Sunday 8 May 2011

செய்திகள் 08/05


ஐநாவில் ஆராய முயற்சி?

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு, வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் புரியப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அந்த அறிக்கையின் அடிப்படையில் .நா. மனித உரிமைகள் சபையில் இந்த விடயத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று நியூயோர்க்கில் உள்ள .நா. வளாகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், அனைத்துலக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ராஜதந்திர முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
.நா. பாதுகாப்புச் சபையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்ற நிலையில், .நா. மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்கா போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான அவரசகூட்டம் ஒன்று நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
இதனை .நா. மனித உரிமைகள் சபைக்கான ஸ்ரீலங்கா பிரதிநிதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.
.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் நவநீதம்பிள்ளை மற்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ராஜதந்திரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
.நா. மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக 2009ஆம் ஆண்டில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.
எனினும், தனது ஆதரவு சக்திகளின் துணையுடன் அந்தப் பிரேரணையை ஸ்ரீலங்கா தோற்கடித்தது.
அதனை அடுத்து இம்முறை அனைத்துத் தரப்புக்களும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தோற்றுவிப்பது குறித்து அடுத்தவாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆராயப்படும் என்று நியூயோர்க் தகவல்கள் கூறுகின்றன.
**************

அறிக்கையை ஆராய கொழும்பு செல்லும் இந்திய குழு!
ஸ்ரீலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள .நாவின் அறிக்கையால் எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா அரசுடன் கலந்துரையாடுவதற்கு இந்தியாவின் அதிகாரம்மிக்க உயர்நிலைக் குழுவொன்று இந்தவாரம் கொழும்பு செல்லவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு செல்லும் இந்தக் குழுவில், இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, லலித் வீரதுங்க குழுவினரை ஸ்ரீலங்கா அதிபர் புதுடெல்லிக்கு அனுப்ப முயற்சித்த போது ஜுன் மாதத்துக்கு முன்னர் அவர்களைச் சந்திக்க நேரமில்லை என்று கூறிய இந்தியா, தமது உயர்நிலை அதிகாரிகள் குழுவை திடீரென கொழும்புக்கு அனுப்பவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவைச் சந்திக்க எதிர்வரும் 16ம் நாள் புதுடெல்லி செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியாவின் உயர்மட்டக்குழு கொழும்பு செல்லவுள்ளது.
இந்திய அதிகாரிகளின் குழு ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.நாவின் அறிக்கையை அடுத்து எழுந்துள்ள நிலையை சமாளிக்க பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை வேகப்படுத்துமாறு ஸ்ரீலங்காவிடம் இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதேகருத்தையே, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் பிளேக்கும் கொழும்பு சென்றிருந்தபோது வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***************

ஸ்ரீலங்கா தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவசர விவாதம்!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மனித படுகொலைகள் போரக்குற்றங்கள் தொடர்பாக 27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
கிறீன் கட்சியைச்சேர்ந்த 50 உறுப்பினர்கள் எழுத்து மூலம் சமர்ப்பித்த கோரிக்கையை அடுத்து இந்த விவாதம் நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மனிதப்பேரவலமும், போர்க்குற்றமும் அங்கு இடம்பெற்றதற்கான ஆதாரங்களும் சாட்சிகளும் இருப்பதாக நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று நடைபெற உள்ளது.
இந்த விவாதம் நடைபெறுவதை புறுச்செல்ஸில் உள்ள இலங்கைக்கான தூதர் ரவிநாத் ஆரியசிங்கவும் உறுதிப்படுத்தி உள்ளார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
**************
சுதந்திர விசாரணையை வலியுறுத்தும் பிரித்தானியா
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான- நம்பகமான விசாரணை நடத்தப்படுவதையே பிரித்தானியா விரும்புவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை .நாவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக .நாவுக்கு பரிந்துரை செய்ய பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது? சிறிலங்கா கொமன்வெல்த் உறுப்பு நாடாக உள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறதா? - என்று கடந்த செவ்வாய்க்கழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சைமன் ஹியூஜெஸ், கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக், இது ஒரு முக்கியமான விடயம். இந்த அறிக்கையைப் பெறுவதற்கு .நா பொதுச்செயலருக்கு பிரித்தானிய அரசாங்கம் பலமான ஆதரவை வழங்கியது. இந்த அறிக்கையை தாம் கவனமாக ஆராய்ந்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப் போகிறது என்றும் தாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் அதுபற்றி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அது தெளிவுபடுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, கடந்த வெள்ளியன்று பொதுச்சபையில் பிரித்தானியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தகவல்வெளியிடுகையில், ஸ்ரீலங்கா அரசாங்கம நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் மே 15ம் நாள் எதிர்பார்ப்பதாகவும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்படுவதையே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தமது கரிசனைகளையும் தாம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் என்ன கூறப் போகிறது என்பதை அனுமானிக்க முடியாதுஎனவும் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தாம் ஸ்ரீலங்கா அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
***************
உலகத் தமிழர் பேரவை - பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு சந்திப்பு
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை, மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அனைத்துலக ரீதியாக மேற்கொண்டுவரும் விடயங்கள் பற்றி இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இயக்குனர் அன்றூ பற்றிக் , துணை இயக்குனர் வில்லியம் மிடில்ரன் , மற்றும் கிறிஸ்ரீன் மைக்நீல் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் சார்பில் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார், பிரித்தானிய தமிழர் பேரவையின் அங்கத்தவர்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் மரவுவாதக் கட்சி  அங்கத்தவர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவின்  இலஙகைத்தீவு பற்றி அறிக்கைக்கு வரவேற்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதற்கு உலகத் தமிழ் சமூகத்தின் சார்பில் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை பற்றியே இந்த சந்திப்பில் பிரதானமாகப் பேசப்பட்ட போதிலும், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள், போர்க்குற்ற ஆதாரங்களை வெளிக்கொண்டு வருதல், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலை பற்றியும் இந்த சந்திப்பில கலந்துரையாடப்பட்டுள்ளது.
***************

அறிக்கையை ஆதரித்து 2கோடி கையெழுத்து
ஸ்ரீலங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத் தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் வழக்குத்தொடுநருக்கு முன் பாரப்படுத்துமாறும், நிபுணர்குழுவின் பரிந்துரையின்படி விசாரணைக்கான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் ஏற்பாட்டில் தமிழகத்தில் உள்ள பல அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் குறித்து பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் குறைந்ததது இரண்டு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டுமென உரிமையுடன் தமிழக உறவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
****************