அரசின் பேச்சுவார்த்தைக் குழுவில் மாற்றம்
அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இடம்பெறும் பேச்சுவாத்தைக்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் தலைவராக கடமையாற்றிய ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அப்பதவிக்கு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க பதவி விலகியமை அரச தரப்புடனான பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாதெனவும் அவர் தெரிவித்தார்.
ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயார் இல்லை எனத் தெரிவித்து சிரேஸ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************
ஸ்ரீலங்கா விவகார குழுவில் இந்தியாவின் மாற்றங்கள்!
சிறிலங்கா உள்ளிட்ட விவகாரங்களைக் கையாண்டு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி திருமூர்த்தி வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சில் பிராந்திய விவகாரங்களை கவனிக்கும் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரை சிறிலங்கா, பங்களாதேஸ், மாலைதீவு விவகாரங்களைக் கையாண்டு வந்த மேலதிக செயலர் திருமூர்த்தி வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பிரிவைக் கவனிக்கும் பொறுப்பு தற்போது ஹர்ஸ் வர்தன் சிங்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட விவகாரங்களை கவனித்து வந்த திருமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியத்துக்குரிய விடயம் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிறிலங்காவுக்கான பயணங்களை மேற்கொண்டவர் என்பதும் சிறிலங்கா அரசுடனான உறவுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***************
மேற்குலகம் தீர்மானித்தால் தண்டணை நிச்சயம் - சண்டே ரைம்ஸ்!
சிறீலங்கா மீது ஐ.நாவின் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் நல்ல உதாரணங்கள் என த சன்டேரைம்ஸ் தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை தமக்கு ஆதரவாக திரும்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
47 அங்கத்தவர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தற்போது தாய்லாந்து தலைமை தாங்குகின்றது.
இந்த சபையில் அங்கோலா, ஆர்ஜன்ரீனா, பஹாரைன், பெல்ஜியம், பிரேசில், பேர்கினா பாசோ, கமெரூன், சிலி, சீனா, கியூபா, டிபோட்டி, ஈகுடோர், பிரான்ஸ், கபோன், கானா, குவந்தமாலா, ஹங்கொரி, யப்பான், ஜோர்டான், கரிகிஸ்த்தான், லிபியன் அரபு ஜமாகிரியா, மலேசியா, மாலைதீவுகள், மொறீரியானா, மொறீசியஸ், மெக்சிகோ, நையீரியா, நோர்வே, பாகிஸ்தான், போலந்து, கட்டார், கொரியா, மொல்டோவா, ரஸ்யா, சவுதி அரேபியா, செனகல், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், சுவிற்சலாந்து, உகண்டா, உக்ரேன், பிரித்தானியா, சிறீலங்கா, அமெரிக்கா, உருகுவே, சம்பியா ஆகிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன.
ஆனால் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை ஏற்கனவே மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை தான் வரவேற்பதாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
போர் எவ்வாறு நிறைவடைந்துள்ளது என்பதை அறிக்கை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது.
அங்கு பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தேவை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நாளை தனது அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிக்கையை ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நிறைவேற்றுக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, லிபியா விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை சிரியா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் மேற்குலகம் எதிர்பாராத வெற்றியை அடைந்துள்ளது.
எனவே சிறீலங்கா மீதான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் உதாரணம்.
சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தில் 26 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
9 நாடுகளே எதிராக வாக்களித்துள்ளன.
சீனா, கியூபா, ஈகுடோர், காபோன், மலேசியா, மொறிசியஸ், பாகிஸ்தான், ரஸ்யா, பங்களாதேசம் ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்திருந்தன.
ஏழு நாடுகள் வாக்களிக்கவில்லை. நான்கு நாடுகள் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்த சமயத்தில் தான் சிரியா மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையும் காத்திரமானதாகவே அமைந்திருந்தது.
எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவுகளை பெறுவதற்கு சிறீலங்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எதிர்வரும் 16 ஆம் நாள் இந்தியா செல்லும் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ், இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
அவர் இந்தியாவின் ஆதரவை கோருவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
அதன் பின்னர் இந்தோனேசியா செல்லும் பீரீஸ், அங்கு அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
உலக நாடுகளுக்கு விளக்கம் - ஸ்ரீலங்கா
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது
அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இராஜதந்திரிகளின் ஊடாக வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு ஆணையாளர் நாயகம் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
****************
லண்டன் மேதின ஆர்ப்பாட்டத்தில் தமிழர்
தொழிலாளர்கள் தினமான நேற்று லண்டனில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் பெருந்திரளான தமிழர்கள் பங்கேற்றனர்.
மத்திய லண்டன் பகுதியில் பிரித்தானியா வாழ் பல்லின மக்களும் பங்கேற்ற இந்த மேதின நிகழ்வில் ஆயிரக்கணக்கான மேற்பட்ட தமிழர்கள் பங்குகொண்டிருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களோடு மதியம் 1 மணியளவில் ஆரம்பமாகிய இந்த மேதின ஊர்வலம் பிற்பகல் 3 மணியளவில் "ரவல்க்கர் ஸ்குயார்" பகுதியை சென்றடைந்தது.
சர்வதேச மட்டத்தில் சிறீலங்கா மீதான கண்டனங்கள் வலுவடைந்துவரும் நிலையில் அண்மையில் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது.
அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இவ்வருட மேதின ஊர்வலத்தை தமிழர்களுக்கான களமாக பிரித்தானியத் தமிழர்கள் மாற்றி சிறீலங்காவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தும் பேரணியாக்கியிருந்தனர்.
இப்பேரணியில் "போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சனல்4, அல்ஜசீரா, ரைம்ஸ் ஊடகங்களுக்கு நன்றி" "போர்க்குற்றவாளிகளை கைது செய்" "ஈழத்தமிழர்களுக்கு நீதி வழ்ங்கு" "தமிழர்கள் மீதான இன அழிப்பை நிறுத்து" "தமிழ் மக்கள் சுதந்திரத்தை நேசிக்கும் மக்கள்" "ஐ.நாவே சிறீலங்காவின் போர்க்குற்றங்களை தாமதமின்றி விசாரணை செய்" போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகள், பனர்கள் என்பவற்றை தாங்கியவாறுபேரணியில் பெருந்திரளான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்கா அரசின் போர்க்குற்றவாளிகளை நிறுத்த உதவுமாறும், சிறீலங்காவில் நடைபெற்ற இன அழிப்புதொடர்பாக விசாரணைசெய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் கோரும் மனுவிற்கு ஆதரவு தெரிவித்து பல்லின மக்களிடமும் கையொப்பம் பெறும் நடவடிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தமையை காணமுடிந்தது.
*************
கல்வியிலும் குடும்ப அரசியலின் அடாவடி?
கடந்த வருடம் கொழும்பு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற இறுதியாண்டு பரீட்சையில் சிறீலங்கா அரசுத் தலைவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சித்தியடைந்துள்ளதாகவும், நாமலின் தில்லு முல்லுக்களை வெளிக்கொண்டுவந்த மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தியடையவிடாது தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திஸாநாயக்கா துசார ஜெயரத்தின என்ற மாணவனே இந்த தகவல்களை கொழும்பு இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சட்டக்கல்லூரியில் தானும் நாமாலுடன் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவவும் ஆனால் அன்று அங்கு நடைபெற்ற பரீட்சை முறைகேடுகளை ஊடகங்களுக்கும், சிறீலங்கா காவல்துறையினருக்கும் தெரிவித்ததால் தான் மிரட்டப்பட்டும், கடத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னை சித்தியடையவிடாது தடுத்துள்ளனர், தான் பரீட்சைக்கு தோற்றவில்லை என சட்டக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது என துசார தெரிவித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த நெருக்கடிகள் தொடர்பில் சிறீலங்காவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை மேற்கொண்டபோதும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
அதன் பின்னரே ஆசிய மனித உரிமைகள் அமைப்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
***************