Tuesday, 24 May 2011

செய்திகள் 24/05


இனவழிப்பு படையின் கருத்தரங்கை புறக்கணிக்குமாறு கோரிக்கை

சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள போர்க் கருத்தரங்கிற்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை நிராகரிக்குமாறு நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சட்டரீதியற்ற முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதை சட்டரீதியாக அங்கீகரிக்கச் செய்யும் வகையிலேயே இந்தக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாகவும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
எனவே இந்தக் கருதரங்கிற்கான அழைப்பை நிராகரிக்குமாறு அரசாங்கங்களிடம் கோருவதாகவும் அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம்- சிறிலங்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு சிறிலங்கா அரசாங்கம் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் பற்றிய உண்மைகள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையிலேயே கிளர்ச்சி முறியடிப்பில் முன்மாதிரியானவர்கள் என்ற சிறிலங்கா காட்டிக் கொள்வதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
போர்க்குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்கும் நோக்கிலேயே இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
************

கலந்து கொள்ளவுள்ளோர் பட்டியலை வாசிக்கும் இனவழிப்புப் படைத் தளபதி!
சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள போர் அனுபவப் பகிர்வுக் கருத்தரங்கில் 42 நாடுகளின் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ம் நாள் தொடக்கம் ஜுன் 2ம் நாள் வரை கொழும்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கு தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இந்தக் கருதரங்கில் 42 நாடுகளின் 300 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் எனவும் இராணுவ அதிகாரிகளை அனுப்பாத நாடுகள் கொழும்பிலுள்ள தமது தூதுவர்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா அதிகபட்சமாக ஆறு இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பவுள்ளது.
பங்களாதேஸ் இராணுவத்தைச் சேர்ந்த லெப்.ஜெனரல் ஒருவரும், பாகிஸ்தானிய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஒருவரும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கேணல் தர அதிகாரிகள் மூவரும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.
அமெரிக்காவின் சார்பில் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கலந்து கொள்கிறார்.
பிரித்தானியா, ஸ்லோவாக்கியா, ருமேனியா, பிரான்ஸ், ஜப்பான், செக்குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.
ஆனால் பிரான்ஸ் தூதுவரும், அவுஸ்ரேலிய தூதுவரும் இந்தக் கருத்தரங்கில் தமது நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளனர் எனவும் ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்குமாறு மனிதஉரிமை அமைப்புகள் பரப்புரை செய்தன.
ஆனால் அந்தப் பரப்புரைகள் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன என்றும் இதனால் கருத்தரங்கிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பியதாகவும் அவற்றில் 42 நாடுகள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதை உறுதி செய்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
*************
அரசே பேச்சைக் குழப்பும்!
தற்போது நடைபெற்று வரும் பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்ப வேண்டிய தேவையில்லை. அரசாங்கமே அதனைச் செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கடும் போக்காளர்கள் அதனைச் செய்து முடிப்பர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
திருகோணமலை அறிவோர் அரங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை நகரசபை மண்டபத்தில் - இலங்கை இனமுரண்பாட்டின் பின்புலத்தில் அபிவிருத்தி அரசியல் வெளிநாட்டு உதவிகள் - என்ற நூல் வெளியீட்டில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் நிதானமாக காய்களை நகர்த்த வேண்டிய காலமிது. இந்த விடயத்தில் நாம் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
*************

யுத்த வெற்றியை கொட்டாடுவது எப்படி - சஜித்?
விடுதலைப்புலிகளுடனான யுத்த வெற்றிக்குத் தன்னையே அர்ப்பணித்து முழுமூச்சாகச் செயற்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு யுத்த வெற்றியைக் கொண்டாடுவது கேலிக்கூத்தான செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயம் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ நீதிமன்றுக்கு வந்திருந்து, வழக்கு விசாரணையை அவதானித்தார்.
அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு முகம் கொடுத்துள்ள சவால்களை சமாளிக்க அனைவரும் ஐக்கியப்பட வேண்டும் எனவும் நாட்டை மீட்டுக் கொடுத்தவரை சிறையில் அடைத்துவிட்டு, ஐக்கியப்பட முடியாது என்றும் தெரிவித்தார்.
.தே.கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸவுடன் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மற்றும் சரத் பொன்சேகா சார்பில் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
************
இரட்டை வேட அரசியலில் தடுமாறும் ஐதேக?
நாட்டில் அவசரகால சட்டம் படிப்படியாக நீக்கப்படவேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அவசரகால சட்டத்தை படிப்படியாக நீக்கி ஜனநாயகத்தை அரசாங்கம் நிலைநாட்டவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்னவென்று விபரிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
அவசரகால சட்டத்தையும் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் உடனடியாக ரத்துச் செய்யவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.
இந்நிலையில் அவசரகால சட்டம் விரைவில் படிப்படியாக அகற்றப்படவேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசரகால சட்டத்தை நீக்கி ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.
இது தொடர்பில் ஆராயப்படுவது அவசியமாகும் எனத் தெரிவித்த அவர் சர்வதேச மட்டத்தில் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்படவேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை மிக விரைவில் மீள்குடியேற்றவேண்டும் என்பதுடன் மீள்குடியேற்றப்படும் மக்களுக்க்கான வசதிகளை செய்துகொடுக்கவேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று வடக்கு மக்கள் விடயத்தில் அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டியது விரைவான தேவையாகவுள்ளது.
சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டியது அவசியமாகும்.
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களை தவிர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
***********

திட்டமிட்ட காடு அழிப்பிலும் ஈடுபடும் இனவழிப்பு அரசு!
தமிழ் மக்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட நாசகார வேலைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு பிரதேசத்தில் 400 ஏக்கர் காடுகளை அழித்து மரங்களை விற்பனை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சர் எம் சந்திரசேனா தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 இயந்திரங்களின் உதவிகளுடன் மரங்கள் வெட்டப்பட்டு, அமைச்சரின் ஆட்களினால் மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இதற்கான அனுமதிகளை வடமத்திய மாகாண சிறீலங்கா காவல்துறை அதிகாரி வழங்கியுள்ளார்.
மரங்களை வெட்டும் நபர்களுக்கான பாதுகாப்புக்களை மடுப்பகுதியில் உள்ள சிறீலங்கா படையினர் வழங்கி வருகின்றனர்.
அனுராதபுர மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த குழுவினரின் நடவடிக்கைகளை கண்டறிந்து பெருமளவான மரங்களை கைப்பற்றியபோதும், அமைச்சர் சந்திரசேனா தலையிட்டு அதனை தடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனத்துறை அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகம் அழித்துவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
***********