வழக்கை மீளப்பெற ஆர்வம்
சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளைக்கொடி வழக்கை கைவிடுவது பற்றி சிறிலங்கா அரசதரப்பு இரகசியமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை அலரி மாளிகைக்கு அழைத்து இதுபற்றி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்சவுடனும் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது சரத் பொன்சேகா சில நிபந்தனைகளுக்கு இணங்கினால், தாம் வெள்ளைக்கொடி வழக்கை கைவிடத் தயாராக உள்ளதாக கோத்தாபய ராஜபக்ச, கூறியுள்ளார்.
எனினும் பொன்சேகா தரப்பில் இதற்கு இன்னமும் சரியான பதில் அளிக்கப்படவில்லை என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை. சிறிலங்கா அதிபருக்கும், எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கும் இடையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள், பொன்சேகா வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதுபற்றிய விபரங்களை வெளியிட முடியாது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
*********************
ஏமாந்த பீரிஸ்
புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி ஒப்ரோய் விடுதியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன், வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ், சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ஆதரவைத் தேடியே தாம் புதுடெல்லி செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் முன்னதாக கொழும்பில் கூறியிருந்தார்.
ஆனால் நேற்றைய சந்திப்புத் தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவோ அதுபற்றி நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்தோ எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் விடயத்தில் சிறிலங்கா கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ள விவகாரத்துக்கே, அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவு இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சாத்தியமான வழிகளில் சிறிலங்காவுக்கு இந்தியா உதவி வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, நேற்றைய சந்திப்பின்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்தியப் பயணம், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான சந்திப்பு ஆகியன தொடர்பாகவும் இரு நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்ற அதேவேளை, நேற்றைய சந்திப்பின் போதும் பிடி கொடுக்காத வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு அழைத்து நேரடியாக அழுத்தம் கொடுக்கவே இந்தியா முனைவதாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி சென்றிருக்கும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் நேற்று காலை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இதேவேளை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திருப்பிய பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்திய அரசின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு வருகை தருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
அமைச்சர் பீரிஸ் இந்திய விஜயத்தையடுத்து சீனா, இந்தோனேசியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்து சர்ச்சைக்குரிய ஐநா அறிக்கை தொடர்பான ஸ்ரீலங்காவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் அவர் கூறினார்.
********************
வாழத்துக் கூறி வாய்புக் கோரிய ததேகூ
இலங்கைத் தமிழர்கள் அமைதியான முறையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண தோளோடு தோள் நின்று உதவுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசுவதற்கும் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக நேற்றுப் பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்துள்ளது.
எமது குறிக்கோளை அடைவதற்குத் தங்களது பூரண ஒத்துழைப்பை நாடி நிற்கும் அதேவேளையில், விரைவில் தங்களுக்கு உகந்ததொரு வேளையில் இந்த விடயங்கள் குறித்து நேரடியாக உரையாடுவதற்கு தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
************
அங்கீகாரம் கோரும் த.தே.ம.மு
தமிழீழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவானது தொப்புள்கொடி உறவுபோன்றது.
அத்தகைய முக்கியத்தும் வாய்ந்த தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தங்களது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடன் இணைந்த கட்சிகளும் பெரு வெற்றியீட்டியுள்ளமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராட்டி வாழ்த்துகின்றது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், அவர்களது அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உன்னிப்பாக அவதானித்துள்ளதுடன், அக்கருத்துக்களை தாம் வரவேற்பதாகவும் அந்தக் கட்சி தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள வாழத்துக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈழத் தமிழ் மக்களை இன அழிவில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதற்காக, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை அங்கீகரிக்கும் தீர்மானத்தினை தமிழக சட்டசபையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*************
காணியை அபகரிக்க முயலும் படையினர்
கிளிநொச்சி, அக்கராயன் குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணியை இராணுவத்தினரின் பாவனைக்கு முழுமையாக வழங்குமாறு இராணுவத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் அக்கராயன் குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கோரப்பட்டது.
குறித்த காணி 25 தனி நபர்களுக்கு உரிமையானதெனவும், இதனைத் தற்போது ஏழை விவசாயிகளே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இதனை காணிகளற்ற தற்போது இதில் செய்கைகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அமைப்பினரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதன் போது குறித்த பகுதிக்கு பொறுப்பாகவுள்ள இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அத்தப்பத்து கருத்துத் தெரிவிக்கும் போது இக் கரும்புத் தோட்டத்தில் 250 ஏக்கர் காணி இருப்பதாகவும் அதனைத் தமது தேவைக்கு பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
யாழ். பலாலி மற்றும் இயக்கச்சி ஆகிய பகுதிகளில் தமது படையணிகள் பொதுமக்களின் காணிகளில் இருப்பதாகவும், அக்காணிகளை உரியவர்களிடம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அந்த இடங்களில் உள்ள படையினரை இந்தப் பகுதிக்கே மாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இக்காணி அரசுக்குச் சொந்தமான காணியாகவே காணப்படுவதுடன் முன்னர் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் இதனைத் தற்போது தாங்கள் விவசாயப் பண்ணையாகப் பயன்படுத்தப் போவதாகவும் வேறுயாரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் காணியுடன் தொடர்புடைய பொதுமக்களின் பிரதிநிதிகள் எவரும் சமுகம் கொடுக்காத நிலையில் அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடி அதன்படி செயற்பட வேண்டும் எனப் பலராலும் கருத்துக் கூறப்பட்டது.
இதனையடுத்து அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
***********
அகிம்கை சொன்ன புத்தரின் அடாவடி பக்தர்கள்
வரும் 18ம் திகதி கொண்டாடப்படவுள்ள வெசாக் பண்டிகைக்காக வடமாகாணம் முழுவதிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அலங்காரக் கூடுகளையும் பந்தல்களையும் அமைக்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நில்லாது சிறந்த கூடுகளுக்கும் அலங்காரங்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவினால் அதிர்ச்சியும் விசனமும் அடைந்துள்ள ஆசிரிய சமூகத்தவர்களும் அரசாங்க உத்தியோகத்தர்களும் மனம் ஒப்பாமல் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேண்டா வெறுப்புடன் செயற்படுகின்றனர்.
ஏற்கனவே வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு மு;ககியமான இடங்களில் காணிகள் அபகரிக்கப்பட்டு புத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாகவே புத்தமதத்தினைப் பின்பற்றச் செய்யும் நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபட்டு தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதையிட்டு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் விசனமடைந்துள்ளனர்.
*************