Sunday 1 May 2011

செய்திகள் 30/04


ரொபேட் பிளேக் கொண்டு செல்லும் செய்தி என்ன?

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் எதிர்வரும் 3 ஆம் திகதி இலங்கை செல்லவுள்ளார்.
அவர் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பிளேக் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், அரசுத் தலைவரின் பங்களாதேஷ் விஜயம் காரணமாக பிளேக்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பிளேக் தனது விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷ்வை சந்திக்கமாட்டார் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ரொபர்ட் பிளேக்கின் விஜயத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராயவே பிளேக் இலங்கை வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
***************

அமெரிக்க தூதரின் ஐநா அறிக்கை குறித்த இரகசிய சந்திப்பு

சிறிலங்காவுக்கு எதிரான .நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முக்கியமான அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா, .நா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் உள்ளூர் அரச்சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை.
அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதால் அதுபற்றி கருத்து வெளியிட முடியாது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கத் தூதுவரின் அழைப்பின் பேரிலேயே அதில் தான் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.
.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அறிக்கையை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜெகான் பெரேரா தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, செரின் சேவியர், வெலியமுன, சுதர்சன குணவர்த்தன, சுனிலா அபேசேகர ஆகியோரும். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
****************


ஸ்ரீலங்கா அரச தலைவர்களை கைது செய்ய முடியும்!
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை கொண்டு ஸ்ரீலங்காவின் தலைவர்களை கைது செய்ய முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசுத் தலைவர் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
பீபீசி சிங்கள சேவையான சந்தேசியாவிற்கு அவர் அளித்துள்ள விசேட செவ்வியின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை தயாரித்தவர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கலாம் ஆனால் அந்த அறிக்கை மிகவும் சக்திவாய்ந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை வைத்துக் கொண்டு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள், உள்நாட்டு நீதிமன்றங்களின் உதவியுடன் ஸ்ரீலங்காத் தலைவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் ஸ்ரீலங்காவின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கைது செய்யப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கான சக்தியினை நிபுணர் குழுவின் அறிக்கை கொண்டுள்ளதாக விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது ஸ்ரீலங்காவின் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாடு செல்வது சவாலான விடயமாகவே அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
****************

முன்னைய யுத்தங்களில் கொல்லப்பட்டவர்கள் பற்றி யாரும் கேட்கவில்லை - கவலைப்படும் அமைச்சர்!

யுத்தமொன்று நடைபெறும் போது சாதாரண மக்களும் கொல்லப்படுவது சாதரணமான ஒரு விடயம் என மனிதவள மற்றும் சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஈழப்போரின் போதும், 71 ம் மற்றும் 88, 89 ஆம் ஆண்டுகளிலும் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடும் அமைச்சர், ஆனால் நடைபெற்று முடிந்த நான்காம் கட்ட ஈழப்போரின் போது மக்கள் கொல்லப்பட்டமையை சர்வதேசம் தூக்கி பிடித்துக்கொண்டு பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பல அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வேதேசமோ, .நாவோ சர்வதேச ஊடகமோ, ஏன் உள்நாட்டு ஊடகமோ 88, 89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மனித படுகொலைகயின் போது வாய்திறக்காமல் மௌனமாக இருந்ததாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
.நா. குழு சமர்பித்துள்ள அறிக்கையின் படி உலகத்தில் மிகவும் கண்ணியமான போராட்ட அமைப்பாக விடுதலைப் புலிகள் நற்பெயர் பெற்றுள்ளதாக புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
***************

ஸ்ரீலங்கா அரசு - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் சந்திப்பு

சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுக்கள் நேற்று நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது மாகாணங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் பட்டியல் மற்றும் பொதுவான பட்டியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படை வரைவு ஒன்று பற்றிப் பேசப்பட்டதுடன் தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசதரப்புப் பிரதிநிதிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய அரசுக்கான அதிகாரப்பட்டியல் மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப் பட்டியல் என்ற இரண்டு மட்டுமே இருந்தால் போதுமானது என்று இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இரண்டு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தேவையில்லை என்ற தமது நிலைப்பாட்டை அரச தரப்புக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், ஆனால் அதை முழுமையாக ஏற்க முடியாது என்று அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவ்வாறாயின், பொதுப் பட்டியலில் அதிக அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று தாம் கூறியதாகவும், அதற்கு அரசதரப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் இந்த விவகாரம் குறித்து மீண்டும் மே 12ம் நாள் பேசுவதென்று இரு தரப்புகளும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளின் விபரங்களை விரைவில் தருவதாக அரசதரப்பு மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், மே 12ம் திகதிக்கு முன்னதாக அது கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும், அரசதரப்பில் அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் பங்கேற்கவில்லை.
கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் சட்டவாளர் கனகஈஸ்வரன் ஆகியோரும், அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜின் வாஸ் குணவர்த்தன, ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் அரசதரப்புக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசதரப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்புடன் கடைசியாக நடத்தப்பட்ட சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
**************

ஈழத் தமிழரை ஏமாற்றும் இந்தியா - ஹிந்துஸ்த்தன் ரைம்ஸ்

யுத்தத்தால் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்தியா வழங்கும் என உறுதி அளித்த போதிலும், அவற்றுக்கான நிர்மாணப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படாதமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசு யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்குவதாக வாக்குறுதியளித்து சுமார் இரண்டு வருடங்களாகின்றன.
இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகள் ஷெல், மோட்டார் தாக்குதல்களில் அழிந்த காரணத்தால் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா யாழ்.மாவட்டத்திலுள்ள அரியாலையில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அடிக்கல் நட்டார்.
அடிக்கல் நடப்பட்டு ஐந்து மாதங்களாகியும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான எதுவித அறிகுறிகளும் காணப்படவில்லை.
இந்த நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் .நா. அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக யாழ்.குடாநாட்டில் ஆயிரம் வீடுகளை இந்த வருட இறுதிக்குள் நிர்மாணித்து வழங்குவது என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
****************