Monday 6 June 2011

செய்திகள் 06/06


தமிழரின் விடுதலைக்கான அங்கீகாரம் கோரும் வழக்கு

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக அம்ஸ்ரர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்ரர் கொப்பே கடந்த வியாழன் அன்று ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், முள்ளிவாய்க்கால் சூழலுக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான நீதியை அடைய, தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்த விளைகிறார்கள் என்றும் அவர் வாதாடியுள்ளார்.
மேலும் இந்த உரிமைகள் அடிப்படைச் சுதந்திரக் கொள்கைகளான பேச்சு, சங்கம், கூட்டம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன என்றும் வாதாடியுள்ளார்.
ஆனால், விக்ரரின் வாதத்துக்காக ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அதன் உறுப்புரிமை நாடுகளோ விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சட்டச் சவால் குறித்து பொஹ்லர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது சென்ற மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவ்வழக்கில் புலிகள் சார்பாக வாதாடுவதற்கு கொப்பேக்கு சட்டத்தரணி அதிகாரம் லக்சம்பேர்க் நீதிமன்றால் வழங்கப்பட வேண்டும் என்பதால் அதன் விசாரணை தள்ளிப்போடப்பட்டது.
இப்போது சட்டத்தரணி அதிகாரம் கிடைத்துள்ளதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளையும் ஐ.ஒ கவுன்சிலையும் நீதிமன்றுக்கு அழைத்து அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்பது நீதிமன்றினைப் பொறுத்தது என்று கொப்பே கூறியுள்ளார்.
இந்த வழக்கு சாதகமான முடிவைக் கொண்டுவந்தால், தமிழ் புலம்பெயர்வாளர்கள் சுதந்திரமான சமாதானமான ஜனநாயகச் செயற்பாடுகளைத் தமது நாடுகளில் சுதந்திரமாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.
***********

இனப்படுகொலையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்குள்ளான ஸ்ரீலங்கா!
வன்னி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களின் உயிரிழப்புக்கள், காயமடைவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அரசுத் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் அடிக்கடி கூறிவரும் நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியா மோதல்களின் போது 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருப்பதன் மூலம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேரவையில் கலந்துகொள்ள சென்றிருக்கின்ற அரசாங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரியவருகிறது.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி சுமார் 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தான் தனிப்பட்ட ரீதியில் நம்பவதாகக் கூறியிருந்தார்.
அத்துடன், காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக தகவல்களும், இராணுவத்திடம் இல்லை எனவும் அவர் இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகையிடம் கூறியிருந்தார்
இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்த போதிலும் சர்வதேச அமைப்புக்களின் கணிப்பீடுகளின் அடிப்படையில், வன்னி இராணுவ நடவடிக்கையின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற உண்மைத் தகவல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஸழல் வரும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
************

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.25 மணியளவில் அவரது கைத்தொலைபேசிக்கு அடையாளம் தெரியாத ஒருவரிடம் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பு மூலமே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் "இனிமேலும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அத்துடன் இரண்டு நாள்களுக்குள் நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன், "அப்படி தப்பி ஓடாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்" என்றும் அந்த மர்மநபர் அச்சுறுத்தியுள்ளார்.
நீண்ட நேரமாகத் தொலைபேசியில் அச்சுறுத்திய அந்த மர்ம நபர், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக யாழ்.காவல் நிலையத்தில் சரவணபவன் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
யாழ்.மாவட்ட காவல்துறைப் பொறுப்பதிகாரியுடன் உடனடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்ட சரவணபவன் தமக்கு வந்த அச்சுறுத்தல் குறித்து விளக்கியதுடன், அந்த மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தையும் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தனது அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் எழுத்து மூல முறைப்பாட்டையும் அவர் உடனடியாக வழங்கியுள்ளார்.
வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்றுக்காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, சிறிலங்கா அரசையும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் கண்டித்து கடுமையான கருத்துக்களை சரவணபவன் வெளியிட்டிருந்தார் என்றும், இதன் விளைவாகவே தொலைபேசி ஊடான கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
**************
சீனாவில் கடற்படைத் தள எண்ணம்?
இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம் அமைக்கும் திட்டம் கிடையாது என சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் கான்கில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு முகாம் அமைக்கப்பட வேண்டுமென்றால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் குட்வாரிலும், இலங்கைத் துறைமுகம் ஒன்றிலும் கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
*************

அரசைக் கவிழ்க்க சதி? சிங்கள தேசத்தின் குழப்பம்.
ஜே.வி.பி. கட்சியானது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச புலனாய்வுத்துறையின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் அரசாங்க உயர்மட்டத்தினரும் அந்த அறிக்கையின் தகவல்களை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என்றும் தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஊடாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திர வர்த்தக வலய குழப்ப நிலைமைகளுக்கு ஜே.வி.பி கட்சி பொறுப்புச் சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைப் போராட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சிய கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி. முனைப்பு காட்டி வருகின்றது.
எந்தவொரு விடயம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அலரி மாளிகையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் அரச புலனாய்வுப் பிரிவினர் ஜே.வி.பி.யினரின் அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அரச புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் குண்டர்களே அண்மையில் சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினரைத் தாக்கி வன்முறையை ஏற்படுத்துவதில் மறைமுக பங்காற்றியதாகவும் அரச புலனாய்வுத்துறை அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட ரொசான் சானக்கவின் இறுதிக் கிரியைகளின் போதும் சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்த போதிலும், தொழிற்சங்க ஊழியர்கள் புத்திசாதுரியத்துடன் நடந்து அவ்வாறான நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
கலகங்களை ஏற்படுத்தாது அமைதியான முறையில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரசாங்கம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
போராட்டங்களின் போது 'மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பு' என்ற பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டடுள்ளமை அக்கட்சியின் சதி முயற்சிகளை வெளிப்படையாகப் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாகும் எனவும் இதன் மூலம் ஜே.வி.பி.யின் உள்நோக்கம் அம்பலமாகியுள்ளது என்றும் தகவல் திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
***************

அரச ஆலவட்டங்களாகும் அதிகாரிகள்?
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் ஆலவட்டங்களாக உள்ளமை வேதனைக்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு கிழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் இராணுவ நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வலி.வடக்கில் மீள்குடியமரும் மக்களின் தேவை குறித்து நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இக்கூட்டம் மீள்குடியேறும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கூட்டப்பட்டது.
எனினும் யாழ்.அரச அதிபரோ, தெல்லிப்பழை பிரதேச செயலரோ, கிராம உத்தியோகத்தர்களோ இக்கூட்டத்திற்கு வருகை தரவில்லை.
இவ்வாறு அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமைக்கு காரணம் கொக்காவிலுக்கு இன்று அரசுத் தலைவர் வருகை தருவதால் அதற்கான ஒழுங்கமைப்பு கூட்டம் ஒன்றை யாழ்.அரச அதிபர் ஒழுங்கமைத்தால் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் ஆலவட்டங்களாக செயற்படுகின்றமை வேதனைக்குரியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில் மக்களின் சேவைக்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தை இவ் அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************