Saturday 21 May 2011

செய்திகள் 21/05


இராணுவ முகாம் தலைமைத்துவ பயிற்சி தொடரும் -அரசு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான மாவைசேனாதிராசா நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்த பொது நிர்வாக உள்ளூராட்சி அதிகாரசபைகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்தினவிடம் இந்தக் கோரிக்கையை நேரில் வலியுறுத்தி உள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகள் கண்டி, ரன்தம்பே இராணுவ முகாமில் வைத்து வழங்கப்படவுள்ளது.
இந்த முகாமில் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவென யாழ். மாவட்டத்தில் இருந்து 26 ஆசிரியர்கள் செல்கின்றனர்.
மேலும் 6 பேர் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இருந்து செல்கின்றனர்.
பயிற்சிகளை வழங்குவது தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இவர்களுக்கு கடந்த ஆண்டே வழங்கப்பட்டிருந்தன.
சுமார் 1,750 தமிழ் மாணவர்களுக்கு இந்த வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அவர்களில் 1,300 பேருக்கு ரன்தம்பே இராணுவ முகாமில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
ஏனைய சுமார் 450 பேருக்கு காவல்துறை நிலையங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே பல தரப்புகளில் இருந்தும் இந்தப் பயிற்சிக்குக் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தலைமைத்துப் பயிற்சி அளிப்பதை தாங்கள் வரவேற்பதாகவும் ஆனால் அப்பயிற்சிகள் கல்வி அமைச்சின் மூலமோ, பொது நிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் மூலமோ வழங்கப்படவேண்டும் அதுவே உண்மையான தலைமைத்துவப் பயிற்சியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
****************
இராணுவ மயமாகும் ஸ்ரீலங்கா!
சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இன்னொரு ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஆயுதப்படைகளை மீள்நிலைப்படுத்தும் திட்டம் ஒன்றை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நடைமுறைப்படுத்தவுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 90 இராணுவ முகாம்களும், 54 சிறப்பு அதிரடிப்படை முகாம்களும் சிறிலங்கா முழுவதும் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு இராணுவ முகாமும் தலா 1000 படையினரைக் கொண்டதாகவும், சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் ஒவ்வொன்றும் தலா 150 படையினரைக் கொண்டதாகவும் அமைக்கப்படவுள்ளன.
அரசியல் நோக்கம் கருதி அமைக்கப்படும் இந்த முகாம்களின் அடிப்படை நோக்கம் அரசுக்கு எதிரான கிளரச்சிகள் தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்வதாகவே இருக்கும்.
பனாகொட இராணுவ முகாமே இவற்றின் அரசியல் கண்காணிப்புக்கான தலைமையகமாக இயங்கும்.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கவசவாகனங்கள், நகரும் காலாற்படையினரை உள்ளடக்கிய ஒரு பிரிகேட் படைப்பிரிவும் உருவாக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் தற்போது மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேவேளை சில இடங்களில் மேலதிகமாக, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒருகட்டமாக யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, அங்குள்ள படையினருக்கு தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
**************
தடுமாறும் ஸ்ரீலங்கா?
இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்தவாரம் புதுடெல்லிக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மற்றும் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களின் முடிவில் 11 அம்சங்களை உள்ளடக்கிய கூட்டறிக்கை ஒன்றையும் அவர் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சிறிலங்காவில் சிங்களத் தேசியவாத சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் பீரிஸ் என்றும் அவர் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாகவும் தேசப்பற்று தேசிய இயக்கம், ஜேவிபி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
ஐதேகவும் இதனை கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தநிலையிலேயே, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், இந்தியப் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தியாவுடன் நடத்தப்பட்டதெல்லாம் வெறும் கலந்துரையாடல் தான் எனவும் உடன்பாடுகள் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
*************
சீனாவுக்கு பீரிஸ்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை மறுநாள் திங்கட்கிழமை சீனாவுக்கு இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
,நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கிலேயே அவர் சீனாவுக்கான பயணத்தை மேறகொள்ளவுள்ளார்.
அமைச்சர் பீரிசின் சீனப் பயணத்துக்கான அடிப்படைக் காரணம் .நா நிபுணர்குழுவின் அறிக்கையே என்றும், இது தொடர்பாக கலந்துரையாட வருமாறு சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சி அழைப்பு விடுத்துள்ளதாவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை மட்டுமே சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை அவர், சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்திக்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு நடக்குமா என்பது பற்றி இரு நாடுகளினதும் அதிகாரிகள் இன்னமும் உறுதி செய்யவில்லை.
இதற்கிடையே, சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியின் அழைப்பின் பேரில்- அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எதிர்வரும் 23, 24ம் நாட்களில் பெய்ஜிங்கில் தங்கியிருப்பார் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜியாங் யூ அறிவித்துள்ளார்.
***************
புதிய ஆணைக்குழுக்கள்
புதிதாக நான்கு ஆணைக்குழுக்களை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழு ஆகியனவே கடந்த 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசுத் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளன.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக பொதுச் சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக கலாநிதி தயாசிறி பெர்ணாந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக பாலித எம். குமாரசிங்க திருமதி சிறிமாவோ .விஜேரத்ன எஸ். சி. மன்னப்பெரும ஆனந்த செனவிரத்ன என். எச். பத்திரன, எஸ். தில்லைநடராஜா, எம்.டி.டபிள்யூ. ஆரியவன்ச, . மொஹமட் நஹியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிவான் பிரியந்த ஆர்.பி. பெரேராவை தலைவராகக் கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் உறுப்பினர்களாக திருமதி ஜெஸீமா இஸ்மாயில், டி.. ஆனந்தராஜா, டொக்டர் பேர்னாட் டி சொய்சா, ஆனந்த மெண்டிஸ் ஆகியோர் உள்ளனர்.
நிதி ஆணைக்குழுவுக்கு ஆரியரத்ன ஹேவகே தலைமை தாங்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
*****************
மூவரணியின் நிலை என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை செல்லவிருந்த இந்திய மூவரணியின் பயணம் நிறுத்தப்பட்டு விட்டதாகப் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் இந்த வார ஆரம்பத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து மூவரணியின் பயணம் கைவிடப்பட்டுள்ளது.
மூவரணியில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சுச் செயலர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இலங்கை இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நல்லுறவு ஆகியன தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக மாத இறுதியில் இந்த மூவரணி கொழும்பு செல்ல இருந்தது.
இனப்பிரச்சினை தீர்வு, அவசர காலச் சட்ட நீக்கம், மீனவர் பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பன குறித்து ஆராயவே மூவரணி முதலில் திட்டமிட்டிருந்தது.
குறிப்பாக நிபுணர் குழு அறிக்கையின் பின்னரான களச் சூழலில் இந்தியாவின் உதவியை இலங்கை அதிகம் எதிர்பார்த்திருந்தது.
எனினும் அமைச்சர் பீரிஸின் பயணத்தின் போதே இந்த விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டு விட்டதாக புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேற்கொண்டு எடுக்க வேண்டிய நகர்வு குறித்து இனிமேல் இலங்கை தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய நிலைப்பாடு என்ன என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.
அதற்கான இலங்கை அரசின் பதிலை பொறுத்தே இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.
எனவே இப்போதைக்கு இந்தியக் குழு இலங்கை செல்ல வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று வெளிவிவகார அமைச்சருடன் நெருங்கிய தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
****************