விசாரணை நடக்குமா?
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆகிய கிளை அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறில்லாத போது ஸ்ரீலங்கா அரசு கோரிக்கை விடுத்தால் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முதன்மை அதிகாரம் ஸ்ரீலங்கா அரசிடம் காணப்படுகின்றது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் விசாரணை நடத்தும் அதிகாரம் உள்நாட்டு அரசுகளுக்கே வழங்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
அவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா தொடர்பான பல போர்க் குற்ற ஆதாரங்களைப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மனித உரிமைக் கவுன்சிலுக்குச் சமர்ப்பித்துள்ளன.
*************
முல்லைத்தீவில் தொடரும் ஆக்கரமிப்பு!
முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு சிங்கள மீனவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து வழக்குத் தொடரப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மக்களிடம் உறுதியளித்துள்ளனர்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.என். சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.
கரைவலைப்பாடு மீன்பிடி பெரும்பாலும் தமிழ் மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பான்மையின மீனவர்கள் எதுவித தடையுமின்றி கரைவலைப்பாடு மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் இன்றளவில் சுமார் 10ஆயிரம் பெரும்பான்மையின மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் வரையிலான கிலாகத்தை, மாதிரிக்கிராமம், உப்புமாவெளி, தூண்டாய், அலம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக் கேணி ஆகிய பிரதேசங்களில் தமிழ் மீனவர்கள் குடியேற்றப்படவும் இல்லை மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவும் இல்லை.
ஆனால் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின சிங்கள மீனவர்கள் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் மீனவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
நந்திக்கடலில் சிப்பாய்களும் சிங்கள மீனவர்களும் இறால் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மண்ணில் பிறந்த தமிழ் மீனவர்கள் செய்வதறியாது கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கின்றனர்.
முல்லைத்தீவு மக்கள் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் அல்லது வழக்குத் தொடரப்படும் என்று கூறினர்.
************
ஐதேகவில் தொடரும் குழப்பம்?
நூறு அங்கத்தவர்களைக் கொண்ட மாற்று செயற்குழு வொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளதுடன் அதன் தலைமைப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த மாற்று செயற்குழுவின் முதலாவது அமர்வு அடுத்த வாரம் இடம்பெறுமென்றும் தெரிய வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த மாற்று செயற்குழுவில் மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் புத்திமான்கள் ஆகியோர் இடம்பெறுவதாக செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்று செயற்குழு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு, மகளிர் அணி ஆகியவை தொடர்பாக கூடி ஆராய்வதுடன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயற் குழுவை நியமிக்கும் போது தனக்கு விருப்பமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதையடுத்தே இந்த பிரச்சினை ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர் இதனால் கட்சி பிளவுபடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
*************
நீதிமன்றத்தை புறக்கணிக்கும் ஸ்ரீலங்கா அரசு
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் கட்டாய தலைமைத்துவ பயிற்சியளிக்கும் திட்டம் திட்டமிட்டபடி இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுள் 80 வீதத்திற்கும் அதிகமானோர் நேற்று மாலை வரை, பயிற்சி இடம்பெறும் நிலையங்களுக்கு வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு உயர்தர பரிட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு 28 இராணுவ முகாம்களில் முன்றுவாரகால தலைமைத்துவ வதிவிடப் பயிற்சியை அளிப்பதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்தது.
அதற்கான அனுமதிப்பத்திரங்களும் மாணவர்களுக்கு ஏலவே அனுப்பிவைக்கப்பட்டன.
இராணுவ முகாம்களில் நடத்தப்படுகின்ற கட்டாய தலைமைத்துவ பயிற்சியுடன் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடநெறியொன்றும் கற்பிக்கப்படும்.
பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்டோருக்கு இரண்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பல்கலைக்கழக அனுமதியின் போது அந்த சான்றிதழ்கள் இரண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று உயர்கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்நடவடிக்கையினை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடிப்படை உமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்தது.
இம்மனுவை கடந்த வெள்ளிக்கிழமை பசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இப்பயிற்சியை ஒருவாரகாலத் திற்கு ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்துமாறு சட்டமா அதிபரை பணித்திருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே 3 வார கால பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
**************
வழக்கை கண்காணிக்க நிபுணர்?
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக சர்வதேச நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இலங்கை செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் அரச சட்டத்தரணியான மார்க் டிரவல் என்பவரே இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
உலகம் முழுவதும் இதுபோன்ற சர்ச்சை மிக்க வழக்குகளை ஆய்வு செய்வதற்காக பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களுக்கு விஜயம் செய்துள்ள மார்க் டிரவல் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் எனக் கருதப்படுகின்றது.
மலேஷியாவின் முன்னாள் பிரதி அமைச்சரான அன்வர் இப்ராஹிமுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதும் டிரவல் அங்கு சென்று ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
************
மீளாய்வு குறித்தே ஆலோசனை, நீக்கவல்ல?
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எவ்வித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறினார்.
அவசரகாலச் சட்டத்தின் எந்த சரத்துக்களை நீக்கலாம் எவற்றை மேலும் தக்க வைத்திருக்கலாம் என்பது குறித்து தாம் ஆராய்வதாகவும் என அவர் கூறினார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இந்தியா கடந்த 16 ஆம் திகதி கோரியமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது.
6 மாதத்திற்கு ஒரு தடவை அது நாடாளுமன்றத்தால் நீடிக்கப்பட்டது.
எனினும் 1982 ஆம் ஆண்டு இந்த நீடிப்பை கோரும் சரத்து நீக்கப்பட்டு நிரந்தர சட்டமாக ஏற்படுத்தப்பட்டது.
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்ளென சந்தேகிக்கப்படுவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதை பயன்படுத்தியது.
இதேவேளை, 2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவசரகால நிலையை அரசாங்கம் மீண்டும் கொண்டுவந்தது.
அப்போதிருந்து அவசரகால நிலை, நாடாளுமன்றத்தால் மாதாந்தம் நீடிக்கப்படுகிறது.
கடந்த வருடம் அதன் சில விதிகளை அரசாங்கம் தளர்த்தியது.
யுத்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அவசரகாலநிலை நீடிப்பு எதிராக வாக்களித்தது.
யுத்தம் முடிந்தபின் ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்து வருகின்றன.
*******************