Wednesday 25 May 2011

செய்திகள் 25/05


சீனா ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்காவுக்கு முழு ஆதரவும் வழங்கப்படுவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் ஸ்ரீலங்கா அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்று சீனா முழுமையாக நம்புகின்றது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங்ஜிச்சி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பீஜ்ஜிங் சென்ற ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின்போது .நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்தும், அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கினார் என்று கொழும்பில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் எல்லாப் பிரச்சினைகளையும் ஸ்ரீலங்கா அரசும் மக்களும் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வலுவும் கொண்டிருக்கிறார்கள் என்று சீனா முழுமையாக நம்புவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங் ஜிச்சி தெரிவித்துள்ளார் என்றும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் என்ற இலக்குகளை ஸ்ரீலங்கா அடைவதற்கு சீனா என்றும் துணை நிற்கும் என்றும் ஜங் ஜிச்சி தெரிவித்தார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சீனாவுக்கு வருகை தருவதற்கான அழைப்பு ஒன்றையும் அமைச்சர் பீரிஸிடம் அவர் விடுத்தார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், அவரது சீனப் பயணம் சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
***************

மாவீரர் துயிலும் இல்லத்தை அழிக்கும் இனவழிப்பு இராணுவம்

வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் விதைக்கப்பட்ட 800 மாவீரர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டு இந்த முகாம் அமைக்கப்படுவதாக அவர்களின் உறவினர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கவலையுடன் முறையிட்டுள்ளனர்.
தமது உடன் பிறப்புக்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த நினைவுக் கல்லறைகள் அவர்களது உடல்கள் சிதைக்கப்படுவது வேதனை அளிப்பதாக அந்த மக்கள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்தனர்.
இத்தகைய செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியுள்ளனர்.
**********

ஆலோசனை கூறும் கருஜெயசூரியா

அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி தேசிய பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அறிவுரை வழங்கும்போது அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலவே செயற்படுகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத தற்போதைய சூழலில் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிராக அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப்படுகின்றமையால் மேலும் சர்வதேச அழுத்தங்களே அதிகரிக்கும்.
எனவே அரசு உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கவேணன்டும் என்றும் அவர் கோரினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட விசேட செய்திக் குறிப்பிலேயே கருஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தவெற்றியின் பின்னர் நாட்டின் சகல இனங்களையும் ஓரணிப்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.
இதில் பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களை விலக்கி சகல இனமக்களையும் ஒற்றுமையாக இணைத்து நாட்டில் மனித உரிமைகளை பாதுகாத்து ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் தற்போதைய பணியாக அமையவேண்டும்.
2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் .தே. மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்க மாற்று வழிகளில் நடவடிக்கை எடுத்தது.
ஆனால் அரசாங்கம் தற்போது பயங்கரவாத சூழல் இல்லாத நிலையில் அவசர காலச் சட்டத்தையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் விலக்கிக் கொள்ளாது அச்சட்டங்களை தொழிற்சங்க நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்களை தண்டிப்பதற்காக பயன்படுத்தியது.
அத்தோடு நல்லாட்சியை உறுதிப்படுத்திய 17வது திருத்தச் சட்டத்தை அகற்றி 18வது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைத்து நாட்டின் ஜனநாயகத் தன்மையை கேள்விக் குறியாக்கியது.
இதனால் சர்வதேச சமூகம் நேரடியாகவே இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட ஆரம்பித்தது.
அதுமட்டுமன்றி கடந்த வெசாக் வாரத்தில் கூட அரசு கருணை ஆதரவை போதித்து பிரசாரம் செய்தது.
ஆனால் யுத்த வெற்றியின் முக்கியஸ்தரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை சிறையிலிட்டு வதைத்துள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் ஸ்ரீலங்கா சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலையே உருவாகியுள்ளது.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகளும் உள்ளன.
எனவே மக்களை ஏமாற்றும் அரசு நாட்டின் முன்னுள்ள ஆபத்தான சூழலை தெளிவுபடுத்த தவறியுள்ளது என்றும் கருஜெயசூரியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
**************
இனவழிப்பு இராணுவ முகாம் பரம்பலை தடுக்க கோரிக்கை
நாடு முழுவதிலும் இராணுவ முகாம்களை நிறுவுவதற்கான பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமானது தற்போதிருக்கும் குடும்ப ஆட்சியை எதிர்காலத்தில் இராணுவ ஆட்சியாக மாற்றியமைப்பதற்கான முதற்கட்டமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
புலிகளின் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக சர்வதேசத்துக்கு தம்பட்டம் அடிக்கின்ற நிலையில் உள்ளுரிலோ அல்லது அந்நிய சக்திகளிடத்திருந்தோ இலங்கை மண்ணுக்கு பாதகம் இல்லை என்பது தெளிவுபட்டிருக்கின்ற போதிலும் இவ்வாறான இராணுவ முகாம்கள் நிறுவப்படுவதற்கான அவசியம் அவசரம் என்ன என்றும் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டுமென பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாடு முழுவதிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அரசின் திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இன்றைய சூழலில் அவசரகாலச்சட்டம் என்பது அவசியமற்றது. எனவே அது இரத்துச் செய்யப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையே ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றது.
இதனையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாகிய தாமும் தொடர்ச்சியாக கூறிவருவதாகவும் அதேபோல் அவசரகாலச்சட்டத்துக்கு பாராளுமன்றத்துக்கு தமது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது வரிசையில் அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக்கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து கொண்டிருக்கின்றன.
அவசரகாலச் சட்டத்துக்கான தேவை அற்றுப்போய்விட்டதை அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற அதேவேளை பாராளுமன்றத்தில் அதற்கான பிரேரணைக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இந்தியாவும் இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றது.
எனினும் எந்தத்தரப்பினதும் அறிவுறுத்தல்களை அல்லது வலியுறுத்தல்களையும் ஏற்றுக் கொள்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இல்லை என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
**************

அமைச்சரை கண்டிக்கும் தேரர்
சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசநாயக்க ஒரு ஒழுக்கம்கெட்ட மனிதர் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே மல்வத்த பீட மகாநாயக்கர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் மகாநாயக்கர்களின் பேச்சுக்களையோ ஆலோசனையையோ கூடக் கேட்பதில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் நிலை மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ள மல்வத்த பீடாதிபதி, அண்மையில் பிக்கு மாணவர் ஒருவரின் மரணம் பற்றி எஸ்.பி.திசநாயக்க வெளியிட்ட கருத்து தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
*************

அரசியல் மயமாகும் இனவழிப்பு இராணுவப் படை
மாத்தறையிலுள்ள கோட்டை இராணுவ முகாமின் இராணுவத்தினர் சிலர் மாத்தறை மாவட்ட நீதிபதி லலித் குமார மீது நடத்திய தாக்குதலை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதால் ஸ்ரீலங்கா அரச தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வக ஆராச்சிகே தயாரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட நீதிபதி மீது நடத்ததப்பட்ட தாக்குதலை எதிர்த்து நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நீதிபதி மீதான தாக்குதலை மூடிமறைக்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன், சட்டத்தரணிகளின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர், மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கபில மனம்பேரியைப் பயன்படுத்தி வருகிறார்.
பல காலமாக நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டினால் மாத்தறை இராணுவ முகாம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த முகாமின் கட்டளைத் தளபதியான கெப்டன் பாரத கொடிதுவக்கு, நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் ஒருவரின் சகோதரராவார்.
அத்துடன், மாத்தறை தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் அதிகாரபூர்வமற்ற வகையில் கடமையாற்றுகிறார்.
இந்த நபர் நீலப்படையணி உறுப்பினர்களுடன் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் மாத்தறை நகரில் சுற்றித்திரிவதைப் பழக்கமாக கொண்டிருப்பதாகவும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
*************