Tuesday 28 June 2011

செய்திகள் 28/06


தமிழ் இளையோரின் போராட்டம் தொடர்கின்றது!
இன அழிப்புச்செய்த சிறீலங்கா நாட்டின் கிறிக்கெட்டைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக இன்று மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.
இப் போராட்டத்தில் இனமானத் தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரண்டு கலந்து கொண்டு சர்வதேச உலகிற்கு எமது எதிர்ப்பைக் காட்டி இனப்படுகொலையை வெளிப்படுத்த வருமாறு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஓவல் மைதானத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருக்கின்றது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜயசூரிய இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கலந்துகொள்ள இருக்கின்றார்.
இன அழிப்பு மேற்கொண்ட அரசாங்கத்தை நீதியின் முன் நிறுத்தும் ஒரு அங்கமாக சிறீலங்கா கிறிக்கெட் அணியையும், அதன் வீரர்களையும் பிரித்தானிய அரசாங்கமும், ஏனைய மேற்குலக நாடுகளும் புறக்கணித்து, தடை விதிக்க வேண்டும் என தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சிறீலங்கா கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி கடந்த 25ஆம் நாள் லண்டனிற்கு வெளியேயுள்ள பிறிஸ்ரல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர், அதற்கு முன்னதாக கடந்த மே மாதம் கார்டிஃப், லோர்ட்ஸ் போன்ற பல இடங்களில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
****************
விலக்கப்படுமா? விலைபேசப்படுமா?
பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ் கூட்டமைப்பு எப்போது விலகுமென அரசு ஏங்கித் தவிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்தான் பேசித் தீர்க்க வேண்டுமென அமெரிக்கா பெயர் குறிப்பிட்டே அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கூட்டமைப்புக்கு மக்கள் தந்த ஏகோபித்த ஆணையின் பிரதிபலனே இந்த முக்கியத்துவமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
காரைதீவு பிரதேச சபைத் தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் காரைதீவு விபுலானந்தா மணி மண்டப விபுலானந்தா கலாலயகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஐ.நா கவுன்சில் இலங்கை நிலைமை பற்றிய கருத்தரங்கொன்றை அண்மையில் நடத்தியபோது அதில் பல நாடுகள் பங்குபற்றி இறுதியில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்தக்கருத்தரங்கில் பங்கு கொண்ட அமெரிக்கா தனது அறிக்கையில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசித் தீர்க்க வேண்டுமென கட்சியின் பெயரை குறிப்பிட்டே கருத்தை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எப்போது முறித்துக் கொள்ளும் என அரசு ஏங்கித் தவிக்கின்றது. ஆனால் இதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் சாணக்கியம் மிக்கவர்களதும், சர்வதேசத்திலிருந்தும் நல்ல ஆலோனைகள் இந்த விடயத்தில் தமக்கு வழங்கப்பட்டதுடன் அவர்களது வழிநடத்தலும் தமக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
பெரிய விலைகளை கொடுத்துத்துள்ள எமது தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவே தாம் பாடுபடுவதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
****************
நியாயம் செ(க)hல்லும் பிரதமர்!
அரசாங்கத்திற்கும் தமிழ் கூட்டமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் தரப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களினது கோரிக்கை நியாயமானதாகும் என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
நாட்டில் ஐந்து வகையிலான இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இந்த வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் வடக்கில் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் ஏனைய இனங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நேற்று கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
****************
போராட தயாராகுங்கள்!
எதிர்காலத்தில் தேவைப்பட்ட நேரத்தில் ஜனநாயக ரீதியான தர்ம முறைப்படியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு நமது தமிழ் இளைஞர்களும் மக்களும் தயாராக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு விபுலானந்தா கலாலயத்தில் நடைப்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபைக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் செ.இராசையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டும் குறிப்பாக சனல் 4 போன்ற காட்சிகளை கண்டும் உலகம் இன்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
துன்பத்தை அதிகம் தாங்கும் இனம் தான் இறுதியில் வெற்றி பெற்று வந்த உலக வரலாறுகள் உண்டு என்பதை எளிதில் மறந்து விடமுடியாது.
முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்குப் பின்னர் எமது மக்கள் ஹிரோசிமாவில் அன்று வீசப்பட்ட அணு குண்டின் பாதிப்பைவிடவும் மிக மோசமான பாதிப்பை தமிழ் மக்கள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
வட கிழக்கில் எமது பலத்தை திட்டமிட்டு பலவீனமாக்கும் வகையில் இராணுவ அடக்குறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களின் வளங்களைக்கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இங்கு இடம்பெறுகின்றன.
வளம் கொழிக்கும் எமது விவசாய நிலங்கள் கூட இன்று இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு பெரும்பான்மை இனத்தினருக்கு வழங்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
அரசிடமே தீர்வு - ஐதேக
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவருக்கான தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.
அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன அரசுத் தலைவரால் அமைக்கப்பட்டன.
அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுத் தலைவரிடம் கையளித்தன.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தாமும் ஏற்றுக் கொண்டதாகவும், அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும் என்றும் கூறிய அவர், அத்தோடு அரசாங்கத்திற்கு அதற்கான பெரும்பான்மை பலமும் பாராளுமன்றத்தில் உள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும்.
சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
தீர்வு திட்டம் ஒப்படைக்கப்படுமாம்!
அதிகாரப் பகிர்வு குறித்த 12 அம்ச யோசனைத் திட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக வட மாகாணத்தில் அமுல்படுத்தக் கூடிய வகையிலான 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தின் போது இந்த யோசனைத் திட்டம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கடந்த 23ம் திகதி அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது கூட்டமைப்பினர் 51 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த யோசனைத் திட்டத்தின் மூலம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
****************
குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க உடன்படும் ஏமாற்று உலகம்!
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நேர்மையானவையாக இருந்தால் அவை குறித்துக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை செய்யும் என்று அரசு பொதுநலவாய நாடுகளின் செயலகத்துக்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில், சனல்4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பின் சட்டபூர்வமான வழி வகைகளுக்கு ஊடாகத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாகப் பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைப் பொது நலவாய நாடுகள் அமைப்பு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, சிறிலங்காவின் கொலைக்களம் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகம் கவலை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதிமொழி பொதுநல வாய நாடுகள் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
****************
பிளவுபடுத்தும்  முயற்சிகள்?
இலங்கையைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள சில சர்வதேச சக்திகள் அதற்காக இந்தியா மீதும் அழுத்தங்களைக் கொடுக்கின்றன என ஸ்ரீலங்காப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார்.
சில நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு இலங்கையை அவமானப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்றன.
இந்த நாடுகள் இலங்கையில் தலையிடுமாறு இந்தியாவுக்கும் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக சர்வதேச சமூகம் பேசிக்கொண்டிருக்கின்றது.
ஆனால், கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட அழிவுகளையிட்டு அவர்கள் பேசுவதற்குத் தயாராகவில்லை எனவும் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பிரதமர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் வெளிநாடுகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால், இவற்றையிட்டு யாரும் பேசிக்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசுத் தலைவர் மேற்கொண்டுவருகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
****************
நட்டஈடு கோரும் இனவாதம்
100 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரி சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக மூன்று நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.
கண்கண்ட சாட்சிகள் யாருமின்றி, சனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு இலங்கையர்களுக்கு அவமானத்தை உண்டுபண்ணியதாக குற்றம் சாட்டியே பிரஸ்தாப வழக்குத் தொடரப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் மூன்று ஒன்றிணைந்தே பிரிட்டன் நீதிமன்றத்தில் பிரஸ்தாப வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.
அதன் பிரதிவாதிகளாக சனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியமை, அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கண்கண்ட சாட்சிகள் யாரும் இல்லாமை, மற்றும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்தமை ஆகியனவே சனல்4 வுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.
வழக்கில் வாதிகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
இதற்கிடையே சனல்4 காணொளி தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்த சவாலை சனல்4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே அல்லது அம்னெஸ்டி இன்டர்நெசனல் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
****************