Monday 20 June 2011

செய்திகள் 20/06


கொலைக்களம் குறித்து விவாதிக்கப்படுகிறது - கவலைப்படும் ரணில்!
செனல் 4 தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பில் சர்வதேச ரீதியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து சில நாடுகள் கேள்வியெழுப்பிவருவதாகவும் அவர் குறிப்பிடடார்.
எனினும், குறித்த காணொளியின் உள்ளடக்கம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டு வரும் மறுப்புகள், மற்றும் அடிப்படையற்றது என்ற கருத்துக்களில் சர்வதேச சமூகத்திற்கு திருப்தியேற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னரும் இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் குறித்த காணொளிகள் செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
எஹெலியகொட - விலேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
நாட்டிற்கு எதிராக பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் அரசாங்கங்களை விட பொதுமக்கள் மீதே தாக்கம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் நாட்டிற்கும், பொது மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முனைப்புகளை காட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், அரசாங்கம் குறித்த நெருக்கடி சம்பமாக எந்தவித தீர்வையோ, அதற்கான வேலைத்திட்டத்தையோ முன்வைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார
**************
தடுக்கமுடியாது சவால் விடும் ஸ்ரீலங்கா!
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் செல்வதைத் எவராலும் தடுக்க முடியாது ஸ்ரீலங்காவின் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரச தலைவர்களுக்கு விதிவிலக்கு உண்டு என நீதி அமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத் தெரிவித்துள்ளார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
யுத்தத்தின்போது பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முப்பது மில்லியன் டொலர்களை நஷ்டஈடாகக் கோரி வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அலரி மாளிகைக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டபோது அங்கு அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பின்னர் நீதி அமைச்சு இந்த அழைப்பாணையை ஏற்றுக்கொண்டது.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.
**************
அணைக்க தயாராகும் அரசு! அடுத்து என்ன?
சனல் 4 வெளியிட்ட "இலங்கையின் "கொலைக் களம்' விடியோ உண்மையானது எனத் தெரிவித்த ஐ.நா. சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகளுக்கான விசேட பிரதிநிதி கிறிஸ்டோவ் ஹெயின்ஸ்-உடன் கலந்துரையாடுகின்றமைக்கு ஸ்ரீலங்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இக்கலந்துரையாடலுக்கு கோரி உள்ளாரென செய்திகள் வெளியாகி உள்ளன.
உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய "இலங்கையின் கொலைக்களம்' விவரணத் திரைப்படத்தின் பிரதி ஒன்று வழங்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா குற்றம் சுமத்தியுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான "இலங்கையின் கொலைக்களம்' என்ற ஒரு மணி நேரம் கொண்ட விவரணத் திரைப்படம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது ஒளிபரப்பப்பட்டது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விவரணத் திரைப்படத்தைப் பார்த்து கண்கலங்கினர்.
இந்த விவரணத்தில் வரும் காட்சிகள் போலியானவை என ஸ்ரீலங்கா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
**************
முரண்படும் தரவுகள்!
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தொடர்ந்து பல உண்மைக்கு மாறான புள்ளி விபரங்களை வெளியிடுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு கடந்த 7 ம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்த மனுவில் தமிழர் மனிதர் உரிமை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 16 வது கூட்டத் தொடரிலும் தற்பொழுது நடைபெறும் 17 வது கூட்டத் தொடரிலும் வேறுபட்ட புள்ளி விபரங்களை கூறியுள்ளதாக பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமை மையம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு சமர்ப்பித்த மனுவில் கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 16 வது கூட்டத் தொடரில் உரையாற்றும் பொழுது 11ஆயிரத்து 696 முன்னாள் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறினார்.
ஆனால் கடந்த வாரம் 17 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய இதே அமைச்சர், 11ஆயிரத்து 644 முன்னாள் போராளிகள் சரணடைந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த அடிப்படையில் ஆராயும் வேளையில் 16 வது கூட்டத் தொடருக்கும் 17 வது கூட்டத் தொடருக்கும் இடையில் 52 போராளிகளுக்கு என்ன நடந்தது என இலங்கை வெளியிட வேண்டுமென தமிழர் மனித உரிமைகள் மையத்தின் மனு கேள்வி எழுப்புகின்றது.
இதேவேளை, கடந்த 16 வது கூட்டத் தொடரில் ஏறக்குறைய 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாகக் கூறிய சமரசிங்க தற்பொழுது 17 வது கூட்டத் தொடரில் இடம்பெயர்ந்தோர் தொகையை 2 லட்சத்து 90ஆயிரம் பேர் எனக் கூறியுள்ளார்.
இது மட்டுமன்றி கடந்த 16 வது கூட்டத் தொடரில் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11ஆயிரத்து 696 எனக் கூறிய சமரசிங்க இதில் கொடுக்கப்பட்ட விபரங்களின் பிரகாரம் 739 போராளிகளுக்கு என்ன நடந்தது எனக் கூற இன்றுவரை ஸ்ரீலங்கா அரசு தவறியுள்ளது.
இவ்விடயமாக கடந்த மார்ச் மாதம் 7 ம் திகதி தமிழர் மனித உரிமை மையம் கூட்டத் தொடரின் தலைவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புள்ளி விபரங்களை இலங்கை வழங்கும் பொழுது ஏறக்குறைய எனக் குறிப்பிடுவதை யாரும் ஒரு பொழுதும் ஏற்க முடியாதெனவும், முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்று இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சரியான புள்ளி விபரங்களை இலங்கையால் சமர்ப்பிக்க முடியாதது ஓர் புதுமையான விடயம் எனவும், தமிழர் மனித உரிமை மையத்தின் அறிக்கை கூறுகிறது.
இப்படியாக நாளுக்கு நாள் வேறுபட்ட புள்ளி விபரங்களை ஓர் ஜனநாயக நாடு எனக் கூறப்படும் நாடு ஒன்றினால் வழங்கப்படுவது இலங்கையில் பலவிதப்பட்ட உண்மை புள்ளி விபரங்கள் மறைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
**************
தாங்க முடியாத கடன் சுமை!
ஸ்ரீலங்கா அரசின் கடன்சுமை எல்லை தாண்டி அதிகரித்துச் செல்வதால் அதனை சமாளிப்பதற்காக அது காணிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட முடிவுக்கு முன்னர் ஒரு பில்லியன் டொலர்களை கடன்களுக்கான தவணைப் பணமாக செலுத்த வேண்டிய நிலையில் சிறீலங்கா உள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட 16 பில்லியன் டொலர்களுக்கான கட்டுப் பணமே இந்த தொகையாகும்.
இதில் யப்பானுக்கு இந்த வருடம் 310 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 320 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 325 மில்லியன் டொலர்களையும் சிறீலங்கா அரசு செலுத்த வேண்டும்.
அதனைப் போலவே ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், இந்த வருடம் 155 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 172 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 187 மில்லியன் டொலர்களையும் சிறீலங்கா அரசு செலுத்த வேண்டும்.
எதிர்வரும் 10 வருடங்களில் சிறீலங்கா அரசு 8 பில்லியன் டொலர்களை கடன் தவணைப் பணமாக பல்வேறு நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் செலுத்த வேண்டும்.
இதில் 2.5 பில்லியன் டொலர்கள் வட்டிப் பணமாகும்.
கடந்த வருடம் சிறீலங்கா அரசு 842 மில்லியன் டொலர்களை கடன் தவணைப் பணமாக பல்வேறு நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் செலுத்தியிருந்தது.
இதில் 262 மில்லியன் டொலர்கள் வட்டிப் பணமாகும்
**************
தோற்றுப் போன ரஷ்ய பயணம்?
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஸ்யாவில் பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை ஒரேயிடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு தீட்டியிருந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்தவாரம் ரஸ்யாவுக்கான அதிகாரபூர்வ பணயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று கொழும்பு திரும்பினார்.
ரஸ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார மன்றத்தின் 15வது கூட்டத்தில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களைச் சந்திப்பதே இவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
சுமார் 100 வரையான நாடுகளினது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து சிறிலங்காவை விடுவிப்பதற்கான முயற்சிக்கு பயன்படுத்த மகிந்த ராஜபக்ச எண்ணியிருந்தார்.
ஆனால் ரஸ்ய அதிபர் டிமிற்றி மெட்வெடேவ், சீன அதிபர் {ஹ ஜின்டாவோ, ஸ்பானிய பிரதமர் ஜோஸ் லூயிஸ் சபாட்டியோ, கசாகிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயெவ் ஆகியோரை மட்டுமே மகிந்த ராஜபக்சவினால் சந்திக்க முடிந்தது.
ரஸ்யா மற்றும் சீன அதிபர்களுடனான சந்திப்பு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த நாடுகள் இரண்டும் ஏற்கனவே சிறிலங்காவுக்கான ஆதரவை உறுதி செய்திருந்தவையாகும்.
இவர்கள் தவிர ஸ்பானிய பிரதமரையும் கசாகிஸ்தான் அதிபரையுமே சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இவர்களுக்கே மகிந்த ராஜபக்ச நாட்டு நிலைமைகள் மற்றும் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானம், நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆனால் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் மிக்கதாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையல்ல என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
சிறிலங்கா அதிபர் எதிர்பார்த்தது போன்று பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க முடியாது போனதால், ரஸ்யப் பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
**************