Monday 9 May 2011

செய்திகள் 09/05


இராணுவ நிர்வாக மயமாகும் ஸ்ரீலங்கா

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்த சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு காலி, மாத்தறை நகர சபைகளின் நிர்வாக கண்காணிப்பு அதிகாரிகளாக இரண்டு பிரிகேடியர் தர இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர சபைகளின் நிர்வாக நடவடிக்கை தொடக்கம் நகர ஆணையாளரின் அதிகாரங்கள் வரை அனைத்தையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
அத்துடன் நகர சபையின் நகர ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கூட்டமொன்றையும் நடாத்தியுள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் நேரடி உத்தரவின் பேரிலேயே தாம் நிர்வாக கண்காணிப்பு அதிகாரிகளாக கடமையாற்றவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அது மட்டுமன்றி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கூட தமது அதிகாரப் பிரதேசத்துக்குள் மாற்றுமளவுக்கு அவர்கள் பாதுகாப்பமைச்சின் மூலமாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு பிரதேச செயலக அலுவலகங்களினதும் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிக்க தலா ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீதம் நியமிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
********************
தொடரும் இனஅழிப்பு

இலங்கையின் வடக்கே யாழ் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாக்காளர் பதிவுகளின்படி, ஏறக்குறைய 45 வீதம் குறைவடைந்துள்ளதாக முதற்கட்ட கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கின்றது.
கடந்த வருடம் வரையிலான பதிவுகளின்படி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்கள் இருந்துள்ளனர்.
ஆயினும் தற்போதைய புதிய பதிவுகளின்படி, இந்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்திருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் வாக்காளர் பதிவுகள் புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
ஆயினும் இந்த வருடம் இந்தப் பதிவுகள் விசேட கவனமெடுத்துச் செய்யப்பட்டதன் மூலம், ஏற்கனவே பதிவுகளில் இருந்த வெளிநாடுகளில் உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதையடுத்து, யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பின்படி தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றார்கள்.
வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையடுத்து, பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் நான்கு வருடங்களில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின்போது குறைவடையலாம் என கூறப்படுகின்றது.
அத்துடன் வாக்காளர்கள் மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் செய்யப்படடு வருகின்ற தேர்தல் மாவட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள், மேல் படிப்பிற்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் எண்ணிக்கை என்பவற்றிலும் வீழ்ச்சி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
*****************

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தாம் இதுவரை வகித்துவந்த நிர்வாக பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விலகப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமது வேதன நெருக்கடியை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒரு கட்டமே இதுவென பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
எனவே நிலைமைகளை புரிந்து அரசாங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனங்களை உயர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாத பட்சத்தில் இதனையும் விட மேலும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது சம்மேளனத்தில் நிறைவேற்றுக்குழு கூடவுள்ளது அதன்போது தற்போதைய நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
**************
இந்திய குழு வருவது தெரியாது - ஸ்ரீலங்கா
இந்திய உயர்மட்டக் குழுவினர் இலங்கை வருவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கவில்லையென வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இம்மாதம் 16 ஆம் திகதி இந்தியா செல்வது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், இவ்விஜயத்தின் போது .நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான .நா. நிபுணர் குழு அறிக்கையின் உண்மைத் தன்மை தொட்ரபில் சீனா மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழு விளக்கமளிக்கவுள்ளார்.
*****************

ஐரோப்பிய ஒன்றியத்தை எப்படி ஏமாற்றலாம் - சிந்திக்கும் ஸ்ரீலங்கா
.நா.நிபுணர் குழுவின் அறிக்கையின்படி இலங்கையின் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை விவாதம் ஒன்று நடைபெற உள்ளது எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ள இந்த விவாதம் ஸ்ரீலங்காவுக்குப் பாதகமாக அமைந்து விடாமல் இருக்க ஸ்ரீலங்கா பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதுடன், பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
.நா.நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதை அடுத்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 50 பேர் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா தொடர்பாக அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
.நா.நிபுணர் குழு அறிக்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள விவாதம் கடுமையாக்கி விடக்கூடும் என ஸ்ரீலங்கா அச்சம் கொண்டுள்ளது.
*****************

தென்னாபிக்காவை இலக்கு வைக்கும் ஸ்ரீலங்கா
.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சி வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் கவனம் தென்னாபிரிக்கா மீது திரும்பவுள்ளது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் அறிக்கையால் விசனமடைந்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இராஜதந்திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு கூட்டிணைவான மூலோபாயம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
தாம் விரைவில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசுக்கு நிலைமைகளை விளக்குவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பிரிட்டோரியாவில் உள்ள தமது தூதுவர் டி.விஜேசிங்கவிடம் இருந்து விளக்க அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
இந்த அறிக்கையைத் தாம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் .நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் இருந்து ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியிடம் இருந்தே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
******************