Saturday 7 May 2011

செய்திகள் 07/05


நிபுணர் குழுவை கலைத்த பான் கீ மூன்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவை .நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றுக் கலைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
அக்குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
அதன் பின் .நா. செயலாளர் நாயகத்தினால் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது.
அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று .நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளார்.
தன் பதவிக்காலம் முடிவதற்கிடையில் அவர் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்களை அளித்தவர்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் இருபது வருடங்களுக்குள் வெளியிடக் கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.
***************

குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இராணுவ குழு

.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்காக சிறப்புக் குழுவொன்றை சிறிலங்கா இராணுவம் அமைத்துள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படையினர் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக .நா நிபுணர்குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றைத் தயாரிக்க சிறிலங்கா இராணுவம் சிறப்புக்குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவின் பதில்களை உள்ளடக்கிய அறிக்கையும், சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவுள்ள பதிலுடன் சேர்த்து .நாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குழுவில் எத்தனை இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்றோ, இதற்குத் தலைமை தாங்குவது யார் என்றோ அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
அதேவேளை, நேற்றுக்காலை வெலிகந்தையில் சிறிலங்காப் படையினர் மத்தியில் உரையாற்றிய லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இந்த அறிக்கை பக்கச்சார்பானது என்றும், தவறானது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*************

தந்திரமாக முறியடிக்க முனையும் தாடிக்கார அமைச்சர்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையை தந்திரமான நடவடிக்கைகள் மூலம் தாம் முறியடிப்போம் என சிறீலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கேகலியா ரம்புக்கவெல மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
.நா அறிக்கை தொடர்பில் பதிலை வழங்கவதற்கு தாம் மிகவும் தந்திரமான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் எனவும் .நாவுடன் இணைந்து இயங்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் .நா நிபுணர் குழுவின் அறிக்கை தனிப்பட்ட முறையில் பான் கீ மூனினால் தயாரிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் சிறீலங்கா அரசு மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆனால் தாம் அதனை முறியடிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 26 மற்றும் 27 நாட்களில் சிறீலங்கா அரச குழு ஒன்று இந்தோனேசியாவுக்கு சென்று அணிசேரா நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களை சந்திக்கவுள்ளது.
அதன்போது, .நா அறிக்கை தொடர்பில் ஆராயப்படும். தமது நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
****************

நல்லிணக்க ஆணைக்குழுவின் நாடக கால நீடிப்பு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் காலத்தை மேலும் ஆறுமாதங்கள் நீடிக்குமாறு அரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையடங்கிய கடிதமொன்றை ஆணைக்குழுவின் தலைவர், கடந்த புதன்கிழமை அரசுத் தலைவர் செயலகத்திடம் கையளித்திருப்பதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு பதிவு செய்துகொண்ட சாட்சியங்களை ஆராய்ந்து ஆரம்ப கட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான சாட்சியங்களை ஆராய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதாக இல்லை.
இதனாலேயே ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2002ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரிக்கும் நோக்கில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காட்சி தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சத்துர. டி.சில்வாவிடம் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான கலாநிதி சத்துர.டி.சில்வா இரகசியமான முறையில் சனல்-4 வீடியோ காட்சி தொடர்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே அவர் இரகசியமான முறையில் தனது சாட்சியத்தைப் பதிவுசெய்து கொண்டதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
*************

ஆலோசனை வழங்கும் ஐதேக
மேற்குலகைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக ரஸ்யாவும் சீனாவும் சிறிலங்காவைக் கைவிட்டு விடக் கூடும் என்று .தேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
.நாவின் போர்க்குற்ற அறிக்கையானது சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகள் மீதுமே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது- அது நாட்டின் தனியொரு பகுதி மீது குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.
இந்த அறிக்கையானது .நா பொதுச்செயலரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளதால், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் பெறுமதி வாய்ந்தது.
இது .நா சாசனங்களுக்கு முரணானது என்றும் அனைத்துலகச் சட்டங்களுக்கு முரணானது என்றும் வாதிட்டு எதிர்ப்புத் தெரிவித்தாலும், .நா பொதுச்செயலரின் அங்கீகாரத்துடனேயே அது வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் அதற்கு ஒரு பெரிய பெறுமதி உள்ளது. இதை தவறாகவும் பயன்படுத்த முடியும். முறைகேடாக பயன்படுத்தவும் முடியும்.
2009ம் ஆண்டில் மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் அதை சிறிலங்கா அரசு சமாளித்துக் கொண்டது.
மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் எதுவும் இடம்பெற்றதாக நம்பகமான எந்தவொரு ஆதாரமோ தகவல்களோ முன்வைக்கப்படாததால் அப்போது சமாளிக்க முடிந்தது.
.நாவின் அறிக்கை வெளியான பின்னர், அப்போது ஆதரவளித்த சில நாடுகள் சிறிலங்காவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளலாம்.
சீனாவோ ரஸ்யாவோ தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது. அவை முற்றிலும் ஜனநாயக நாடுகள் அல்ல.
அவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்க சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் போது சமூகமளிக்காமல் ஒதுங்கிக் கொள்ளவும் கூடும்.
ஏனென்றால் அவற்றின் 60 தொடக்கம் 70 வீதம் வரையிலான சந்தை மேற்குலகையே தங்கியுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*******************

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் கவலைப்படும் முன்னாள் நீதியரசர்!
சிறிலங்காவின் அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியானது, சுதந்திரமான நீதித்துறை செயற்பாடுகளில் அரச அதிபரின் மோசமான தலையீட்டுக்கே வழி வகுக்கும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கண்டித்துள்ளார்.
இந்த உத்தேச திருத்தச் சட்டமானது பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக வரையறுப்பதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது.
அத்துடன் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்குகிறது.
இதன்மூலம் சிறிலங்கா அதிபர் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அது அரசியலமைப்புக்கு விரோதமானது.
இதுபொன்றதொரு விடயம் சிறிலங்காவின் 200 ஆண்டுகால நீதித்துறை வரலாற்றிலோ அல்லது உலகில் வேறெங்குமோ நடந்ததில்லை.
உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர்கள் 65 வயது வரை பணியாற்ற முடியும் என்ற நிலையில், ஐந்து ஆண்டுகளில் பிரதம நீதியரசர் மட்டும் 65 வயதுக்கு முன்னரே ஓய்வுபெற வேண்டிய நிலையை 19வது அரசியலமைப்புத் திருத்தம் ஏற்படுத்துகிறது.
இது மிகப்பெரிய முரண்பாடான விடயம்.
சிராணி பண்டாரநாயக்க அடுத்த பிரதம நிதீயரசராக நியமிக்கப்படவுள்ளார்.
அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருக்க வாய்ப்புள்ள போதும், இந்தத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், 65 வயதை எட்ட முன்னரே அவர் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.
சிறிலங்காவின் நீதித்துறை சுதந்திரத்துக்கு இதுபெரும் அச்சுறுத்தலாகவே அமையப் போகிறது.
எல்லா நீதித்துறை அதிகாரங்களையும் இது சிறிலங்கா அதிபரின் காலடிக்குள் கொண்டு செல்லப் போகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
*********************