Sunday, 29 May 2011

செய்திகள் 29/05


ஸ்ரீலங்காவை கலக்கும் காணொளி

சரணடைந்த தமிழ் மக்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி நாளை முப்பதாம் திகதி ஆரம்பமாகும் .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாக .நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் .நாவின் சிறப்பு பிரதிநிதி கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் இந்த காணொளியை அதன் உண்மைத்தன்மை தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து சமர்ப்பித்த ஆதரங்களுடன் நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.
*************

அவசர டில்லிப் பயணம்?
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை காலை புதுடில்லி பயணமாகிறார்.
அவர் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி உட்பட உயர்மட்டத்தலைவர்களையும், ஏனைய கட்சித்தலைவர்களையும் சந்தித்துப் பேசவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.
உள்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
************

அமெரிக்கா எச்சரிக்கை!

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த தகவலை ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினதும் மேற்குலக நாடுகளினதும் அழுத்தங்களின் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கமானது யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
எந்தவொரு நீதித்துறைசார் அதிகாரங்களையும் கொண்டிராத அரசாங்க அதிகாரிகளுக்கு பரிந்துரை மட்டும் வழங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, யுத்தக் குற்றச்சாட்டுகள் உள்ளடங்கலாக இலங்கைக்குள் இடம்பெற்றுள்ள முக்கிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேங்கிக் கிடக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை அலசி ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
நியமிக்கப்படவுள்ள இக்குழுவானது நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிபடைந்த 2009-ம் ஆண்டில், ஸ்ரீலங்காப் படைகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மீறல்களை நிரூபிக்கத்தக்க வகையில் நம்பகமான ஆய்வொன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் தலைமையின் கீழ் மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.
இவை தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் செய்யப்பட்ட பொய்யான பரப்புரைகள் எனக் குற்றம் சாட்டியுள்ள அரசாங்கம், .நாவின் வல்லுநர் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்காப் படைகள் பொதுமக்களை குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டன என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள .நா. பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் ஸ்ரீலங்காவுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு வழங்குவதற்கு சாத்தியபாடுகள் மிகக் குறைந்ததாகக் காணப்படுவதாக பெரும்பாலான இராஜதந்திரிகள் எதிர்வு கூறுகின்றனர்.
*************

ஐதேகவின் எதிர்ப்பு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடியொட்டி இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கப்போவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டால் அவற்றை மாகாண நிர்வாகங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிச்சக்திகள் காவல்துறை நிர்வாகத்தில் ஊடுருவி மீண்டும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தவும் கூடும் என்று கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் காவல்துறை அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுவதைக் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமானால், இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளலாம்.
அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதால், நாட்டைப் பயங்கரவாத நாடாகவே உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையை நீக்கி, உடனடியாக இந்தச் சட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்றும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
***********

ஐரோப்பிய ஒன்றியக் கலந்துரையாடல்

போர் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டனரா என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் நாள் மாலை 3.00 மணியில் இருந்து 6.30 மணிவரையிலும் இடம்பெறும் கலந்துரையாடலில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி தலைமையில் இடம்பெறும் இந்த கலந்தரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேரி கிறிஸ்ரீன், சோரன் சென்டகாhட் ஆகியோரும், அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் உட்பட பல அனைத்துலக அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா மீதான தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளதால், புலம்பெயர் தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துவருமாறும், அறிக்கைகளை அனுப்புவோர் அதனை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர;.
************

தோற்றுப் போன ஸ்ரீலங்கா?

.நாவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் இருந்து வலுவான ஆதரவை ஸ்ரீலங்காவினால் பெற முடியாது போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைச் சமாளிக்க அணிசேரா நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இறங்கியிருந்தது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட மாநாட்டை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று பாலி தீவு சென்றிருந்தது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, ஸ்ரீலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட இந்தக் குழுவினர் அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை, குறிப்பாக .நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களைச் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் இவர்களால் அணிசேரா நாடுகளிடம் தமது கருத்தை வலியுறுத்தி .நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு தருவதான வாக்குறுதியைப் பெற முடியாது போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் .நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெனிவா சென்றுள்ள மகிந்த சமரசிங்க தலைமையிலான ஸ்ரீலங்கா அரசின் உயர்மட்டக்குழு அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
**********