தமிழினப் படுகொலைநாள்
இன்று தமிழினப் படுகொலை நாள் உலகத் தமிழர்களால் நினைவு கூரப்படுகின்றது.
முள்ளிவாய்காலில் ஸ்ரீலங்கா இனஅழிப்பு படைகளால் பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொடூரமாக கொல்லப்பட்ட நாளை இன்று உலகத் தமிழினம் நினைவு கூருவதுடன் நீதி வேண்டி ஒன்று கூடுகின்றது.
நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது ஸ்ரீலங்கா இனவாத அரசின் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என வேறுபாடின்றி, வகை தொகையின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை இனியும் இனவழிப்பு நடத்தப்படுவதை தடுக்க கோரி இன்று உலக நாடுகளின் தலைநகரங்கள் எங்கும் இனமானத் தமிழர்கள் நீதி வேண்டி ஒன்று கூடுகின்றார்கள்.
இந்த ஒன்று கூடல் ஐநா தலைமையங்களான நியூயோர்க்கிலும், ஜெனிவாவிலும் இடம்பெறும் அதேவேளை லண்டன் உட்பட உலகப் பெருநகரங்கள் அனைத்திலும் இடம்பெறவிருக்கின்றன.
இன்று மாலை 4 மணி முதல் லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் நடைபெறும் ஒன்று கூடலிலும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடத் தயாராகி வருகின்றார்கள்.
இதற்கான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனன.
இன்றைய நினைவு கூரல் நிகழ்வுகள் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழில் நேரடி அஞ்சல் செய்யப்படும் அதேவேளை ஆத்ம சாந்தி வேண்டி நாமும் உலகத் தமிழர்களுடன் பிரார்த்திக்கின்றோம்.
*************
மீள்குடியமர்த்தப்படாத லட்சக்கணக்கான தமிழர்கள் - ஐநா
இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதும் இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் மீளக்குடியமர்த்தப்படாமலேயே இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
2011 மே மாதம் 13ஆம் திகதி நிலவரப்படி, உள்ளூரில் இடம்பெயர்ந்த குறைந்தது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 888 பேர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசின் கூற்றுப்படி இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இடைத்தங்கல் அல்லது நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார்கள்.
எனவே அவர்கள் அனைவரையும் மீளக்குடியேற்றி விட்டோம் என்றே அரசு கணக்குக் காட்டுகிறது.
ஆனால், இடைத்தங்கல் மற்றும் நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறியவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவர்களது வீடுகளுக்கோ விவசாய நிலங்களுக்கோ திரும்பவில்லை என்று ஐ.நா. கூறுகின்றது.
அவர்கள் தமது சொந்த இடங்களில் இருந்து நீண்ட தொலைவில் உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் தங்கியிருக்கின்றனர்.
இவ்வாறு வவுனியாவில் 18ஆயிரத்து 589 பேரும் மன்னாரில் 4ஆயிரத்து 928 பேரும் யாழ்ப்பாணத்தில் 94ஆயிரத்து 371 பேரும் தங்கியிருக்கின்றனர்.
கிளிநொச்சியில் அனேகமாக மீள்குடியமர்வு பூர்த்தியாகிவிட்ட போதும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அவை இன்னும் முற்றுப்பெறவில்லை.
இந்த மாவட்டங்களில் பல கிராமசேவகர் பிரிவுகள் கண்ணிவெடி அகற்றப்படுவதற்காகக்கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மீளக்குடியமராமலும் மெனிக்பாம் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறாமலும் 4ஆயிரத்து 981 குடும்பங்களைச் சேர்ந்த 16ஆயிரத்து 401 பேர் இன்னும் இருக்கின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
***************
ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அதிகரிக்கும் உலக ஆதரவு
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போக்கு உலக அரங்கில் அதிகரித்து வருகிறது.
அந்த அறிக்கையை ஸ்ரீலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ள போதும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்ற கருத்தே மேற்குலக நாடுகளாலும் ஏனைய பெரும்பாலான நாடுகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள
இதுவரையில் சீனா, ரஷ்யா, மாலைதீவு ஆகிய நாடுகள் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றித் தலையிட்டுக் குழப்பக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டது ஐ.நா. அறிக்கையே கிடையாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
அறிக்கை ஏன் இப்போது விடப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மாலைதீவு அரசுத் தலைவர் தெரிவித்தார்.
உலகெங்கும் 35க்கும் மேற்பட்ட நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா அதனடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு வரப்பிரசாதம் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா அதிகாரிகள் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.
அறிக்கை தொடர்பில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுமாறு ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு சரிவரச் செயற்படுத்தாவிட்டால் அனைத்துலக விசாரணை அவசியம் என்று நியூஸிலாந்து தெரிவித்துள்ளது.
போர்க் குற்றங்கள் குறித்து ஸ்ரீலங்கா விசாரித்தே ஆகவேண்டும் என்று நோர்வே தெரிவித்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கையைச் சாதகமான முறையில் பரிசீலிக்கும்படி ஸ்ரீலங்காவை ஊக்குவிப்பதாக பிரிட்டன் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவோ, ஸ்ரீலங்கா தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா என்பதையே முதலில் கவனிப்பதாக தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்து நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ளது.
27 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றம், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவைக் கோரி உள்ளது.
மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று இறுதியில் இந்தியாவும் வலியுறுத்தி உள்ளது.
எனினும் இந்தியாவுக்குள்ளே, பிரதான கட்சிகளான பாரதீய ஜனதாக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக, விடுலைச் சிறுத்தைகள், மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி போன்றனவும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளன.
******************
இந்தியாவின் வலியுறுத்தல்! நம்பலாமா?
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ள இந்தியா அவசரகாலச்சட்டத்தையும் உடனடியாக நீக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளது.
மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் இந்தியாவின் நிலைப்பாடு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்றுக்காலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அதற்கு முன்னர் அவர், இந்தியாவின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது, ஐ.நா நிபுணர்குழுவின் போர்க்குற்ற அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கு இந்தியா நேரடியாகப் பதிலளிக்காத போதும், சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய சில விடயங்களை அழுத்திக் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்புகளின் முடிவில் இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நேற்றுமாலை வெளியிட்டன.
அதில் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை பற்றியோ அதுதொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றியோ ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை இந்தியா வலியுறுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்து இந்தியா பல்வேறு விடயங்களை சிறிலங்காவிடம் அழுத்தமாக கூறியுள்ளது.
அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு, மீனவர்களின் பிரச்சினை, இந்தியாவின் திட்டங்களுக்கு இருந்து வந்த தடைகளை அகற்றல், அவசரகாலச் சட்டநீக்கம், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய விசாரணை என்று இந்தியா பல்வேறு விடயங்களை உடனடியாக நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு அழுத்திக் கூறியுள்ளது.
*******************
ஸ்ரீலங்காவின் குழைவு! குழிதோண்டவா?
இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும், சிறிலங்காவின் நிலத்தையோ, கடலையோ சீனா பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி கூறியுள்ளார்.
மூன்று நாள் இந்தியப் பயணத்தின் முடிவில் நேற்றுமாலை புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவின் ஆதிக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்த இந்தியாவின் கவலையை தாம் புரிந்து கொள்வதாக குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சிறிலங்காவில் மோதிக் மோதிக் கொள்ளும் நோக்கம் ஏதும் கிடையாது.
இருநாடுகளும் தமது அபிவிருத்திக்கான உதவிகளை செய்து வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டுக்கு எதிராக மற்றொரு நாடு தமது நிலத்தை தாக்குதலுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் இது ஒரு உலகளாவிய கொள்கை என்பதுடன் அதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
******************
போர்க் குற்றவாளிக்கு பதவி உயர்வு!
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான இலங்கையின் தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் ஐ.நா.வுக்கான துணை நிரந்தரப் பிரதிநிதி என்ற பொறுப்பில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் உயர்மட்ட ராஜதந்திரிகளுடன் தொடர்புகளைப் பேண வேண்டியிருப்பதன் காரணமாகவே அவருக்கு இந்தப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதிய பொறுப்பில் அவர் இம்மாதம் ஐந்தாம் திகதியிடப்பட்ட நியமனக்கடிதமொன்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இதுவரை ஐ.நா.வுக்கான தூதுவராக கடமையாற்றிய ஷேணுகா செனவிரத்தின மிக விரைவில் வேறு நாடொன்றில் தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
******************