Thursday 19 May 2011

செய்திகள் 19/05


குழப்பிய இந்தியாவும் குழம்பிய குட்டையும்?

இந்தியாவிடம் உறுதி அளித்தபடி முறையான அதிகாரப்பகிர்வின் மூலமாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் தாம் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசுக்கு ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக உறுதியளித்துள்ள விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தொடர்பாகக் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்கள் தெடர்பாகத் தற்போது தம்மால் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்த அவர், உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்கள் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்திலேயே இது குறித்து திருப்தி அடையவோ, மகிழ்ச்சி அடையவோ முடியும் என்று குறிப்பிட்டார்.
நாட்டில் நல்லிணக்கத்தையும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இது சிறந்த ஒரு சந்தர்ப்பம்.
இந்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நிறைவேற்றப்படவேண்டும்.
அமைச்சர் பீரிஸ் நாடு திரும்பியவுடன் தமிழ் மக்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வின்மூலம் அரசியல் தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பை தாம் வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
***************
சீதனப் பேச்சில் இழுபடும் காதல்!
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு காதல் பேச்சுவார்த்தை போன்றேயுள்ளன இது திருமணமாக நடந்தேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை காதலர்கள் பேசுவதுடன் ஒப்பிட்டு மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம் பெற்ற தாய் சேய் கல்வித் திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அரசு - கூட்டமைப்பு பேச்சுக்கள் ஆறு சுற்றுப் பேச்சாக நடந்து கொண்டுள்ளன.
அவை காதல் பேச்சாக தொடர்கின்றதே தவிர சீதனப்பேச்சுவார்த்தையில் இழுபறி காணப்படுவதால் அது திருமணமாக நடந்தேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.
காதலி காதலிக்கும் போது காதலனிடம் தேவைகள் கோரிக்கைகளை முன்வைப்பாள் சில நேரங்களில் காதலன் காதலித்துவிட்டு ஏற்றுக்கொண்ட விடயங்களை நிறைவேற்றாது ஏமாற்றுவதுண்டு இவ்வாறே இப்பேச்சும் ஏற்றுக்கொண்ட விடயங்களைக் கூட நிறைவேற்றத் தயக்கத்துடன் ஏமாற்றுவதாகவே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக நடந்த ஆறாவது பேச்சிலும் கூட சீதனம் தொடர்பாக பேசப்பட்ட போது காதலன் தங்கள் மாமன் அண்ணன் மச்சான் என்று தங்கள் உறவினர்களுடன் பேசித்தான் முடிவுசொல்வதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
*****************
தப்பிக்க வழிசொல்லும் இந்தியா?
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று சிறிலங்காவுக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது.
புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஹிந்து நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று புதுடெல்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர்மட்டங்களுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
.நாவின் அறிக்கையில் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றசாட்டுகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி- உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.
அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைளை எடுக்கத் தவறினால், வேறு இடங்களில் இருந்து அழுத்தங்கள் வரும் என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது.
அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதைத் துரிதப்படுத்துமாறும் இந்தியத் தலைவர்கள் சிறிலங்காவிடம் கேட்டுள்ளனர்.
13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் போரின் பின்னர் காணாமற்போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும்படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி, அவசரகாலச் சட்டத்தையும் விலக்கிக் கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் ஹிந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
*****************
தப்பவே தாளம் - ஐதேக!
.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காகவே அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடி நிற்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது
இன்று இந்தியாவின் அழுத்தத்தினால் அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க அரசாங்கம் விரைவாக அரசியல் தீர்வுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் நீதி நியாயம் இல்லை. எனவே உள்நாட்டு மனித உரிமை விசாரணைகளை சர்வதேச ஏற்றுக்கொள்ளாது.
தமிழ் மக்களுக்கு யுத்தம் இல்லாமல் அரசியல் தீர்வை வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்தை தவிடுபொடியாக்கியவர்கள் யுத்தம் செய்து அழிவுகளை ஏற்படுத்தி இந்தியாவின் அழுத்தத்திற்காக இன்று அதிகாரப் பரவலாக்கலை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அதிகாரத்தை பரவலாக்குவதுடன் அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தன.
இந்த அறிக்கையிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த போதே .தே.. வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
*************
வெற்றி யாருக்கு?
.நா. அறிக்கை கேலிக்குறியதாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சிபாரிசுகளுக்கு அமைய இலங்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு .நா செயலார் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
****************
தோற்கடிக்க இந்திய உதவி அவசியம் - வாசுதேவா
இந்தியாவின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ததாகவும் அதேபோன்று .நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதை உறுதி செய்து கூட்டறிக்கை விடப்பட்டுள்ளமை இன்றைய காலத்தின் தேவையாகும் என வலியுறுத்தியுள்ளார்.
.நா. அறிக்கை தமது நாட்டுக்கு எதிராக பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகில் தமது நாட்டை தனிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது எனவும், எனவே இதற்கு பலம் மிக்க தமது அயல்நாடான இந்தியாவின் உதவியை நாடுவதில் எதுவிதமான தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு அவசர காலச் சட்டம் நீக்கம் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை போன்றவை தொடர்பில் தாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
**************