Monday 30 May 2011

செய்திகள் 30/05


அவசரகால சட்ட நீக்கத்திற்கு எதிர்ப்பு
இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட உள்ளாக தேசப்பற்றுடைய தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியாவின் அழுத்தங்களுக்காக அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என தேசப்பற்றுடைய தேசிய அமைப்பின் சமூக விவகாரச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இரு நாடுகளும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவசரகாலச் சட்டம் ரத்து செய்யப்படவுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டது.
தேசப்பற்றுடைய தேசிய இயக்கம், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இணை இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து உள்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
************
அரசு தவறிவிட்டது - ஐதேக
இன சுமூகத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து இன சமூகங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கப்பட வேண்டியது நிலையேற்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தம் நாட்டில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
அதிகாரப் பகிர்வு கீழ்மட்ட நிலையிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
***************
ஐநா என்ன செய்யப் போகின்றது?
இலங்கையின் கடப்பாடு பற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து சில விடயங்களைப் பேச அனுமதியுங்கள் என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் iணாயாளர் நவநீதம்பிள்ளை ஐநாவில் ஆற்றிய ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக பாரிய அளவில் இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்த நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை நடத்தவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு.
அத்தோடு இந்த நிபுணர்குழு மேற்கொண்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கையுமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான தனது முன்னைய அக்கறையின் வெளிச்சத்தில் இந்த முக்கியமான அறிக்கையிலுள்ள புதிய தகவல்கள் குறித்து மனித உரிமைக் கவுன்ஸில் தனது எதிர்விளைவை வெளிப்படுத்துவது முக்கியம் என தான் கருதுவதாகவும் அவர் வலியுறுத்தி உள்ளார;.
***************
ரணிலின் இந்தியப் பயணம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு சென்றுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு 8 மணியளவில் இந்தியா புறப்பட்டு சென்றுள்ளார்
இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்தியாவுக்கு சென்று நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே ரணிலுக்கான அழைப்பை இந்தியா விடுத்துள்ளதாக இந்திய அரசியல் தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்கே இந்தியா சென்றுள்ளார்.
டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர் பிரச்சனை குறித்து தம்மை சந்திக்குமாறு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார்.
ஜெயலலிதா தன்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது எனவும் விரைவில் அவரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இரு தரப்பும் ஒப்புக்கொண்ட விஷயங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************
ஜெனீவாவில் கூட்டம் ஆரம்பம்
ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள .நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மனிதஉரிமைகள் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஸ்ரீலங்கா அரசின் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் இன்று தொடக்கம் ஜூன் 17ம் திகதி வரை நடைபெறும்.
ஸ்ரீலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்டக் குழு நேற்று முன்தினம் ஜெனீவா சென்றுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிக்குப் புறம்பான படுக்கொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த .நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் இன்றைய கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் .நாவின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கை தொடர்பாக இவர் சமர்ப்பிக்கவுள்ள முதலாவது அறிக்கை இதுவாகும்.
இந்த அறிக்கையிலேயே சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, தமிழ்க்கைதிகள் ஸ்ரீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அதேவேளை, இன்றைய தினம் .நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆண்டறிக்கையை சமர்ப்பித்த பின்னர், சுவிற்சர்லாந்து நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் ஸ்ரீலங்காவின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக .நா பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், உயர்த்துவதற்குமான தேசிய செயற்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் .நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு சந்திக்கவுள்ளது.
***************
மகிந்தவுக்கு பதில்!
யுத்தத்தால் இழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பதும் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டி உரிமையைக் கேட்பதும் இனவாதம் அல்ல என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்ற சிங்கள அரசுகளே இனவாத சிந்தனையோடு செயற்பட்டு வருவதாகவும் இதனை இன்றைய அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழர் உரிமை தொடர்பில் சிங்கள அரசுகளின் ஏமாற்றுச் சதிகளும், ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு தீர்வுக்கான சுமுக வழிகள் சீரழிக்கப்பட்டமையுமே ஆயுதப் போராட்டத்துக்கான விதிகளை வகுத்ததே தவிர பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகளோ சுயாட்சி என்ற திட்டத்தை முன்வைக்கவில்லை என்பதை வரலாறு மறந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகமூட்ட விரும்புவதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளின்போது அரசுத் தலைவரினால் ஆற்றப்பட்ட உரையின் சில விடயங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
*************