அடுத்தது என்ன? ஆலோசிக்கும் ஐநா செயலாளர்
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து பான் கீ மூன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக, ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நேற்று இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் கொடுக்காது என்றும், நல்லிணக்க முயற்சிகளை விளக்கும் கடிதம் ஒன்றையே ஐ.நா பொதுச்செயலருக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறியுள்ளது குறித்து இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒரு கடிதத்தை அனுப்பினால், அதுவும் ஒரு பதிலாகவே கவனத்தில் கொள்ளப்படும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.
ஐ.நா பொதுச்செயலர் கேட்டுக்கொண்டால், பாதுகாப்புச்சபையில் அல்லது பொதுச்சபையில்,அல்லது மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு இடம்பெறுமா என்று இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் கேட்டது.
அதற்கு பர்ஹான் ஹக், அடுத்து எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இதுபற்றி ஐ.நா பொதுச்செயலர் அரசுகள் அங்கம் வகிக்கும் அமைப்பு ஒன்றுக்குப் பரிந்துரை செய்வாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பர்ஹான் ஹக், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதேவேளை, ஐ.நாவுக்கான சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடுகள் தொடர்பான ஆலோசகர் ராதிகா குமாரசாமியிடம் நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஐ.நாவில் என்ன செய்ய முடியும் என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது, இந்த விவகாரத்தை உறுப்பு நாடுகளில் ஒன்று கையில் எடுத்தால் அதன் அடிப்படையில் பொதுச்செயலர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஒரு சபையிலாவது சிறிலங்கா விவகாரம் விவாதத்துக்கு வந்தால், சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்ற வகையில் தான் அதிலிருந்து விலகியே இருப்பேன் என்றும் ராதிகா குமாரசாமி மேலும் கூறியுள்ளார்.
*****************
ஐநா தூதுக்குழு - யாழ் இராணுவ கட்டளைத் தளபதி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழு ஒன்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்துப் பேசியது.
இச்சந்திப்பு பலாலியிலுள்ள தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் குழு யாழ். குடாநாட்டில் நடைபெறும் கண்ணிவெடி மற்றும் மனிதாபிமான பணி பற்றிய பிந்திய நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காகவே யாழ்ப்பாணம் சென்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது யாழ். யூ.என்.எச்.சி.ஆர். கள அலுவலகத்தின் தலைமை அதிகாரியான இந்துமதி மோகனதாஸ், சிறுவர் பாதுகாப்பு நிபுணரான அல்பிறட் முட்டிட்டி, ஐ.நா. அலு வலகத்தின் யாழ்ப்பாணத்துக்கான பாதுகாப்பு இணைப்பாளர் டமஸகஸ்மாச்சரி ஆகியோருக்கு தளபதி ஹத்துருசிங்க யாழில் கண்ணிவெடி அகற்றும் பணியின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தார்.
****************
த.தே.கூட்டமைப்பு - ஸ்ரீலங்கா அரசு பேச்சு
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா அரசிடம் இன்றைய பேச்சுவார்த்தகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளிக்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் - யுவதிகளின் எண்ணிக்கை, அவர்கள் எந்தெந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கையே அரசாங்கத்திடம் இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இன்று நடைபெறும் ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்று சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
****************
போர்க் குற்றத்திலிருந்து தப்ப வழி தேடி புத்த பகவானிடம் மனு!
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், படையினருக்கும் ஆசிவேண்டி ஜெய பிரித் எனப்படும் பாரிய பௌத்த மத பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நேற்றுமுன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறிலங்காவின் பல பாகங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்ட 3000 பௌத்த பிக்குகள் பங்கேற்றனர்.
அஸ்கிரிய பீடாதிபதி வண. உடுகம புத்தரகித்த தேரர், மல்வத்தைபீட அனுநாயக்கர் வண. நியங்கொட விஜிதசிறி தேரர், அமரபுர சங்கசபாவின் தலைவரும் தர்மபாலராமயவின் பிரதம விகாராதிபதியுமான வண.கொட்டுகொட தம்மவன்ச தேரர் ஆகியோரும் இந்த மாபெரும் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர்கள் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச மற்றும் முப்படைகளினதும் தளபதிகளும் கலந்து கொண்டனர்.
*******************
கலந்து கொள்வார்களா? விடைதேடும் ஸ்ரீலங்கா!
ஸ்ரீலங்கா இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தமிழினத்தை மகிந்த ராஜபக்ச அரசு அழித்திருந்தது.
இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயலர் பதவி தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக ஒபாமா தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கம் பெற்று பெரும் பங்காற்றியது.
இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஒருங்கிணைப்பு பணிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் நேரடியாக செய்து வருவதாக சிங்கள உளவு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டு பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்கி அதன் கட்டமைப்பை சீர்குலைக்க ஸ்ரீலங்கா அரசு பலத்த முயற்சி எடுத்து வருவதும் அதன் பின் புலத்தில் தமிழர்களை வைத்து அதற்கான மோதல்களை உருவாக்கி சீர்குலைவு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல கோடிட்டு காட்டுகின்றன.
இந்த முக்கியமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் நாடு கடந்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக திகழும் என்பதும் உலகளாவிய ரீதியில் இவை தமிழர்களின் விடுதலைப் போருக்கு கிடைத்த முதல் வெற்றியுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
ஐரோப்பிய நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா விவகாரம் இன்று!
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடபிலேயே இந்த பிரேணை நிறைவேற்றப்படவுள்ளது
இது தொடர்பான விவாதம் ஐரோப்பிய நாடர்ளுமன்றத்தி;ல் பிரசல்ஷ் நகரில் உள்ளுர் நேரமான பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற யுத்தசூழ்நிலை தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தப்பிரேரணையை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் கோரிக்கையில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்
இந்தநிலையில் பிரேணை நிறைவேற்றப்பட்டதும் அது ஐக்கிய நாடுகளி;ன் செயலாளர் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசாங்கங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
இதேவேளை இந்தப்பிரேரணையின் மூலம் இலங்கைக்கு எதிராக வர்த்தக தடை கொண்டு வரப்படும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ரத்துச்செய்ததன் பின்னர் இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடர்ளுமன்றத்தில் நடத்தப்படும் முதலாவது விவாதம் இதுவாகும்.
**************