Wednesday 11 May 2011

செய்திகள் 11/05


இந்திய உதவியைக் கோரும் மகிந்த

.நா. நிபுணர் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச அரங்கில் எதிர்கொண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இந்தியாவின் உதவி மிக மிக அவசியம் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றுப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா எப்போதுமே ஸ்ரீலங்காவுடன் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
எல்லாச் சமயங்களிலுமே இரு தரப்புகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே இருந்து வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா இதுவரையில் கருத்து எதனையும் விடுக்கவில்லையே என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, பொருத்தமான சமயத்தில் பொருத்தமான பதிலை இந்தியா வழங்கும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தருஸ்மன் அறிக்கை நாட்டில் சர்ச்சையைக் கிளப்பாத வகையில் ஊடகங்கள் நாட்டுப்பற்றுடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தாம் ஏற்கனவே ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டுள்ள மனிதாபிமான நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபர் தலைமையில் ஒரு சிரேஷ்ட தூதுக்குழுவை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தருஸ்மன் அறிக்கை ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக ரஷ்யாவும், சீனாவும் ஸ்ரீலங்காவை முழுமையாக ஆதரிக்கின்றன.
அதுபோல் மேலும் பெரும்பாலான நாடுகள் தங்களை ஆதரிக்கின்றன எனவும் விளக்கமளித்துள்ளார்.
******************

ஸ்ரீலங்காவின் இரட்டை வேடம் - ஜே.வி.பி

ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இரட்டைக் கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே வி பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
குறித்த அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆங்கிலத்தில் ஒரு கருத்தையும் சிங்களத்தில் ஒரு கருத்தையும் வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன்காரணமாக பல்வேறு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் உலகத்துக்கு கூறுவதை நாட்டுக்கு கூறுவதில்லை.
உள்நாட்டில் கூறுவதை உலகத்துக்கு கூறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
*******************

ஐநாவின் தவறுகள் - பாதுகாப்பு சபை ஆய்வு

போரின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்போது உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிசெயலாளர் வெலரி எமோஸ், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதேவேளை போர்க்காலத்தில் சிரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஐக்கிய நாடுகளின் சமாதான ஏற்பாடுகள் இருக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்
இந்த அமர்வில் உரையாற்றிய ஸ்ரீலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி, பாலித கோஹன, இறுதிப்போரின் போது ஸ்ரீலங்கா காட்டிய மனிதாபிமான முனைப்புகளுக்கு சர்வதேச மதிப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
பொதுமக்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்ற பிரிவினரை அடையாளம் காணுவதில் பாரிய சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் போரில் தோல்வியடைந்த நிலையிலேயே சர்வதேசம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்
**************

ஸ்ரீலங்காவை வலியுறுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு - இந்திய முன்னாள் நீதியரசர்
இலங்கை யுத்தத்தின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த .நா பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் செயல்படுமாறு ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி தமிழ் மாணவர் அமைப்புக்கள் சார்பில், இலங்கை யுத்தத்தின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த .நா பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பான கருத்தரங்கம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
அதில் பேசும்போது, நீதிபதி சச்சர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
.நா.குழு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த ஸ்ரீலங்கா அரசு அனுமதி மறுப்பதன் மூலம், அது எதையோ மறைக்க முயல்கிறது என்று நீதிபதி சச்சர் குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில், .நா. உறுப்பினர் என்ற முறையில், .நா. மன்றத்தை நிராகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை ஸ்ரீலங்கா அரசுக்குப் புரிய வைக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயுத ரீதியான தலையீடுகளுக்கு, அமெரிக்க நிர்பந்தத்தால் இந்தியா ஆதரவு கொடுக்கும் நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாக .நா. குழு அறிக்கை கூறுவதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயத்தில் இந்தியா மென்மையாக நடந்துகொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? என கேள்வி எழுப்பிய அவர், ஸ்ரீலங்காவுக்கு பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்பதற்காகவா? அப்படியே இருந்தாலும் கூட, அதைப்பற்றிக் கவலைப்படும் அளவுக்கு இந்தியா பலவீனமான நாடு அல்ல எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில், தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள், தேர்தல் நேரத்தில் மத்திய அரசை நிர்பந்திக்கத் தவறிவிட்டதாக நீதிபதி சச்சர் கவலை தெரிவித்தார்.
அந்தக் கருத்தரங்கில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, லோக்ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், சிபிஐ எம்எல் சார்பில் ஸ்வபன் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றார்கள்.
***************
தனியான விசாரணை அவசியம் - பசில் பெர்னாண்டோ

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தனியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கை வகுப்புப் பணிப்பாளர் சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தெரிவிவித்துள்ளார்.
மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக எவரேனும் முறைப்பாடு செய்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் விசாரணைகளை நடத்தவில்லை. இதனால் குற்றச் செயல்கள் இடம்பெற்றனவா இல்லையா என்பதனை குறிப்பிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநபர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதற்காக விசாரணை நடத்த வேண்டியதில்லை.
எனினும் மனித உரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நாட்டுக்கு எதிரான விடயமாக நோக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் காணப்பட்டால் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ விசாரணைகளை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
******************

தேர்தலை நடத்தக் கோரி வழக்கு

கொழும்பு மாநகர சபைக்குத் தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் மற்றும் கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு பிரஸ்தாப வழக்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நேற்று தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் கொழும்பு மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகளால் செயற்படுத்தப்படும் நிர்வாகம் இல்லை.
அதற்குத் தீர்வாக தேர்தலொன்றை நடாத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளின் உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலை நடாத்த இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக ஒமர்காமிலை விசேட ஆணையாளராக கொண்டு மாநகர நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே அதனை இரத்துச் செய்து கொழும்பு மாநகர சபைக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலை நடாத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தன் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
***************