Tuesday 10 May 2011

செய்திகள் 10/05


தமிழர்களை எச்சரிக்கும் பசீல்!

வெளிநாடுகள் ஸ்ரீலங்கா மீது சுமத்தும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்குத் வெறும் டொலர்களுக்காகவோ சுயலாபங்களுக்காகவோ துணை போக கூடாது என பஸீல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
அறிக்கைகள் விட்டோ, வேறு வழிகளிலோ வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும் என்றும் தமிழர்களை எச்சரித்துள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் அரசுத் தலைவரின் சகோதரருமான பஸில் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் மேலும் சில பகுதிகளில் நேற்று மீள்குடியமர்வு இடம் பெற்றது.
9 கிராமசேவகர் பிரிவுகளில் 3,000 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.
அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, .சரவணபவன், .விநாயகமூர்த்தி, சி.சிறிதரன், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் யாழ். மாநகர முதல்வர் .யோகேஸ்வரி ஆகியோர் இந்த மீள் குடியமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
மக்களின் மீள்குடியமர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கொண்டிருந்தார்.
மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை அடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
20 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணுக்கும் வீடுகளுக்கும் சென்ற மக்கள், உணர்ச்சிப் பெருக்கோடு காணப்பட்டனர்.
****************

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன?
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது
எனினும், இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
க்ரீன் கட்சியைச் சேர்ந்த ஐம்பது உறுப்பினர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது.
*************

அதிகாரமற்ற தீர்வை ஏற்க முடியாது - சுரேஷ்
காணி, காவல்துறை அதிகாரங்கள் இல்லாத ஒரு அரசியல்தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி, காவல்துறை அதிகாரங்களை விட்டுக் கொடுத்து தீர்வு ஒன்றை எட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கவே இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன.
சிறிலங்கா அரசும், ஊடகங்களும் பக்கச்சார்பான முறையில் இத்தகைய மூன்றாந்தர செய்திகளைப் பரப்புகின்றன.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்கள் செய்துள்ள தியாகங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
***********

அதிகாரமில்லாத 700பேரை நியமிக்கும் அதிகார பரவலாக்கம்!

அரசாங்கத் தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது ஒற்றையாட்சி என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இருதரப்பினருக்குமிடையில் கருத்து மோதல்களை தோற்றுவிக்கக் கூடிய எவ்வித பிரச்சினைகளும் எழவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத் தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை ஒன்றிணைக்கும் குழுவின் செயலாளருமான சஜின்.டி.வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்துக்கு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அடிப்படையாக வைத்தே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்று தெரிவித்த அவர், இதில் காவல்துறை மற்றும் காணி அதிகாரத்தைத் தவிர மற்றைய அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்தரப்பினர் கொள்கையளவில் இணக்கப்பாட்டைத் தெரிவித்ததாகக் கூறினார்.
காவல்துறை அதிகாரத்தை மாகாண சபைகளுக்கே பெற்றுக்கொடுப்பதில் பிரச்சினை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அரசாங்கத்தரப்பினர் உடனடியாக எழுநூறு தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர்களை நியமிப்பதற்கும் தயாராக இருக்கின்றது என்ற தனது நிலைப்பாட்டை இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எடுத்துரைத்தது.
அவசியமாயின் 10 ஆயிரம் தமிழ் காவல்துறையினரைக் கூட அரசாங்கம் நியமிக்க தயாராக இருக்கிறது என்ற செய்தியும் அங்கு அரசாங்கத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டதாக சஜின்.டி.வாஸ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.
அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரங்கள் மற்றும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் செயற்பாடுகளுக்கும் கூடியவரையில் இணக்கப்பாட்டை தெரிவிக்க அரசாங்கம் தயாராகவிருக்கிறது.
அதிகாரப் பரவலாக்கலின் முதல் நடவடிக்கையாக அரசாங்கத் தரப்பினர் செனட் சபை ஒன்றை அதாவது, இரண்டாவது சபையொன்றை இலங்கை அரசியல் சாசனத்தின்கீழ் அமைப்பதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த யோசனையின்படி செனட் சபையை எந்த நடைமுறையின் கீழ் உருவாக்குவது என்பதில் இதுவரையில் இறுக்கமான கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லையென்று தெரிவித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, செனட் சபையை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளிலிருந்து தெரிவு செய்வதா அல்லது உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் தெரிவுசெய்வதா அல்லது வேறு ஒருவகையில் தேர்தல் மூலம் தெரிவுசெய்வதா என்பது பற்றி இதுவரையில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையென்றும் கூறினார்.
எவ்வாறாயினும், செனட்சபையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்குக் கூடுதலாக சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் வகிப்பார்கள் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
13வது திருத்தம் பற்றி விளக்கமளித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப்பெற்றுள்ள 13வது திருத்தச்சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இப்போது இருப்பதைவிட மாகாணசபைகளுக்கு ஆகக் கூடிய அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்றும், ஆகவே சில தினங்களில் நடைபெறவுள்ள 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நல்ல வெற்றியளிக்குமென்று தமக்கு நம்பிக்கையிருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது 880 தமிழ் கைதிகளே சிறையில் இருக்கிறார்கள் என்றும், அவர்களும் விரைவில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சஜின்.டி.வாஸ் குணவர்த்தன தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் தருஸ்மன் அறிக்கை தொடர்பான விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை பகிரங்கமாக கண்டித்து வருவதை ரஷ்யாவும், சீனாவும் விரும்பவில்லையென்று வாரஇறுதியில் வெளிவரும் ஆங்கில பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி ஆதாரமற்றது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்தரப்பினர் இப்போது மேற் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் இதுவரையில் எதிர்ப்பைத் தெரிவிக்காதிருப்பது இனப்பிரச்சினைக்கு சமரசத்தீர்வை ஏற்படுத்துவதில் அவற்றுக்கிருக்கும் விருப்பத்தை பறைசாற்றுகிறது என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி தாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்த சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, அவர்கள் விடுக்கும் கோரிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கூட அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்ற உணர்வு தனது மனதில் வலுப்பெற்று வருவதாகக் கூறினார்.
***************

போர்க் குற்றவாளிகளுக்கு அவுஸ்திரேலிய அரசின் அடைக்கலம்!
இலங்கையின் தூதுவராக அட்மிரல் திசார சமரசிங்கவை ஏற்றுக் கொண்டதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு போர்க் குற்றவாளிக்குப் பாதுகாப்பளிப்பதாக தமிழ்ச் சமூகத்தினர் குற்றம் சாட்டுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த வெள்ளியன்று அறிவித்திருந்தது.
இவரது நியமனம் குறித்த தகவல்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான போது, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர், இவரை தூதுவராக ஏற்கக்கூடாது என்று பிரதமர் கிலாட் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இவர் ஸ்ரீலங்கா கடற்படையில் பணியாற்றியவர் என்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் குற்றம்சாட்டியிருந்தனர்.
எனினும்,அண்மையில் வெளியான .நாவின் போர்க்குற்ற அறிக்கையில் அட்மிரல் திசார சமரசிங்க போர்க்குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமஷ்டிக் கட்சி உறுப்பினர் ஜோன் முர்பி உரையாற்றியபோது, அட்மிரல் திசாரசமரசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பொருத்தமான தூதுவர் அல்ல என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் அட்மிரல் திசார சமரசிங்கவின் நியமனம் இடம்பெற்றுள்ளதானது அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரை கோபமடைய வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
*************

தர்மம் அழிந்த தேசத்தில் உயர்ந்த புத்தர்?

உலகில் மிகஉயரமான புத்தர்சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.06 மணியளவில் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
குடாகெலெரேவ சிறிசாரங்கராமய குருந்தன்குளம என்ற இடத்தில்- 522 அடி உயரமான சமாதிநிலைப் புத்தர்சிலை அமைக்கப்படவுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உயிரிழந்த சிறிலங்கா படையினர் நினைவாகவே உலகின் மிகப்பெரிய புத்தர்சிலையை சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னதாக இந்தப் புத்தர் சிலையை வவுனியாவில் நிறுவப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
பௌத்தர்கள் அதிகம் வசிக்காத வவுனியாவில் இந்தப் புத்தர்சிலை அமைக்கப்படுவதற்கு தமிழர்தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அனுராதபுரவில் இந்தப் புத்தர் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
****************