Wednesday 22 June 2011

செய்திகள் 22/06



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை!
வடக்கு - கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அரசாங்கம் நியமிக்குமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு உருப்படியாக எதையும் செய்யப்போவதில்லை என்றும் இது காலத்தை வீணே போக்குகின்ற ஒரு முயற்சி என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கங்களின் கீழ் அமைந்த பல்வேறு குழுக்களின் இறுதி அறிக்கைகள், சிபாரிசுகள் என்பன நிறைய உள்ளன.
இவை இனப்பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டல்களாக அமைந்துள்ளன.
அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வில் உண்மையான அக்கறையுடையதாயின் இவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிரேமசந்திரன் கூறினார்.
கடந்த பெப்ரவரியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஆறு சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.
ஆனால் கிடைத்த பயன் சொற்பம் அல்லது எதுவுமில்லை என்றளவுக்கே உள்ளது.
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 850 அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கேட்டதாகவும், இடம்பெயர்ந்தோருக்கான வசதிகள் பற்றி பேசியதாகவும் தெரிவித்த அவர் எதுவுமே நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் முக்கியமல்லாத, தேவையில்லாத விடயங்கள் பற்றியே பேசுகின்றது என சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் கூறினார்.
*****************

இரகசியப் பதில்?
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் அளித்துவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும், சனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்த அரசு முயற்சி எடுக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பும் சனல் 4இல் வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்தது ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால், அந்த அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டிருக்கும் 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் வழங்கிவிட்டது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்று அரசு கூறுகிறது. இதை எவரும் நம்பமாட்டார்கள். இதை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்க அரசு அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
*****************
இணைந்த தீர்வு?
வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்துக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
அதிகாரம் பரவலாக்கப்படாவிட்டால் நாடு பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று தெரிவித்தார்.
நவ சமசமாஜக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அளவெட்டியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதனாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவே விரும்புகின்றது.
தமிழ் மக்களுக்கு உரிய தலைமையை வழங்கி ஜனநாயக செயற்பாட்டைக் கூட்டமைப்பு முன்னெடுத்து இன்று தமிழ் மக்களின் குரல் ஒடுக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை பாதுகாப்புப் பிரிவினர் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இராணுவத்தினரே தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்படியாயின் ஆட்சித் தரப்பில் முரண்பாடு உள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
*****************
பிரித்தானிய விவாதம்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குழுநிலை விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று நடைபெறவுள்ளது.
பிரதிநிதிகள் சபையின் நாடாளுமன்ற அமைப்புகளுக்கான அறையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மனித உரிமைகள் குழு மற்றும் லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகியன இன்றைய இந்த விவாதத்துக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளதுடன், சனல் 4 ஒளிரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தையும் திரையிட்டுக் காண்பிக்கவுள்ளன.
இந்த விவாதத்தில் பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்த ஆண்டுக்குள் முறைப்படியான விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், இந்த விவாதத்தின் போது, தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரப் பிரிவு செய்தியாளர் ஜொனாதன் மில்லர் இன்றைய விவாதத்துக்குத் தலைமை தாங்குவார்.
*****************
உலக ஆதரவு தேடும் பீரிஸ்?
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கு பக்கபலமாக உள்ளன என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளை அங்கீகரிக்கும் நண்பர்களாக அவர்கள் உள்ளனர்.
தங்களுக்காக அவர்களின் குரல்கள் ஒலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டுத் தலைவர்களுடன் தமது அரசுத் தலைவர் கலந்துரையாடிய போது அவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் இது புலனாகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்பதையும் அவ்வாறான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அரசுத் தலைவருடனான சந்திப்பின்போது சீன அரசுத் தலைவர் மிகவும் திடமான முறையில் தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவரின் இந்தக் கூற்று இலங்கைக்கு பெரிதும் உறுதுணையாக அமைகின்றது எனவும், இதன் மூலம் இலங்கை தனிமைப்படவில்லை என்பதுவும் தமக்குப் பக்கபலமாக பல உலக நாடுகள் உள்ளன என்பதும் தெளிவாகின்றது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
*****************
பொய் யாருக்கு?
அரச ஊடகங்கள் அனைத்தும் வடிகட்டின பொய்களையே செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்கள் ஊடக தர்மத்துக்கு அப்பால் சென்று தங்கள் எஜமானர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கிலான செய்திகளை வெளியிடுவதற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய லக்பிம சிங்கள நாளேட்டிற்கு அளித்துள்ள விசேட நேர்காணலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இன்றைய நிலையில் தான் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகளை முடக்கி வைக்க முனைகின்றது.
அதன் காரணமாக நாட்டில் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களையோ, ஊர்வலங்களையோ நடாத்த முடியாதுள்ளது.
அத்துடன் அரச ஊடகங்கள் அனைத்தும் மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக வடிகட்டின பொய்கள் மூலமாக அரசாங்கத்தின் நோக்கங்களைப் பூர்த்தி செய்யவே துணை போகின்றன.
அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடர்வதாயின் நாளாந்தம் பல வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆயினும் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்களும் அரசாங்க ஊடகங்களின் பக்கச்சார்பான நடத்தை குறித்து நன்றாகவே புரிந்து கொண்டுள்ளதால், அதன் போலியான செய்திகள் மக்களிடம் எடுபடுவதில்லை என்றும் கரு ஜயசூரிய தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
*****************