Monday 27 June 2011

செய்திகள் 27/06


ஆதாரங்களை ஆராயும் பொது நலவாயம் நடவடிக்கை எடுக்குமா?
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பிலான சனல் 4 ஊடக காணொளி குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடான இலங்கை இந்த குற்றச்சாட்டுக்களை கடுமையாக நிராகரித்து வரும் நிலையில் பொதுநலவாய செயலகம் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளி தொடர்பில் பல்வேறு கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் பொதுநலவாய செயலகத்தின் பேச்சாளர் தெவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நிலைப்பாடு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி மேற் கொண்டு வரும் பின்னணியில் பொதுநலவாய நாடுகள் செயலகம் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளமை இலங்கைக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
****************
முறுகல் முற்றுமா?
இந்தியாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆடும் ஆட்டத்தின் நேரடி விளைவாகவே இந்திய துடுப்பாட்ட அணி வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்திய துடுப்பாட்டச்சபை மறுத்திருக்கக் கூடும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
சிறிலங்கா துடுப்பாட்டச்சபை நடத்தவுள்ள, சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பங்கேற்பதற்கு இந்திய துடுப்பாட்டச்சபை தடைவிதித்துள்ளது.
இந்தியாவின் இந்த முடிவு சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய துடுப்பாட்டச் சபையுடன் சிறிலங்கா துடுப்பாட்டச்சபை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்திய போதும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இந்திய வீரர்களை அனுப்ப முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே இது அரசியல் ரீதியான முடிவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அயல்நாடான இந்தியாவின் புவிசார் அரசியல் பிணைப்பையும், விருப்பங்களையும் புறக்கணித்து சீனாவுடன் சிறிலங்கா நெருங்கிச் செல்வது இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.
அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தத்தையும், சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார்.
இந்தநிலையிலேயே இந்திய துடுப்பாட்ட வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது.
எனவே இதன் பின்னணியில் அரசியல் ரீதியான முடிவுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிறிலங்காவுக்கு முதலாவது எச்சரிக்கையை வழங்கும் விதத்திலேயே இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஆங்கில ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இந்தியாவின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய வீரர்கள் சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளுக்கு தேவையில்லை.
அவர்கள் இல்லாமலேயே போட்டிகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
****************
தீர்மானம் நிறைவேறுமா?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழ் புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த நாடுகளை அமெரிக்கா வழிநடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சவாலை முறியடிப்பதற்காக அரசாங்கம் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளின் ஆதரவை திரட்டும் பாரிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இரு வேறு அறிக்கைகளை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கைகள் அரசுத் தலைவருக்கும் நாடாளுமன்றிற்கும் முதலில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************
அமெரிக்க விஜயம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று புறப்பட்டு சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் அங்கு 5 நாட்கள் வரையில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர்களையும், ராஜதந்திரிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் இன்றைய அரசியல் நிலரவம் தொடர்பில் அவர் செனட் சபை உறுப்பிர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிய வருகிறது.
சர்வதேச ஜனநாயகவாதிகள் அமைப்பின் பிரதி தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அவர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில், கருஜெயசூரிய கட்சியின் பதில் தலைவராக செயற்படவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
****************
மாற்றம் கோரும் மாறாத பேரினவாதம்!
தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் கொள்கை ரீதியாக மாற்றமடைந்து தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என ஜாதிக கெல உறுமய தெரிவித்துள்ளது.
1949 ஆம் ஆண்டுகளில் இருந்து கடைப்பிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளினால் தமிழ் மக்கள் பேரழிவுகளுக்கு உட்பட்டு பின்னடைவுகளை சந்தித்துள்ளார்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படக்கூடாது எனவும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தமிழீழ கோரிக்கைக்கு இலங்கையில் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
****************
அரசிடம் திட்டமில்லை - சொல்வது ஜே.வி.பி
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று ஜே.வி.பி ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.
அதிகாரப் பகிர்வு குறித்து எதிர்வரும் 29ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் பதில் அளிப்பதாக அரசு கூறியது வெறும் பம்மாத்து என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின்சில்வா தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு முன்வைக்கப்படும் என்று அமைச்சர் கெஹலியரம்புக்வெல கூறியதைச் சுட்டிக்காட்டினார்.
அவர் கூறிய சில தினங்களில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் இல்லாத 13ஆம் திருத்தச்சட்டம் தீர்வாக முன்வைக்கப்படும் என்று அரசுத் தலைவர் கூறியதையும் சுட்டிக்காட்டி இந்த இருவரின் கூற்றும் ஒன்றுக்கொன்று முரண் படுகிறது. இது சர்வதேசத்தையும், உள்நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தார்.
தீர்வு யோசனை முன்வைக்கப்படும் என்று அரசுத் தலைவருக்கான தேர்தலின்போது அரசு கூறியது.
ஆனால், அது முன்வைக்கப்படவில்லை. பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் இதே வாக்குறுதி வழங்கப்பட்டது.
எனினும், அத்தேர்தலின் பின்னரும் அது முன்வைக்கப்படவில்லை.
இப்போது அரசியல் தீர்வுபற்றி அரசு கூறி வருகின்றது.
இதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும் என்று அரசுத் தலைவர் கூறினார்.
தெரிவுக்குழு தேவையில்லை. அரசின் தீர்வை நாட்டு மக்களுக்குக் காண்பித்தால் போதும். மக்கள் அவர்களின் கருத்தைக் கூறுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை நடைபெற்ற பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு 29ஆம் திகதி பதிலளிக்கப்படும் என்று அரசு கூறியது.
ஆனால், அரசிடம் எந்தவிதமான பதிலும், தீர்வும் கிடையாது என்றும் ரில்வின் சல்வா தெரிவித்துள்ளார்.
****************
போர் முடியவில்லை?
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவு பெற்றுவிட்டது என எண்ணிவிடக் கூடாது என்று அரசுத் தலைவரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசுத் தலைவருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் சதிகளை மேற்கொண்டுவருகிறது என லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஒரு யுத்தம் முடிவு பெற்றாலும் சர்வதேசத்திலிருந்து வரும் மற்றுமொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலையில் நடைபெற்ற படையினருக்கான வீடுகள் கையளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
****************
அஞ்சும் இராணுவம்!
இனிவரும் காலங்களில் தான் இராணுவத்தினர் பாரிய சவால்களை எதிர்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படக் கூடும் என கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய இராணுவத்தினருக்கான வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இன்றைய சூழலை விட எதிர்காலத்தில் இராணுவத்தினர் பல பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
அதன்போது தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கிக் கொள்ளாத வகையில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
****************