Wednesday 29 June 2011

செய்திகள் 29/06


அமெரிக்காவின் வலியுறுத்தல்
யுத்தக் குற்றம் குறித்து தனது நிலைப்பாட்டினை இலங்கை விரைவில் வெளியிட வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்துள்ளது.
அவ்வாறு நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அதிகாரிகள் பொறுப்பை உறுதி செய்வதில் முதன்மை பொறுப்பை கொண்டிருந்தமையினால், அமெரிக்க சர்வதேச விசாரணைக்காக அழைப்பினை சிறிதுகாலம் நிறுத்தி வைத்திருந்தது.
இலங்கை அரசின் சமரசத்திற்கான கடமைகளை விரைவில் நீருபிக்க தாம் இலங்கை அரசை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசு அக் கடமைகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாகவும் ஆனால் முன்னெடுக்க தவறும் பட்சத்தில் அழுத்தங்கள் அதிகரித்து சர்வதேச சமூகம் வேறு ஏதேனும் ஒருமுறையை ஆராய நேரிடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 வீடியோ காட்சி வெளியாகியதிலிருந்து இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
*************

தீர்வு திட்டம் அவசியம் - மங்கள
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தீர்வு தொடர்பாக கவனம் செலுத்தாமல் அதற்கு மாறாக தெரிவுக் குழுக்களை நியமித்து காலத்தை விரயப்படுத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையுடைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை காலம் தாழ்த்துவதனை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலம் அல்லது அதற்கு அப்பாலான ஓர் யோசனைத் திட்டத்திற்கும் ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூடிமறைக்காது தீர்வுத் திட்டம் வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் இந்தியாவிற்கு சென்று ஒரு கருத்தை வெளியிடுவதாகவும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டம் ஒன்றை வழங்குவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை என்பதே தமது கருத்தாகும் என குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு தொடர்ச்சியாக நடந்து கொண்டால் சர்வதேச ரீதியிலான ஈழக் கோரிக்கை வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
தாருஸ்மன் அறிக்கை மற்றும் செனல்4 ஊடக காணொளி போன்ற சர்ச்சைகளை மூடிமறைக்காது அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும், பக்கச்சார்பற்ற முறையில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபித்தால் மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ்களை நட்டஈடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறுமனே ஆர்ப்பாட்டங்களின் மூலம் அறிக்கைகளின் மூலம் எதிர்ப்பை வெளியிடுவதனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள முடியாது என தெரிவித்துள்ள அவர், ஒழுக்கத்துடன் கடமையாற்றிய காரணத்தினால் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒன்று இரண்டு உத்தியோகத்தர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லை எனவும் அவ்வாறு எவரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் பிழையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தை அரசாங்கம் முடக்கியதன் மூலம் அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரத் தன்மை நாட்டுக்கு வெளிப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
*************
அரசிடமே தீர்வு - லக்ஷ்மன் கிரியெல்ல
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர நாடாளுமன்றம் வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு வழங்குவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.
அத்தோடு அரசுத் தலைவரினால் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி குழுவும் அரசியல் தீர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுத் தலைவரிடம் கையளித்துள்ளது.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தாமும் ஏற்றுக் கொண்டதாகவும், அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலமும் நாடாளுமன்றில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
இலங்கை அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
*************
வளச் சுரண்டலில் இந்தியா - ஜே.வி.பி
வடக்கு பிரச்சினைகளை காரணம் காட்டி இந்தியா வளச் சுரண்டலில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
காணிகள் மற்றும் கட்டிட நிர்மாண ஒப்பந்களை இந்தியா பெற்றுக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் இந்தியா வடக்கு மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுத்ததாக சரித்திரம் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அரசாங்கம் இந்தியாவின் முன்னிலையில் மண்டியிட்டு கட்டளைகளை நிறைவேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு அழுத்தங்களின் மத்தியில் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல துறைகளிலும் ராஜபக்ஷ வாதம் வியாபித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும் அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அவற்றை விற்பனை செய்து தனது இருப்பை உறுதி செய்து கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் காலணித்துவத்திற்கு எதிரான தேசப்பற்றுடைய அரசாங்கம் என சிலர் நினைப்பதாகவும் உண்மையில் இந்த அரசாங்கமும் காலணித்துவ ஆட்சியாளர்களின் கைக்கூலிகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையே இன்று நாட்டின் பொருளாதாரக் கொள்கையாக அமைந்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ள அவர், போர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாடு இன்னமும் அவசரகால சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
*************
அதிகாரப்பகிர்வு கூடாது - ஜாதிக ஹெல உறுமய
தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலதிகமாக காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.
இன்று தமிழர்கள் எவ்விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க புலிகளின் கோரிக்கைகளையே முன் வைக்கும் கூட்டமைப்பு போன்றவர்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது ஆபத்தான விடயமாகும்.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது. நாட்டை மீண்டும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
*************
கைதிகளை விடுதலை செய்யக் கோரி போராட்டம் - நாம் இலங்கையர்
சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நாளை கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்த நாம் இலங்கையர் அமைப்பு தீர் மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு வெளியிடும் மாறுபட்ட தகவல்கள், அவர்கள் விடுதலை செய்ய கால தாமதித்தல் மற்றும் அவசர காலச் சட்டத்தை நீக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் சுமார் 17 ஆயிரம் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உதுல் பிரேமரட்ண தெரிவித்தார்.
*************
சந்தி சிரிக்கும் புத்தர் - காப்பாற்று கோரும் பீடாதிபதி
புத்தர் சிலையை வைத்து வழிபாட்டிடமாக சந்திகளை மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அஸ்கிரிய பீடாதிபதி வண.உடுகம சிறி புத்தரகித்த தேரர் அரசின் இச் செயல்பாடுகள் தொடர்பாக தமது எதிர்ப்பை பிரதம மந்திரி டி.எம்.ஜெயரட்ணவிடம் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு சந்திகளில் வழிபாட்டு அறைகள அமைத்து புத்தர் சிலைகளை வைப்பது புத்த மதத்தின் கோட்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலைகள் அதற்குப் பொருத்தமான இடங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
*************