Monday 16 May 2011

செய்திகள் 16/05


மதிக்கப்படாத பயணம்

இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று புதுடில்லி சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
புதுடில்லியில் உள்ள ஒப்ரோய் விடுதியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார்.
.நா அறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக இந்தியாவின் ஆலோசனைகளையும் உதவியையும் இச்சந்திப்பின்போது ஜி.எல்.பீரிஸ் கோரவுள்ளார்.
புதுடில்லிக்கான இந்த விஜயத்தின்போது இந்தியாவின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் .சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை , ஜி.எல்.பீரிஸ் சந்திக்கப் போவதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கான நேரம் இதுவரை ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே பிரதமருடனான இந்தச் சந்திப்பு பெரும்பாலும் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று புதுடில்லி ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை வழக்கமாக வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான அதிகாரபூர்வ பேச்சுக்கள் வெளிவிவகார அமைச்சின் செயலகங்களில் தான் இடம்பெறுவதுண்டு.
ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, ஜி.எல்.பீரீஸை ஒப்ரோய் விடுதியிலேயே சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், புதுடில்லிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை நாடு திரும்பவுள்ளார்.
*****************

தத்தளிக்கும் பஷீல்
ஆயுதங்களால் நாட்டைப் பிளவுபடுத்த பயங்கரவாதத்துக்கு இடமளிக் காத நிலையில், வேறு எந்த முறைகளாலும் நாட்டைப் பிளவுபடுத்த வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை ஹல்துமுல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசுத் தலைவர்யினதும், அவரது குடும்பத்தினரதும் சுதந்திரத்தை இல்லாதொழிக்க சில வெளிநாட்டுச் சக்திகள் முயன்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், அரசுத் தலைவர்க்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் எதிராக நோர்வேயில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ள விடயத்தையும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை அரசிற்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு இலங்கையர்கள் சிலரும் ஆதரவளிக்கின்றனர் என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார
****************
கொந்தளிக்கும் கோபம்

புலம் பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் காரணமாக இலங்கையை ஏனைய நாடுகளிடம் இருந்து பிரிப்பதற்கு முடியாது என அமைச்சர் லக்க்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தனியொருவரின் செயற்பாடுகள் சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட திட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது, புலம் பெயர்ந்த நிலையில் சில நாடுகளின் உள்ள தனிப்பட்ட சிலரால் இலங்கைக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்தத்த நாடுகளின் நிலைப்பாடுகள் அல்லவெனவும் அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார
*****************
நட்பிழந்த நாடு

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் .நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து சுவிட்சர்லாந்தும், கனடாவும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது நட்புரீதியற்றது என ஸ்ரீலங்கா அரசு தனது எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவர் தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்து வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் .நா.நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் .நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சர்லாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
********************

நிராகரிப்பினால் ஏமாற்றம்
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கையின் முறைப்பாட்டை கனடாவும், சுவிட்ஸர்லாந்தும் நிராகரித்துள்ளன.
இந்த விடயம் ஜெனீவாவில் குறி;த்த இரண்டு நாடுகளின் பங்கேற்றலுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா தமது அதிருப்தியை வெளியிட்டது.
எனினும் அதனை இரண்டு நாடுகளும் நிராகரித்துள்ளன.
பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையின் மீது போர்க்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் மனித உரிமை அமைப்புகள், ஜெனீவாவில் இது தொடர்பில் ஆராய கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.
இது நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்காவின் தூதரகங்கள் கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிடம் முறையிட்டிருந்தன.
இந்தநிலையில் அதனை இரண்டு நாடுகளும் நிராகரித்துள்ளன.
அத்துடன் பான் கீ மூனின் நிபுணர் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
*******************
பதிலளிக்க இராணுவம்
.நாவின் போர்க்குற்ற அறிக்கையில், சிறிலங்கா படையினர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சிறிலங்கா இராணுவம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகிறது.
இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி சிறிலங்காவின் மலேசியாவுக்கான பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் உதய பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக இவரே செயற்பட்டிருந்தார்.
இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக இவர் கோலாலம்பூரில் இருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தின் ஆட்சேர்ப்புப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுராஜ் பன்சஜய ஆகியோரும் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இறுதிக்கட்டப் போரின்போது முக்கிய பங்கெடுத்த முக்கிய அதிகாரிகளாவர்.
இறுதிப்போரில் 58வது டிவிசன் படையணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்த அறிக்கை தயாரிக்கும் பணியில் பங்கேற்கவில்லை.
அவர் தற்போது அமெரிக்காவில், .நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக உள்ளார்.
எனவே போரில் இவருக்குத் துணையாக செயற்பட்ட இரண்டு அதிகாரிகள் இந்த அறிக்கை தயாரிப்புப் பணிக்கு உதவப் பணிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் .நா பொதுச்செயலருக்கு அனுப்பவுள்ள அறிக்கையுடன், சிறிலங்கா இராணுவத்தின் இந்தப் பதிலும் இணைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*******************