Sunday 1 May 2011

செய்திகள் 01/05


அறிக்கைக்கு பதில்!

சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் .நா அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் பதில் அளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நியுயோர்க்கில் உள்ள .நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஊடாக, வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கையெழுத்திட்ட சிறிலங்கா அரசின் பதில் .நா பொதுசெயலரிடம் கையளிக்கப்படவுள்ளது.
.நா அறிக்கை வெளியானதன் பின்னர், சிறிலங்காவின் அரச தரப்பில் இருந்து பல்வேறு கருத்துகள் வெளியான போதும்- இதுவே அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, .நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
பிரதானமாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் பணிக்காலத்தை நவம்பர் 15ம் நாள் வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அதிபரால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் நிபுணர்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளதால், அடுத்த ஆறுமாத காலத்தில் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அது மேற்கொள்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தினதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினதும் பல விதிகளை தளர்த்தவும் முடிவு செய்துள்ளது.
எந்தெந்த விதிகளை தளர்த்தலாம் என்பது பற்றிய அவசர ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
.நாவுக்கு அளிக்கப்படவுள்ள சிறிலங்காவின் பதில், நிபுணர் குழுவுக்கு அரசாங்கம் எதற்காக அங்கீகாரம் வழங்கவில்லை என்பதற்குரிய விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
பக்கசார்பு நிறைந்ததாகவும், உள்நாட்டில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெறும் சூழலில் இது வெளியாகியுள்ளது குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும் அரசின் பதில் அமையவுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட பான் கீ மூன் எடுத்த முடிவுக்கும் இந்தப் பதிலில் சிறிலங்கா அரசு எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளது.
அதேவேளை .நாவின் மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மாத கூட்டத்தொடரில் இந்தவிவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவை கொண்டு முறியடிப்பதற்கும் சிறிலங்கா அரசு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
*******************


தேரர் தீக்குளிக்க தயார்?

.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர்.
வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர்.
அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார்.
**************

ஆதரவு கோரி மகிந்த கடிதம்!

.நா பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அந்த நாடுகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை அனுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச்சபை மற்றும் மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக சிறிலங்கா அரசின் உயர்மட்டக் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தேடும் வகையிலேயே இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வெசாக் பண்டிகைக்குப் பின்னர் அரசகுழுவின் பயணங்கள் இந்தப் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான இந்தக் குழுவில் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
வடக்கு,கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் இந்தக் குழு ரஸ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லவுள்ளது.
.நா பாதுகாப்புச் சபை மற்றும் மனிதஉரிமைகள் பேரவை ஆகியன அடுத்த மாதம் கூடவுள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளது.
இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாகளுக்கு சிறிலங்கா அதிபர் பயணம் செய்து ஆதரவு தேட வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்வது தொடர்பாக இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, ஏனைய பல நாடுகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அனுப்பி ஆதரவு தேட மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
****************

பீரிஸ் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் நாள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
.நாவின் போர்க்குற்ற அறிக்கையை அடுத்து, சிறிலங்காவுக்கு எதிராக .நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இதை முறியடிப்பதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோரியே அவர் புதுடெல்லி செல்லவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, .நாவின் போர்க்குற்ற அறிக்கை மற்றும் அதை எதிர்கொள்வது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் பீரிஸ் இந்தோனேசியாவின் சுற்றுலா மையமான பாலிக்கும் செல்லவுள்ளார்.
அங்கு கொமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில் கலந்து கொள்ளும் அவர், சிறிலங்காவுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
அதேவேளை, அமைச்சர் பீரிசின் புதுடெல்லிப் பயணத்தை அடுத்து சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த மாதம் புதுடெல்லி செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரை உள்ளடக்கிய குழுவே புதுடெல்லி செல்லவுள்ளது.
இவர்களின் பயணத்துக்கு முன்னர் தாமதமாகியுள்ள இந்தியாவின் திட்டங்களை- குறிப்பாக சம்பூர் அனல்மின்நிலையம் மற்றும காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திடங்களை- நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கும் தடைகளை நீக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணமாகச் சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச நாளை கொழும்பு திரும்பவுள்ளார்.
இவர் மாலைதீவில் இருந்து நாளை மாலை கொழும்பு செல்லும் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் பிளேக்கை சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************
எதிர்க்க தயார் - ரஸ்யா!

சிறிலங்காவுக்கு எதிராக .நாவின் எந்தவொரு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்கும் என்று கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு தண்டனை வழங்கவோ அதை அவமானப்படுத்தவோ சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ரஸ்யா எதிர்த்து நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக தாம் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டோம் எனவும் ஆனால் அதைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் எதுவும் கொண்டு வரப்பட்டால், ரஸ்யா வீட்டோவை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
.நா அறிக்கையை விமர்சிக்கும் வகையிலான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதற்கு ரஸ்யா அதரவளிக்கும்.
எவ்வாறு இருந்தபோதும், பாதுகாப்புச்சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரப்படுவதற்கான நகர்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் சிறிலங்காவுக்கு ஆதரவாகவே ரஸ்யா நிற்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
******************

அறிக்கையை ஆதரித்தால் பேச முடியாது - ரத்தினசிறி

.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தன்னால் பேச்சு நடத்த முடியாது என்று கூறியே, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரசதரப்புப் பேச்சுக்குழுவில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பேச்சுக்குழுவில் இருந்த விலகிக் கொள்வதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடந்தவாரம் தான் கடிதமூலம் அறிவித்துள்ளார்.
இந்தக் கடித்திலேயே சிறிலங்காப் படையினர் மீது போர்க்குற்றம் சுமத்தி வெளியாகியுள்ள .நாவின் அறிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப்பகிர்வு பற்றி தன்னால் பேச்சு நடத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்தே ரஜீவ விஜேசிங்க அரசதரப்பு பேச்சுக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அந்த வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
************