Saturday 28 May 2011

செய்திகள் 28/05


இனப்படுகொலையாளரின் விசாரணைக்குழு!

இலங்கையின் வடக்குகிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்கவென ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள குழு தொடர்பில் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை உரியமுறையில் விசாரணை செய்யாத ஸ்ரீலங்கா மனித உரிமைக்கள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிதற்காக இந்த குழு அமைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவரினால் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பிரியந்த பெரேராவை கோடிட்டு இந்த விசாரணைக்குழு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
சிங்களவர்களை அதிகமாக கொண்ட ஐவர் அடங்கிய முன்னாள் நீதியரசர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.
ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டின் காரத்தை குறைக்கும் வகையிலேயே இந்தக்குழு அமைக்கப்படவுள்ளது.
எனினும் இந்தக்குழு எந்தளவு சுயாதீனமாக இயங்கும் என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஒருவரேனும் கொல்லப்படவில்லை என்று ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில் அவரினால் நியமிக்கப்பட்டிருப்பது இது பற்றிய சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்துள்ளது.
********************

உதவி தேடி அலையும் அரச தூதுக்குழு?
இந்தோனேசியா சென்றுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழுவினர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோரை உள்ளடக்கிய குழு பாலி தீவு சென்றுள்ளது.
இந்தக் குழுவினர் அணிசேராடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை தனித்தனியே சந்தித்து ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் இன்னும் இரண்டு நாட்களில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை பற்றிய விவாதம் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால், அதை முறியடிப்பதற்கான ஆதரவு தேட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் இறுதி நேர முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு இறங்கியுள்ளது.
இந்தநிலையிலேயே, பாலி தீவில் பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா தூதுக்குழு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி வருவதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
ஆனால் எந்தெந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பிரதிநிதிகளை இவர்கள் சந்தித்ததாக, எந்தத் தகவலையும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கூறவில்லை.
நேற்றுமுன்தினம் எகிப்து மற்றும், ருமேனியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையே ஸ்ரீலங்கா தூதுக்குழுவினரால் சந்திக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
*******************
காவிக்குள் போதை?
போதைப் பொருள் கட்டத்தலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரை ஸ்ரீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவி உடையில் இந்த போதைப் பொருள் பக்கட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டதாகவும், மஹரகம காவல்துறையினர் நடத்திய தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பௌத்த பிக்கு கொழும்பிற்கு அருகாமையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் தாம் இந்தப் போதைப் பொருள் பக்கட்டுகளை கொள்வனவு செய்ததாக குறித்த பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.
*************
கட்டிப்பிடித்து காப்பாற்றுவாரா?
தாய்நாட்டை மீட்டெடுத்த தமது இராணுவ சிப்பாய்களை எந்த சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் தனிமைப்படுத்த விடப் போவதில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டுக்கும் இராணுவ சிப்பாய்களுக்கும் எழுந்துள்ள அந்நிய சக்திகளின் அழுத்தங்களைத் தோற்கடிக்க ஐ. தே. க. முன்னிற்கும் என்றும் கூறினார்.
சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனைகளற்ற வகையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பயணத்தில் அவரையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயவாக கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைப்படுத்தப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் சுஜீவ சேனசிங்க, தலதா அத்துக் கோரள மற்றும் தினேஷ் சங்கந்த ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
***************
குழம்பிய விசா! குழப்பும் ஆட்சி?
இலங்கைக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறைமையை அரசாங்கம் நீக்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்த செய்தியை குடிவரவுகுடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சூலாநந்த பெரேரா மறுத்துள்ளார்.
தான் தெரிவித்திருந்த விடயம் தவறாக மேற்கோள்காட்டப்பட்டிருப்பதாக அததெரண இணையத்தளத்துக்கு கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை இலங்கை எடுத்திருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
சிங்கப்பூர், மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு மட்டுமே தொடர்ந்தும் வருகைதந்தவுடன் விசா வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுமெனவும் இந்நாடுகள் இலங்கையர்கள் அங்கு சென்றவுடன் விசா வழங்கும் நடைமுறையைக் கொண்டிருப்பதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்திருந்ததாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
அதேசமயம், இது தொடர்பாக நேற்று கருத்துத் தெரிவித்த குடிவரவு,குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இந்தியப் பத்திரிகை எதற்கும் வருகைதந்தவுடன் இந்தியர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார்.
புதிய முறைமையான இணையத்தினூடாக விசா வழங்கும் முறை குறித்தே தான் கதைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியர்கள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************

சாதனைத் தமிழர்
இலங்கையின் வடக்கே யாழ். குடாநாட்டை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் ஒருவர் ஜெர்மனியில் பொருளியல் செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் என் 72 வயதுடைய தமிழரே ஜெர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1970களில் ஜெர்மனிக்கு சென்றிருந்தார்.
அதற்கு முன்னர் தனது கல்வியை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்த இவர், ஜெர்மனியில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றி பின் சொந்த நிறுவனமொன்றை ஆரம்பித்தார் என தெரியவருகிறது.
ஜெர்மனியில் அமைச்சர் நிலைக்கு உயர்ந்து ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ள கிருகரன் வசிக்கும் ஜெர்மன் நாட்டில் அரை இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
***************