Wednesday 15 June 2011

செய்திகள் 15/06


கோரமுகம் அம்பலம்
இந்துசமுத்திரத்தின் அழகிய முத்து, ஜனநாயகத்தை தொடர்ச்சியாகப் பின்பற்றும் நாடு, பயங்கரவாதத்தை ஒழித்த நாடு என சிறிலங்காக கட்டியமைக்க விரும்பிய அத்தனை பொய்களையும் உடைத்து உலகின் பயங்கரவாத நாடு என்ற அதன் உண்மையான கோர முகத்தை நேற்றையதினம் சனல் 4 வெளியிட்ட 'இலங்கையில் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் அம்பலமாக்கியுள்ளது.
நேற்றிரவு வெளியான இந்த ஆவணப்படம் உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 வருடங்களாக தமிழர் எதிர்கொண்ட இன ஒடுக்குமுறையின் உண்மையான வடிவத்தை உலகம் முழுமையாகப் புரிந்து கொள்ளத்தக்க ஒரு முழுமையான சாட்சியமாக இந்த ஆவணப்படம் இருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.
நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு, ஒரு காட்டுமிராண்டித்தனமான இராணுவ வெற்றியை சிறிலங்கா எப்படி பெற்றுக் கொண்டது என்ற உண்மையை, இனி யாரும் மறைக்க முடியாதளவுக்கு, சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் போட்டுடைத்துள்ளது என்றே கருதப்படுகிறது.
போராளிகள் மீது இராணுவத்தினர் புரிந்த வன்முறைகளும் குறிப்பாக பெண் போராளிகள்மீது மேற்கொள்ளப்பட்ட பாலியற் கொடுமைகளும் படுகொலைகளும் மனிதகுலத்திற்கு எதிரான கொடுமைகளும் மிகவும் தெளிவாகவே இக்காணொளியில் பதிவாகியுள்ளது.
சர்வதேச சமூகம் இனி என்ன செய்யப் போகின்றது என்பதுவே இப்போது தமிழர்கள் முன்னுள்ள கேள்வியாகவுள்ளது.
**************
விசாரணை வேண்டும் - பிரித்தானியா
யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூர சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் மீது இலங்கை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சனல் 4வின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை காண்பிக்கப்படாத இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களின் தொகுப்பினை இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப்பில் சனல் 4 ஒளிபரப்பியது.
இக்காணொளியில் தமிழர்கள் அநீதியான முறையில் இராணுவத்தினால் கொல்லப்படும் காட்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த காணொளி சித்தரிக்கப்பட்டவை என்றும் இலங்கை இராணுவத்துக்கு அபகீர்த்தியேற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காணொளியினை பார்த்ததும் தான் அதிர்ச்சியடைந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஏனைய சர்வதேச சமூகங்களுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காட்சியப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
*************
தமிழர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்து - சனல்-4
இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இலண்டன் வந்து அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படுதல் நிறுத்தபட வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு இந்த வாரம் சுமார் 40 இலங்கை தமிழர்கள்வரை நாடுகடத்தப்பட உள்ளனர் எனவும் தொடர்ந்தும் பலர் கடத்தப்பட உள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் அவர்கள் மேன் மேலும் துன்புறுத்தபடலாம் என சனல் 4 தொலைக்காட்சி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இதே நேரம் பிரித்தானிய குடிவரவு திணைக்களம் தமிழர்களின் இரகசியங்களை ஸ்ரீலங்கா அரசிற்கு கசிய விட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
************
மலேசிய ஆதரவை மீள் பரிசீலனை செய்- புரோஹம்
இலங்கைக்கான ஆதரவை மலேசியா மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோலாலம்பூரை தளமாக கொண்டு இயங்கி வரும் புரோஹம் என்கிற மனித உரிமைகள் அமைப்புக் கோரி உள்ளது.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று குற்றம் சாட்டுகின்றமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் குழு கண்டறிந்து உள்ளது என்று இவ்வமைப்பு கூறி உள்ளது.
அத்துடன் இம்மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுதந்திரமான நீதி விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் குழு சிபாரிசு செய்து உள்ளது என்று இவ்வமைப்பு குறிப்பிட்டு உள்ளது.
இச்சூழ்நிலையில் இலங்கைக்கான ஆதரவை மலேசியா கை விட வேண்டும் என்று இவ்வமைப்பு வலியுறுத்தி உள்ளது.
**************
இராணுவத்தை திசை திருப்ப முயற்சி? எங்கே!
அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினரை திசை திருப்பும் முனைப்புக்களில் ஜே.வி.பி ஈடுபட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ{லுகல்ல தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் இவ்வாறான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
படையினர் தங்களது பிள்ளைகளைப் போன்று பாதுகாக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினருக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களை எவராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரின் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜே.வி.பி.யினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
****************
தீர்வு சொல்லும் விமல்!
அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தம் குறித்து இனியும் பேசிக் கொண்டிருப்பதில் பலனேதுமில்லை என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பில் தொடர்ந்தும் கவனத்தைச் செலுத்துவதைக் கைவிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்துக் கவனம் செலுத்த வேண்டியதே தற்போதைய தலையாய பணியாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றின் போதே வீடமைப்பு, பொறியியல் சேவைகள் மற்றும் நிர்மாண, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொழில், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பது தவிர மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் குறித்தெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை.
அத்துடன் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதால் மட்டும் வந்துவிடப்போவதில்லை.
அதற்குப் பதிலாக நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்று உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ள சமாதானத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஒருசில அரசியல்வாதிகள் ஈடுபடுகின்றனர்.
ஆயினும் மிகுந்த சிரமங்களின் மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை மீண்டும் சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச தனது நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.
*****************