எதிர்ப்பவர்களிடம் கேள்வியெழுப்பும் மகிந்த!
குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும், சில நபர்கள் தங்களது சுய லாபத்தைக் கருத்திற் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச குடும்ப நல தின நிகழ்வுகள் அலரி மாளிகையில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சதித் திட்டங்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சகலவிதமான முரண்பாடுகளையும் களைந்து அனைவரும் நாட்டைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
30 ஆண்டுகளாக நாட்டில் நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்விதமான சாட்சியுமின்றி ஸ்ரீலங்காவுக்கு எதிராக சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
*****************
குழப்பிய அரசின் தொடரும் குத்துக்கரணங்கள்!
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில முகவர் அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பைப் பயன்படுத்தி சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்காவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனைப்பு காட்டி வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ஆழமாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்காவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் வலுவிழக்கக் கூடுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
**************
மகிந்தவின் இரட்டை நிலைப்பாடு?
தென்னிலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அன்றைய அரசுக்கு எதிராக ஜெனிவா சென்ற மகிந்த ராஜபக்ச, இன்று தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் காணாமல்போனது தொடர்பில் வேறு ஒரு நாட்டிடம் முறையிடுவதை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜப்பான் நாட்டின் அனுசரணையுடன் இயங்கும் ஐ.ஆ.யு.னு.சுஎன்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ கடந்த 24 ஆம் நாள் கொழும்பில் இருந்து வெளிவரும் ராவய பத்திரிகைக்கு அவர் வழங்கிய நீண்ட நேர்காணலின் போது இந்தக் கருத்தை வெளியட்டுள்ளார்.
இரு தரப்பும் மரபு வழியிலான போரிலேயே ஈடுபட்டிருந்தனர், எனவே அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஒரு புரிந்துணர்வை அடைவது நிபுணர் குழுவுக்கு கடினமானதாக இருந்திருக்கலாம்.
சிறீலங்கா அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டும் தெரிவிக்கவில்லை.
பல மனிதநேய அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. அங்கு மனிதநேயப் பணிகள் தடுக்கப்பட்டுள்ளன, வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மரபுவழியிலான போரின்போது ஜெனீவா சட்டவிதிகள் பின்பற்றப்படவேண்டும்.
ஆனால் சிறீலங்காவில் அது பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பிலான விசாரணைகள் அவசியமானது.
இது நாட்டின் இறைமையை பாதிக்கும் விசாரணை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இனஅழிப்பு மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக இந்த சட்டம் இரண்டாம் உலகப்போரின் பின்னர் கொண்டுவரப்பட்டது.
ஐ.நாவினால் எடுக்கப்படும் பல முடிவுகள், அமெரிக்காவின் நலன் சார்ந்ததாகவே இருப்பது வழக்கம்.
ஆனால் தற்போது ஐ.நாவை தூற்றும் மகிந்தவும், வாசுதேவாவும், 1989 ம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டு ஐ.நாவின் படி ஏறியவர்கள் தான். நாம் வரலாற்றை மறந்துவிடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
போரின் போது மனிதாபிமான அமைப்புக்களை வெளியேறுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
ஊடகவியலாளர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே தான் வன்னியில் நடைபெற்ற போர் என்பது சாட்சிகள் அற்ற போர் என அழைக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
***************
பிளவுபடுத்த சூழ்ச்சி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி அதில் ஒரு பிரிவினரைத் தம்முடன் இணைத்துக்கொள்ள அரசு சூழ்ச்சி செய்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதத்தின் போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
அரசு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக மாறுபட்ட கருத்தை வெளியிட்டு வருகின்றது.
இந்தியாவில் ஒன்றைக் கூறுகின்றது. அமெரிக்காவில் இன்னுமொன்றைக் கூறுகின்றது.
இந்தியாவுக்குப் போய் 13 ஆவது அரசியல் அமைப்புக்கும் அப்பால் சென்று கூடுதலான அதிகாரங்களை வழங்குவோம் என்று உறுதியளிக்கின்றது.
ஆனால் இங்கு வந்து வேறு ஒன்றைக் கூறுகின்றது.
ஆளும் தரப்பினர் மாறுபட்ட கருத்துகளைக் கூறுகின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.
ஆனால், அரசு தமிழ்த் தேசியக் கூட்டணியை இரண்டு மூன்று துண்டுகளாகப் பிரித்து அதில் ஒரு பிரிவினரை அரசுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டு செயல்படுகின்றது.
இது ஆரோக்கியமாக அமையாது.
உடனடியாக அவசரகாலச்சட்டம் ரத்துச் செய்யபட வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்தார்.
*******************
மீண்டும் ஏமாற்ற வேண்டாம் - மனோ
போர் முடிவடைந்தவுடன் உடனடியாகவே ஸ்ரீலங்கா அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்ற எண்ணத்தை அப்போது ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் வெளியிட்டு பிரச்சாரப்படுத்தியதனூடாக நாட்டின் தமிழ் மக்களை அவர் தவறாக வழிநடத்தி உள்ளார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளராக முன்னர் இருந்த கொண்டலிஸா ரைஸ் மனித உரிமைகளினதும் சுதந்திரத்தினதும் காவலன் என்று மனோ கணேசனை முன்னர் ஒரு முறை பாராட்டியிருந்தார்.
போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் பிளேக், 13வது திருத்தச் சட்டம் பற்றியே உபதேசித்து வந்தார்.
அவர் சென்னைக்கு விரிவுரை ஒன்றிற்காகச் சென்றிருந்த போது கூட இலங்கைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் 13வது திருத்தச் சட்டத்தையே அரசியல் தீர்வாக வலியுறுத்தினார்.
அன்று அவர் 13வது திருத்தச் சட்டத்திற்குமதிகமான அதிகாரங்கள் பற்றி உத்தரவாதம் வழங்கி இருந்தார்.
ஐக்கிய அமெரிக்கா போருக்கு ஆதரவளிப்பதனை நியாயப்படுத்தும் நோக்கிலேயே இந்த 13வது திருத்தச் சட்டம் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார்.
இவ்வளவு அழிவுகளும் நடைபெற்று போரும் முடிவடைந்த பின்னரும் கூட இந்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக் கூடக் காணவில்லை.
இப்போது இன்னொரு பிரச்சாரப் பணி நடைபெற்று வருகிறது. இது புலம் பெயர்ந்த தமிழர்களைச் சாந்தப்படுத்துவதை நோக்காகக் கொண்டது.
போருக்கு நிபந்தனை எதுவுமற்ற ஆதரவை வழங்கியவர்களுக்கு இலங்கைத் தமிழ் சமூகம் குறித்த பொறுப்புணர்வு ஒன்று இருத்தல் அவசியம்.
ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதில் தீர்மானகரமாகச் செயலாற்றுநுவதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் எவரும் திருப்பித் தரப் போவதில்லை.
ஒரேயொரு சாத்தியமான வழி மட்டுமே இப்போது உள்ளது. அது தான் ஒரு நியாயமான அரசியல் தீர்வு.
இது தொடர்பில் சர்வதேச சமூகம் ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் தீர்மானகரமான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.
ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தனது முன்னைய உபதேசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் இதுவே.
அவர் மீளவும் ஒரு முறை தமிழ் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடாது எனவும் மனோ கணேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
***************
ஏமாற்றும் அரசு - சரவணபவன்
ஆரம்ப கட்டங்களிலே கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையாயின் தொடரும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்களில் எட்டப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பமுடியுமா? என நேற்று நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசர காலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவசர காலச் சட்டம் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துகிறது.
பிரதம நீதியரசர் அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டோருக்கு மேல் வழக்குத் தொடரும்படியும் ஏனையோரை உடனடியாக விடுதலை செய்யும்படியும் கட்டளையிட்டிருந்தார்.
சட்டமா அதிபரின் அனுமதி இன்னமும் கிடைக்காத நிலையில் விடுவிக்கப்பட வேண்டிய பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந் நாட்டின் பிரதம நீதியரசரின் கட்டளையைக் கூட உதாசீனம் செய்யுமளவுக்கு இந் நாட்டில் ஐனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
****************