Thursday 9 June 2011

செய்திகள் 09/06


தமிழக தீர்மானத்திற்கு நன்றி

ஸ்ரீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம்.
இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக எமது உரிமைகளை நசுக்கிக்கொண்டே வருகின்றது.
கடந்த 2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தார்கள்.
அவர்களின் வாழ்விடங்கள் தரைமட்டமாகி சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னுமே அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் இருப்பதைக் காணலாம்.
விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்ததன் பிற்பாடும் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புகள் தமிழர் பகுதிகளில் தொடர்வதுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிபோய்க்கொண்டேதான் இருக்கின்றன.
இந்த நேரத்தில் ஐ.நா. சபையும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும்படி கோரி அறிக்கை இட்டுள்ளது.
இந்த அறிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அத்துடன் தற்போது தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட "இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதுடன் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் தமிழக மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர தொடர்ந்தும் பாடுபடவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
**********

நிலைப்பாடு என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதிலளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.
நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றம் கூடிய போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த தகவல் உறுப்பினர்களிடம் பரவியதால் பரப்பரப்பாக இருந்தது.
இந்தநிலையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுந்து, தமிழ்நாடு சட்டசபையில் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து என்ன என்று வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம் கேள்வி எழுப்பினார்.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இது மிகவும் முக்கியமான விவகாரம்.
இந்தியா விடயத்தில் எல்லாமே சரியாகத் தான் இருப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால் என்ன நடக்கிறது அங்கே? என்று ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பீரிஸ் அதற்கு எந்தப் பதிலையும் கூறாமல் உதடுகளை இறுக்கப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
பின்னர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா எழுந்து இதுபற்றி அரசாங்கம் ஆராய்வதாகக் கூறி சமாளித்துக் கொண்டார்.
************

அறிக்கை விடுமா?
தமிழகச் சட்டசபையில், இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிராகப் பொருளாதார தடை விதிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தொடர்பாக இலங்கை அரசு அறிக்கை ஒன்றை விடுமா என பாராளுமன்றில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இக்கேள்வியை தொடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்துக் கட்சிகளும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறை வேற்றியுள்ளன.
இது மிகவும் அவதானமாக நோக்கப்படவேண்டிய ஒரு விடயம்.
இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிராகப் பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
பாரதூரமான இந்தத் தீர்மானத்தை கண்டித்தோ ஆட்சேபித்தோ அறிக்கை வெளியிட முடியுமா? அந்தத் துணிச்சல் இந்த அரசுக்கு உண்டா? என்று ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபையின் முதல்வர் நிமல் சிறி பால டி சில்வா இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான உறவு பலமானதாகவும் நெருக்கமானதாகவும் உள்ளது என்று கூறியதோடு நேரடியான பதில் எதனையும் அளிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு மக்கள் திருப்பதியடையும் வகையில் மட்டுமல்லாது தென் பகுதி மக்களும் திருப்தியடையும் வகையிலேயே அரசியல் தீர்வு காணப்படும் என்று நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நன்றி தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் விநோநோகராதலிங்கம், இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு கூட்டமைப்பு சார்பிலும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
*************
சந்திப்பிற்கு விளக்கம்
சிறிலங்கா அரசுக்கு ரஸ்யா ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மிடம் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த திங்களன்று தன்னை சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் அவர்கள் சிறிலங்கா அரசுக்கான ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறு கோரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான ஆதரவை ரஸ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியதாக செய்தி வெளியிட்டதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முனைவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில நாளேட்டின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய நல்லிணக்கம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் பற்றி அவர்கள் விளக்கமளித்தாகவும் ரஸ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அர்த்தமுள்ள பேச்சுக்கள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ரஸ்யாவின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கியதாகவும், சிறிலங்கா அரசுக்கு கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் மூலம் எதிர்காலத்தில் நல்லிணக்க சூழல் உருவாகும் என்று நம்பிக்கை வெளியிட்டதாகவும் ரஸ்யத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
************
தஞ்சம் கோரிய தமிழர்களை நாடு கடத்த முயலும் பிரித்தானியா?
அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜுன் 16ம் நாள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிறப்பு விமானம் ஒன்றில் இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய எல்லை முகவரகத்தை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட பலருக்கு பிரித்தானிய எல்லை முகவரகம் வெளியேற்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் சட்டவாளர் நிசாம் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 300 பேரில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 16ம் நாள் பிற்பகல் 5 மணிக்கு இந்த சிறப்பு விமானம் லண்டனில் இருந்து புறப்படவுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
************
இலங்கையின் கொலைக்களம்!
யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா? என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது.
இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர்.
இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள்.
இந்த தொகுப்பை பலர் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவார்கள் என்று கருதியபோதும் இதிலுள்ள உள்ளடக்கம் மானிடத்தின் உயிர் நாடியை உலுப்பும் செயலாக உள்ளதாகவும் இப்படியான சம்பவங்களை வெளிப்படுத்ததாமல் இருப்பது ஆபத்தானது என்றும் கருத்து வெளியிட்டனர்
*************