தாங்கள் சாதகமாகப் பரிசீலிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுத் தலைவரிடம் தெரிவித்திருக்கின்றார் என நம்பகரமாகத் தெரியவந்தது.
கடந்த 2ஆம் திகதி அலரி மாளிகையில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பில் சம்பந்தர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
சில இராஜதந்திர மட்டங்களின் முன் முயற்சி மற்றும் அழுத்தத்தினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியவருகின்றது.
இந்தச் சந்திப்பின்போதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கான நிலைமைகள் தொடர்பான தங்களது தரப்புக் கருத்து நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் அரசுத் தலைவருக்கு எடுத்துரைத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று அல்லது நாளை கொழும்பில் நடைபெறும்போது இந்த விடயங்கள் குறித்து மற்யை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பந்தன் விளக்கமளிப்பார் எனவும் அறியவந்தது.
**************************

தொடரும் சிங்கள குடியேற்றம்!
முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் இன்று ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்படவுள்ளன என்று கரைதுறைப்பற்று உதவி அரச அதிபர் எஸ்.தயானந்தா தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1960 காலப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள்.
இவர்களில் ஒருதொகுதி மக்கள் அண்மையில் முகத்துவாரம் பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்போது மற்றுமொரு தொகுதி மக்கள் மீளக்குடியேற்றப்படவுள்ளனர்.
இதில் 45 குடும்பங்கள் இன்று புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படவுள்ளன.
ஏற்கனவே வெலிஓயா என்ற பிரதேச செயலக பிரிவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அரசால் முல்லைத்தீவு அரச அதிபருக்கு கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
அவற்றில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன என்று கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 28 வருடங்களுக்குப் பின்னர் குறித்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட போதும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றித் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாக பொய் ஆதாரங்கள் காட்டி இந்தப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
**************************

காமத்துறவி கைது
பிரிட்டனில் உள்ள முன்னணி சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் மீது சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனை லண்டனில் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான பகலஹம சோமரட்ண தேரோ என்பவர் மீது செப்டம்பர் 12 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணின் மீதான இந்த பாலியல் வல்லுறவும், மேலும் மூன்று பாலியல் ரீதியான தாக்குதல்களும் லண்டனில் செல்வந்தர்கள் வாழும் புறநகர் பகுதியான சிஸ்விக் பகுதியில், 1977 ஆம் ஆண்டுக்கும் 1978 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிக்கு, செப்டம்பர் 23 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
**************************

பள்ளிவாசலை இடித்ததை கண்டும் காணாத இஸ்லாமிய அமைச்சர்கள்!
அநுராதபுரத்தில் இடிக்கப்பட்ட தர்காவை மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் உறுதியளிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே ஒழிய, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தர்கா இடிப்பு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரைச் சந்தித்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளில் சிலர், இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படும் என்று கோட்டாபய உத்திரவாதம் வழங்கியுள்ளார் என்ற புரிதலுடன் வெளிவந்திருந்தனர்.
அத்தோடு மீள் கட்டுமானம் பற்றி பேசவேண்டுமானால் முஸ்லிம் மற்றும் பௌத்த பிரதிநிதிகள் மதவிவகார அமைச்சிடம் அவ்விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை என்றும், சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது என்றும் சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்த தர்கா நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.
ஆனால் பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார்.
இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
தர்கா இடிப்புக்கு அவ்வட்டாரத்தின் முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இடித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ள கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்த மாத ஆரம்பத்தில் வரிசையாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
**************************

நிதி வழங்கல் பின்போடப்பட்டது?
சிறிலங்காவுக்கு ஒன்பதாவது கட்ட நிதியை வழங்குவதை அனைத்துலக நாணய நிதியம் பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பதாவது கட்ட நிதியான 2.9 பில்லியன் டொலரை அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்காவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் நிதியை வழங்க முன்னர், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ஒன்பதாவது கட்ட நிதியை விடுவிப்பதற்கு முந்திய பொருளாதார நிலை குறித்த மீளாய்வை அனைத்துலக நாணய நிதியம் இன்னமும் மேற்கொள்ளவில்லை.
டிசம்பர் மாதம் வரை இந்த மீளாய்வை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களுக்கேற்க சிறிலங்கா அரசாங்க நிறுவனங்கள் நடந்து கொள்ளத் தவறியதனாலேயே இந்த நிதியை விடுவிப்பதில் இழுபறிநிலை தோன்றியுள்ளது.
இதனிடையே, எப்போதும் இல்லாதளவுக்கு மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 8.1 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும், இந்தநிலையில் தமக்கு அனைத்துலக நாயண நிதியத்தின் நிதி அவசியமில்லை என்றும் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
அனைத்துலக நாணய நிதியத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி இன்னமும் நான்கு கட்ட நிதி விடுவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
**************************

யாழ் நகரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொள்ளை?
யாழ்நகரப் பகுதியில் ஒரே இரவில் பத்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்நகரின் ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டு வீதி மற்றும் நகர்ப் பகுதி கடைகளில் கொள்ளையர்கள் குழு ஒன்று வர்த்தக நிலையங்களின் பிரதான வாசல் கதவுகளை உடைத்து அங்கிருந்த தொலைபேசிகளையும் பணங்களையும் கொள்ளையடித்துச்சென்றுள்ளது.
நேற்றுக் காலை வழக்கம் போல் வர்த்தக நிலையத்தைத் திறக்க வந்தபோது தமது கடை உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்ததாக வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகமாக உள்ள இடத்தில் இவ்வாறு நடைபெற்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
வர்த்தக நிலையங்களில் இரவு வேளையில் பாதுகாப்பு ஊழியர்கள் நிறுத்தப்படுவதில்லையெனத் தெரிவித்ததுடன் தனியார் வங்கிகள் நிறுவனங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் இருப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
யாழ். நகரில் வாகன விற்பனை நிலையம், அழகு சாதன விற்பனை நிலையம், மருந்தகங்கள், ஹாட்வெயார் மற்றும் புடைவைக்கடைகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இப் பகுதி இராணுவ முகாம்கள் மற்றும் விகாரைகள் கட்சி அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியாக இருந்தும் இச் சம்பவம் இடம்பெற்றது சந்தேகத்தைத் தோற்றுவித்ததாக வர்த்தகர்கள் பலர் கவலை தெரிவித்தனர்.
**************************