Thursday 5 May 2011

செய்திகள் 05/05


அதிகாரங்களை பகிர கோரும் அமெரிக்கா

இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
அதுவே நீடித்த அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற பிளேக் நேற்று அமைச்சர் பீரிஸ் மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிளேக், தமிழ்ச் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரங்களைக் கொழும்பு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை உறுதியளித்திருக்கின்றது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
எனினும் உறுதி மொழிகளில் அல்லாமல் செயலில் காட்ட வேண்டும் என்றும் பிளேக் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரிகள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறுவார்களாயின், சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலம் அதனை நிறைவேற்ற வேண்டிவரும் என்றும் பிளேக் எடுத்துக் கூறினார்.
முதலில் விசாரணைக்கான பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக் கொள்கிறதா என்பதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
*****************

கனடாவில் பேரணி

சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள .நா அறிக்கைக்கு ஆதரவாக கனடாவில் உள்ள தமிழர்கள் நாளை பாரிய பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கனடாவின் குளோப் அன் மெயில் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரொரன்ரோவில் அமெரிக்கத் தூதரகம் அருகே உள்ள பல்கலைக்கழக அவென்யூவில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 8 மணிவரை இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போதும் இதே இடத்தில் தான் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாகவும் குளோப் அன் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
அனைத்துலக சக்திகளிடம் குறிப்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு கோருவதே இந்தப் பேரணியின் நோக்கம் என்று கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை குளோப் அன் மெயிலுக்குத் தெரிவித்துள்ளார்.
****************

பரிந்துரைகளை நிறைவேற்ற கோரும் பான் கீ மூன்

.நா நிபுணர்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று .நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன நேற்று முன்தினம் .நாபொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை .நா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் .நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்கி தகவல் வெளியிட்டார்.
அத்துடன் கொழும்பிலுள்ள .நா பணியகம் மற்றும் சிறிலங்காவில் உள்ள .நா பணியாளர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்பதையும் பாலித கொஹன்னவிடம் பான் கீ மூன் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.
.நாவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ பதிலுக்காக .நா காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள மார்ட்டின் நெஸ்ர்கி, இந்த அறிக்கையை தனது வெள்ளைக்கொடி வழக்கில் பயன்படுத்தவுள்ளதாக சரத் பொன்சேகா கூறியுள்ளது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
***************

வெளிநாட்டு தலையீட்டுக்கு இடமில்லை - ஸ்ரீலங்கா

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா மற்றும் சிவாஞானம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சி மீண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சக்திகளை தலையீடு செய்ய முயற்சிக்கும், முனைப்பாக கருதப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
*******************

வடக்கு கிழக்கில் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் - ஸ்ரீரங்கா

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் நிர்வாக அதிகாரிகள் அமைச்சர்களின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி உள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரதேசங்களில் சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று கூறப்பட்டபோதும் நிர்வாக சேவை அதிகாரங்கள் உட்பட அரச அதிகாரிகள் எவரும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றனர் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக உள்ளூராட்சி அதிகார சபைகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் கவனத்துக்கும் இதனைக் கொண்டு வந்தார்.
இந்தப் பிரதேசங்களில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் எந்த ஒருவிடயத்தையும் சுதந்திரமாகச் செய்யமுடியவில்லை.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தமுடியவில்லை.
சகல விடயங்களிலும் இந்தப் பகுதிகளை ஆள்கிறார்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சில அமைச்சர்கள் தலையிடுகின்றனர்.
அமைச்சர்களின் கட்டளைப்படியே செயலாற்ற வேண்டியுள்ளது.
பல நிர்வாக சேவை அதிகாரிகள் அமைச்சர்களில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
இதுவரை இப்படியான முறைப்பாடு தனக்குக் கிடைக்கவில்லை என்றும் எனினும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
**************


அதிகாரத்தை குவிக்கும் அரசுத் தலைவர்

நீதித்துறையின் மேலதிக அதிகாரங்களை அரசுத் தலைவருக்கு வழங்கும் பத்தொன்பதாவது அரசியல் திருத்தச்சட்டம் மிக விரைவில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இத் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் அரசுத் தலைவருக்கு கிட்டவுள்ளது.
இதுவரை காலமும் அந்த நியமனத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவே மேற்கொண்டிருந்தது.
அத்துடன் பிரதம நீதியரசரின் பதவிக்காலமும் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைச் சட்டங்களின் பிரகாரம் பிரதம நீதியரசர் பதவியில் இருப்பவர் 65 வது வயது வரை அப்பதவியை வகிக்கலாம்.
ஆயினும் புதிய திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஐந்து வருட பதவிக்காலம் அல்லது 65 வயதுப் பருவம் என்ற இரண்டு விடயங்களில் எது முதலில் வருகின்றதோ அதனை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
****************