Friday 17 June 2011

செய்திகள் 17/06


நாடு கடத்தப்பட்டோரிடம் விசாரணை
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 38 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள 38 தமிழர்களும் விசாரணைக்கென தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடிகயல்வு திணைக்களக் கட்டுப்பாட்டார்ள் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து 28 பேரே நாடு கடத்தப்படவுள்ளதாக தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
************
யுத்தக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சேர்பிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட யுத்தக்குற்ற நடவடிக்கைகளை இலங்கை முக்கியஸ்தர்கள் மீதும் மேற்கொள்ள வேண்டுமென செனல்-04 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
செனல்-04 தொலைக்காட்சியின் பணிப்பாளர்களில் ஒருவரான கால்லம் மன்ரே என்பவர் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைத்து வருவதாக இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
"இலங்கையின் படுகொலைக்களம்" காணொளி செனல்-04 தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்டதன் பின் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானியத் தமிழர் பேரவை என்பவற்றின் முக்கியஸ்தர்கள் செனல்-04 முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து தற்போது இலங்கையின் போர்க்குற்றங்கள் சேர்பியாவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களுக்கு ஒப்பானது என்ற பிரச்சாரத்தை செனல்-04 தொலைக்காட்சிச் சேவை ஆரம்பித்துள்ளது.
இதுவரையில் இலங்கையின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல்-04 தொலைக்காட்சி மூன்று ஒளிநாடாக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் அந்த சிங்களப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
**************
யுத்தக் குற்ற காட்சிகளை எதிர்க்கும் ஐ.தே.க!
செனல்-04 தொலைக்காட்சியின் காணொளிகளை ஐ.தே.க. கடுமையாக எதிர்க்கின்ற போதிலும் அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
செனல்-04 காணொளிகள் இலங்கையின் நற்பெயருக்குக் கடும் களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பதால் அதனை ஐ.தே.க. வன்மையாக எதிர்க்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஆயினும் அரசாங்கம் அது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது குறித்து தாங்கள் கவலையடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான சம்பவங்களின் போது எந்தக் கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அதற்குப் பதிலளித்தாக வேண்டும்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் செனல்-04 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த முதலாவது காணொளியின் போதும் அரசாங்கம் இதே போன்றே மௌனம் சாதித்திருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காணொளியின் போது அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருக்குமாயின் இன்றைய நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது.
அரசாங்கம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளின் போது முகம் கொடுக்கும் கிண்டல் மற்றும் வன்முறை கலந்த நடைமுறையானது இவ்வாறான பிரச்சினைகளின் போது கைகொடுக்காது.
அதற்குப் பதிலாக புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
*************
தீர்வு எங்கே?
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றமையே அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்களுக்கான பிரதான காரணமாகும் என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன தெவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்குமாயின் அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அப்படியே இல்லாது போய்விடும்.
இல்லையேல் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை யாராலும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக் காட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்காமல் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.
இதுவே செனல் 4 விடயம் தொடர்பான பல்வேறு அழுத்தங்களுக்கான காரணமாகும்.
இன்று இலங்கைக்கு எதிராக பல்வேறு மட்டங்களில் இருந்து அழுத்தங்கள் எழுந்த வண்ணமேயுள்ளன.
எல்லாவற்றையும் உதாசீனப்படுத்தி விட்டு இருந்து விட முடியாது.
இன்று இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டு அரசாங்கம் கூட கிளர்ந்தெழுந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
**************
யாழில் மக்களின் அச்ச நிலை
யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு மத்தியிலேயே வாழவேண்டிய நிலைமை காணப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பிரிட்டிஷ் துணைத் தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இலங்கைக்கான பிரிட்டிஷ் துணைத் தூதுவர் மார்க் கூடிங் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச் சந்திரன், அப்பாத்துரை விநாயக மூர்த்தி ஆகியோர் யாழ். நகரில் உள்ள எக்ஸ்போ பவேலியனில் சந்தித்து உரையாடினார்கள்.
இந்தச் சந்திப்பின்போதே யாழ். குடா நாட்டில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்தும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாகவும் அவர்கள் தூதுவரிடம் எடுத்து விளக்கினர்.
இச்சந்திப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த பிரிட்டிஷ் துணைத் தூதுவர் மார்க் கூடிங், யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்கள், மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
மேலும் தற்போதைய சூழலில் இராணுவத்தினன் தலையீடுகள் அதிகத்துள்ளமை குறித்தும் இராணுவ புலனாய்வாளர்கள் எனக் கூறிக்கொண்டு வரும் பலரும் மக்களுக்கு அச்சுறுத்தல்களை விடுப்பது குறித்தும் ஒரு சில பிரதேசங்களில் மீள்குடியேற்றம் நடைபெறும் அதேவேளை சில பகுதிகள் நில ஆக்கிரமிப்புக்கு உட்படுகின்றமை தொடர்பாகவும் அவருக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பினைக் கூட இராணுவத்தினர் அவமதித்து குடா நாட்டு மக்களின் வீடுகளுக்குச் சென்று பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படங்களை எடுப்பது குறித்தும் பிரிட்டிஷ் துணைத் தூதுவன் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது என்றார்.
இதேவேளை யாழ். விஜயம் மேற் கொண்ட பிட்டிஷ் துணைத் தூதுவர் கூடிங் தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையம் மற்றும் மீள்குடியேறிய வலி. வடக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலத்தையும் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
*************
ஐநாவில் ஸ்ரீலங்காவின் நிலை?
ஐ.நா. படையினருக்கு 3 எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும் இரு விமானங்களை வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளதாகவும் ஆனால் அவற்றை ஐ.நாவினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் எனவும் டர்டில்பே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவின் கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையினருக்கு தாக்குதல் வான் கலங்கள் போதாமலுள்ள நிலையில் ஐ.நாவுக்கு உதவுவதற்காக இவ்வான்கலங்களை வழங்க இலங்கை முன்வந்துள்ளதாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி டர்டில்பே செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரங்கள் தொடர்பாக இலங்கைப் படையினர் உன்னிப்பான அவதானத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் இலங்கை வழங்க முன்வந்த வான் கலங்களை ஏற்றுக் கொள்வது சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கையின் மனித உரிமை நடவடிக்கை குறித்து அமெரிக்க மீளாய்வையும் தூண்டும் என இச்செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
**************