Saturday 18 June 2011

செய்திகள் 18/06


தாக்குதலாளிகளை அடையாளம் காட்டத் தயார்! தண்டணை வழங்கத் தயாரா?

அளவெட்டியில் தாம் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை கூட்டத்தை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்த இராணுவ மேஜரையும் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை வழிநடத்தியவரையும் தம்மால் அடையாளம் காட்ட முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
அளவெட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெல்லிப்பழை காவல் நிலையத்தில் வைத்து பலமுறை தம்மிடம் மன்னிப்புக் கோரினார் எனவும் இத்தாக்குதலுடன் இராணுவம் தொடர்புபடவில்லையென்றால் அவர் ஏன் தம்மிடம் மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளவெட்டியில் வியாழக்கிழமை நடத்திய பிரசாரக் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்நகரில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அளவெட்டியில் தங்களது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மேஜர் தரத்திலான ஒரு இராணுவ அதிகாரி கூட்டத்திற்கு வந்து கூட்டம் தொடர்பாக தங்களோடு உரையாடிய போது பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் இக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி பெறப்படவில்லையென்றும் இதனால் இக்கூட்டத்தை தடுத்து நிறுத்த தனக்கு தலைமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் சுமத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கையிலேயே இன்னொருவர் தலைமையில் இராணுவத்தினர் பொதுமக்களையும் தங்களையும் தாக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் குறித்த மேஜர் தர இராணுவ அதிகாரியையும் பொது மக்கள் மீதான தாக்குதலை வழிநடத்திய தலைவரையும் தன்னால் அடையாளங் காட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.
**************
அடக்குமுறைக்கு எதிராக போராட தயார்!
எமது மக்களை அடக்குமுறைகளில் இருந்து மீட்டெடுக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா சூளுரைத்துள்ளார்.
அளவெட்டியில் இடம்பெற்ற கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அத்துமீறி புகுந்து அடாவடித் தனமாக தாக்குதல் மேற்கொண்டது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், மற்றும் யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இச்சம்பவத்தில் படையினர் இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்துள்ளனர்.
கூட்டத்திற்கு அனுமதி தேவையில்லை என்பது ஒரு புறமிருக்க அனுமதி பற்றி கேட்கும் அதிகாரம் படையினருக்கு இல்லை. அது காவற்றுறையினருக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிதும் தொடர்பில்லாமல் படையினர் ஆயுதங்களுடன் வந்து தாக்கியது என்பது ஐயத்திற்குரியது.
அவர்கள் அங்கு எதையும் செய்யத் துணிந்து திட்டமிட்டே வந்துள்ளனர் என்றும் அவா தெரிவித்துள்ளார்.
அமைதி திரும்பியுள்ளது என்ற கருத்துக்கு எதிராக இராணுவ அடக்குமுறைக்குள்தான் மக்கள் இன்னும் வாழ்கின்றார்கள் என இந்தத் தாக்குதல் உணர வைத்துள்ளது என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
*****************
தாக்குதல் உண்மை என்கிறது காவல்துறை, பொய் என்கிறது இராணுவம்!
அளவெட்டியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுவது உண்மையே என்று பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறைப் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காமினி பெரேராவே அவ்வாறு த.தே.கூட்டமைப்பின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும் முன்னதாக யாழ்.பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி அவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று மறுத்திருந்தார்.
தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு தான் நேரில் சென்று பார்வையிட்டதாக குறிப்பிடும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காமினி பெரேரா, இராணுவத்தினர் தான் அதில் தொடர்புபட்டிருந்தார்களா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கின்றார்.
ஆயினும் விசாரணையின் போது அவ்விடத்தில் இருந்த இராணுவத்தினரும் தாங்கள் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று மறுத்ததாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
இதற்கிடையே இராணுவப் பேச்சாளரிடம் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் வினவப்பட்டபோது அச்சம்பவம் பற்றிக்கூட தான் இதுவரை கேள்விப்படவில்லை என்று நேற்று மாலை அவர் தெரிவித்ததாகவும் திவயின பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
************
அழுத்தத்திற்கு உந்து சக்தி!
இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கச் செய்ய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உந்துசக்தியாக அமைந்துள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதனால் இந்தப் பிரச்சினையை அரசாங்கம் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாதென முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வெளிநாட்டு நாடுகள், மற்றும் நிறுவனங்கள் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட மனித உரிமை பிரச்சினைகளை பயன்படுத்துகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் இந்த நாட்டு அரசு மனித உரிமையை பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மனித உரிமையை பாதுகாப்பது போன்று அரசு காட்டிக் கொள்கிறது என ரில்வின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினை மிகவும் பாரதூரமானது. முழு சமூகமும் அரசும் இப்பிரச்சினையின்பால் கவனம் செலுத்தி தீர்வு பெறாவிட்டால் நாடு பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும்.
இலங்கை மீது அழுத்தம் செலுத்த விரும்பும் வெளிநாட்டு சக்திகளுக்கு இப்பிரச்சினை ஆதாரமாகவும், உதாரணமாகவும் அமைகிறது.
இது மிகவும் ஆபத்தானது என ரில்வின் சில்வா தெரிவித்தார்.
***************
பாடங்களை கற்றுக் கொள்ள தவறிய கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு!
கற்றுக் கொண்ட பாடங்கள் குறித்து ஆராய ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ள அரசாங்கம் இதுவரை பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று ஜே.வி.பி. காட்டமாக சாடியுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தின் போது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவே நியமிக்கப்பட்டது.
ஆயினும் அதன் விசாரணைகளில் பொதுமக்கள் சுதந்திரமாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாத அச்சுறுத்தல் நிலையேற்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பதிவு நடவடிக்கை மூலம் அங்குள்ள மக்களை அச்சுறுத்தும் இராணுவ நடவடிக்கை வலிகாமம் பிரதேச ஜே.வி.பி. அமைப்பாளர் தங்கேஸ்வரனின் கடும் எதிர்ப்புக் காரணமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக அரசாங்கம் நாட்டு மக்களின் துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அவற்றுக்கான தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக தொடர்ச்சியாக மேலும் மோசமான துன்பங்களை பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விட முயற்சிக்கின்றது.
அதன் மூலம் எதிர்காலத்திலும் இந்நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்குவதற்கான பின்னணியை வேண்டுமென்றே உருவாக்க அரசாங்கம் முயல்கின்றது.
அந்தவகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் குறித்து ஆராய ஆணைக்குழுவொன்றை நியமித்த அரசாங்கம் அதிலிருந்து சற்றேனும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது புலனாகின்றது என்றும் ஜே.வி. பி. சாடியுள்ளது.
***************

என்ன செய்யப் போகின்றது அரசு? கேட்கிறது ததேகூ
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ காட்சிகள் உண்மைத் தன்மை வாய்ந்தவை என்பதை நம்புவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இக் காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசு எதனைக் கூறினாலும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பது புலனாகிவிட்டது என்றும் கூறியுள்ளது.
சனல் 4 விவகாரம் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் சுயாதீனமானதும் சர்வதேச தரத்திற்கமைவானதுமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சனல் 4 வீடியோ காட்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 இலங்கையின் இறுதிக் கட்டப் போரோடு தொடர்புடைய சில தகவல்களை இதற்கு முன்னரும் வீடியோவாக வெளியிட்டிருந்தது.
ஆனாலும் அப்போது அதனை மறுத்த அரசாங்கம் அந்த வீடியோக் காட்சிகள் பொய்யானவை எனக் கூறி நிராகரித்தது.
அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு சனல் 4 தொலைக்காட்சி நீண்டதொரு வீடியோ காட்சியை ஒளிபரப்பியிருந்தது.
இதனையும் அரசாங்கம் முன்னரைப் போலவே நிராகரித்து அது தொடர்பில் பல்வேறு கதைகளை கூறி வருகின்றது.
இதனை ஆராய்ந்து பாராமலேயே அரசாங்கம் வெற்றுக் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றது.
நடந்து முடிந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் அடையாளமும் காணப்பட்டிருக்கின்றனர்.
வைத்தியசாலைகள் தகர்க்கப்பட்டுள்ளமை உட்பட ஆண்கள், பெண்கள் என சகலரும் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுதல் போன்ற காட்சிகள் மிகக் கொடூரமானவையாகும்.
கைது செய்யப்பட்ட போராளிகள், இளைஞர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமே தவிர வீடியோ காட்சியில் காட்டப்படுவது போன்று மிருகத்தனமாக கொலை செய்வதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
****************