Friday 27 May 2011

செய்திகள் 27/05


உண்மையை சொன்ன ஊடவியலாளருக்கு உயிரச்சுறுத்தல்!

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையை பகிரங்கப்படுத்திய ஊடகவியலாளர் அமல் சமந்த நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்த விடயம் அமல் வசந்த மூலமாகவே சரத் பொன்சேகாவிற்கு அறியக் கிடைத்திருந்ததை அடுத்து பிரஸ்தாப ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ஷ கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளுக்கு மிக நெருக்கமானவரும், நான்காம் கட்ட ஈழப்போரின் போது மாவிலாறு யுத்தக் களமுனை தொடக்கம் அரசுத் தலைவர் ஊடகப் பிரிவினருடன் இணைந்து ரூபவாஹினி தொலைக்காட்சிக்கான நேரடித் தகவல்களை வழங்கியவருமான ஊடகவியலாளர் அமல் வசந்த தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
அரசுத் தலைவர் ஊடகப் பிரிவின் சிபாரிசின் கீழ் நான்காம் கட்ட ஈழப் போரின் போது ரூபவாஹினியில் இருந்து அமல் வசந்த, ராமவிக்கிரம, சுயாதீன தொலைக்காட்சியில் இருந்து ரொட்ரிகோ ஆகியோர் யுத்தத்தின் தகவல்களை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களை அரசுத் தலைவர் ஊடகப் பிரிவின் முன்னை நாள் தமிழ் அதிகாரியான அஷ்ரப் அலீ ஒருங்கிணைத்து வந்திருந்தார்.
அவ்வாறான நிலையில் அமல் வசந்தவும் அஷ்ரப் அலீயும் கடமை நிமித்தமாக ஒரு தடவை கோத்தாபய ராசபக்ஷவின் அலுவலகத்தில் இருந்துகொண்டிருந்த போதே வன்னியிலிருந்த இராணுவ கட்டளை தளபதிக்கு வெள்ளைக்கொடியுடன் வரும் விடுதலைப்புலி தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என தெரியவருகிறது.
சரத் பொன்சேகாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்ற வகையில் ஊடகவியலாளர் அமல் வசந்த அவ்விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு தெரிவித்துள்ளார்.
அதனையே அவரும் பிரட்ரிக்கா ஜேன்ஸிடம் பிரஸ்தாபித்திருந்ததுடன், நீதிமன்ற சாட்சியமளிப்பின் போது சண்டே லீடர் ஆசிரியரிடம் பேசும் போது தான் தனிப்பட்ட ரீதியில் கூறியதாக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் அமல் வசந்த ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ஷ அவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அமல் வசந்த நாட்டை விட்டு தப்பியோடி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் பிளேக்கின் உதவியுடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்ற அமல் வசந்தவிற்கு பின்னர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
அவரிடம் வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களும் உள்ளதாக தெரியவருகிறது.


ஊழல் அம்பலமாகுமோ?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பிரேரணையொன்றை கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நன்மை கருதிய, பொதுமக்கள் தொடர்புபடும் விடயங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமொன்றுக்கான பிரேரணையொன்றை .தே.. பிரதித்தலைவர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அவ்வாறானதொரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இந்திய அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் விபரங்களைக் கோரத் தொடங்கியிருப்பதைப் போன்றதொரு நிலைமை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அரசாங்க உயர்மட்டத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.
அதன் காரணமாக வழமையான பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் இருந்தே அகற்றி விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தப்பித் தவறியேனும் அவ்வாறானதொரு சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துவிட்டால் தாங்கள் மேற்கொண்ட ஊழல்கள் வெளிவருவது மட்டுமன்றி நிகழ்கால மற்றும் எதிர்கால ஊழல் மோசடி செயற்பாடுகளுக்கும் தடை ஏற்பட்டு விடும் என்று அவர்கள் அஞ்சுவதே அதற்கான காரணமாகும்.


கருத்தரங்கை புறக்கணி!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல ஆயிரம் பொதுமக்களை அழித்த இராணுவத்தினரின் போர்க்கருத்தரங்கில் தென்கொரியா பங்கேற்கக்கூடாது என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜுங்அங் டெய்லி என்ற தென்கொரிய ஊடகத்திற்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல ஆயிரம் பொதுமக்களை அழித்தமை, வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியமை, சர்வதேச உதவி நிறுவனங்கள், கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற மனிதஉரிமை மீறல்களை ஸ்ரீலங்கா மேற்கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதஉரிமைமீறல் மேற்கொண்ட இராணுவத்தின் போர்க்கருத்தரங்கை ஏனைய நாடுகளுடன் இணைந்து தென்கொரியாவும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் மோசமான முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கை அமெரிக்கா, கனடா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அவுஸ்ரேலியா போன்றவற்றுடன் இணைந்து தென்கொரியாவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் பிரட் அடம்ஸ் கோரியுள்ளார்.
தென்கொரியா இதில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்றாலும் கூட, போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு தென்கொரியா அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோத்தாவின் கோடி ஊழல்!

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடி மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி என மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி லங்காநியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஸ்ரீலங்கா இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேக்கா வழங்கிவரும் சாட்சியங்களின் போது கோதாபய ராஜபக்சேவின் மேலும் பல மோசடிகள் குறித்த தகவல்கள் வெளிவரவிருப்பதாகவும், இந்தத் தகவல்கள் வெளிவந்தால் போர் மூலம் பெருந்தொகை பணத்தை சம்பாதித்தவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே வரலாற்றில் இடம்பெறக் கூடும் என லங்காநியூஸ் வெப் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.


சோர்ந்து போன பீரிஸ்?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தோனேசியாவில் எகிப்து வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்காக பாலித்தீவு சென்றுள்ள ஜி.எல்.பீரிஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்தோனேசியாவில் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த அவரால்- நேற்றுவரை எகிப்து வெளிவிவகார அமைச்சர் நபில் அல் அரபியை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்துள்ளது.
அதேவேளை, ருமேனிய வெளிவிவகார அமைச்சர் டொரு கோஸ்ரியாவை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பேரேரா தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கும், சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், .நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
120 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றும் இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையே இதுவரை சந்திக்க முடிந்துள்ளதானது, பீரிஸ் அங்கும் நெருக்கடியை எதிர்நோக்குவதைப் புலப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான நாடுகள் இருதரப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார, வர்த்தக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குமே இந்தச் சந்திப்பில் முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
ஆனால் சிறிலங்கா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசினால் அணுக முடியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


மன்னிப்புச் சபையின் விருது

2011 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் விருது சனல் 4 தொலைக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை சனல் 4 தொலைக்காட்சி 3ஆவது தடவையும் வென்றுள்ளது.
இலங்கை குறித்த விவரணத்தை வெளியிட்டமையின் காரணமாகவே சர்வதேச மன்னிப்புச் சபையானது இந்த விருதை சனல் 4 க்கு வழங்கியுள்ளதாக தெவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை வெளிப்படுத்தியமை பின்னர் வெளியிட்ட காணொளிகள் உண்மையானவை என நிரூபித்துள்ளமை என்பன இந்த விருது கிடைக்க மேலும் காரணிகளாக அமைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெவித்துள்ளது.
தென்சூடான், கொங்கோ நாடுகள் பற்றிய உண்மைத் தகவல்களையும் சனல் 4 வெளியிட்டமைக்கு பாராட்டுத் தெவிக்கப்பட்டது.
ஜொனத்தன் மில்லர், நிவினிமப் ரோ, சாராகோப், கிஷ் ஜூனியா ஆகிய செய்தியாளர்கள் இலங்கை தொடர்பான பல செய்திகளை ஆராய்ந்து வெளியிட்டதாகவும் மற்றும் பெயர் குறிப்பிட முடியாத பலர் இலங்கைச் செய்திகளை வெளிக்கொண்டுவர பாடுபட்டதாகவும் சனல்4 நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிலரது பெயர்களை பாதுகாப்புக் கருதி தாம் வெளியிடவில்லை என்றும் இருப்பினும் அவர்களுக்கும் இத் தருணத்தில் நன்றியைத் தெவித்துக் கொள்வதாகவும் அது மேலும் தெவித்துள்ளது.