Tuesday 7 June 2011

செய்திகள் 07/06


பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருடன் ஸ்ரீலங்கா அமைச்சர் சந்திப்பு
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலானஉறவுகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூல் நடைபெற்ற 10 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் ஆயுத பாதுகாப்பு சவால்கள் எனும் தலைப்பில் அமைச்சர் பீரீஸ் உரையாற்றியிருந்தார்.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ். திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் ரஷ்யாவின் பிரதி பிரதமர் சேர்ஜி இவனவ்வுடனும் இருதரப்பு பேச்சு நடத்தியுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இம் மாநாட்டில் சிறிலங்காவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பாதுகாப்பு செயலரோ கலந்து கொள்வதைத் தவிர்த்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இந்த மாநாட்டில் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல் விவகாரங்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்குப் பதிலளிப்பதற்கு சிக்கல் ஏற்படலாம் என்பதாலேயே சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாடு கடந்த 3ம் நாள் இரவு ஆரம்பமாகி 5ம் நாள் நிறைவடைந்தது.
சிங்கப்பூரின் சங்கிரி-லா விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மூலோபாயக் கற்கைகளுக்கான அனைத்துலக நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
27 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சர்களுக்கான இந்த மாநாட்டில், சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தான் பங்கேற்றார்.
இவருடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் றொபேட் கேற், இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் பல்லம் ராஜு, பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, கொரியா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், நியுசிலாந்து, சிலி, ஜேர்மனி, மியான்மர், மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் ஸ்ரீலங்காவில் இருந்து மட்டும் வெளிவிவகார அமைச்சர் சென்றிருந்தார்.
ஸ்ரீலங்கா அதிபர் இந்த மாநாட்டில் பங்கேற்காது போனாலும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் கூட அவர் அனுப்பி வைக்கவில்லை.
சிறிலங்கா மீது எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுகளும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே சிறிலங்கா தொடர்பான கேள்விகள் இந்த மாநாட்டில் கிளப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கிலேயே சிறிலங்காவின் சார்பில் வெளிவிவிகார அமைச்சர் பீரிஸ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சிறிலங்கா இராணுவம் மீதே அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், வெளிவிவகார அமைச்சருடன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் அனுப்பி வைக்கப்படவில்லை.
அவருக்குப் பதிலாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க ஆனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************

காத்திருந்து கழுத்தறுக்கு வைக்கும் தந்திரம்!
இலங்கைப் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கைக்கான பதிலை தாம் எதிர்பார்த்திருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கின்றார்.
இந்த அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும்.
அதனைத்தான் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்திருக்கின்றது எனவும் பான் கீ மூன் இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள பிந்திய செய்தியில் இலங்கைப் போரின்போது குறிப்பாக போரின் இறுதிக்கால கட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்புக்கான சாசனங்கள் எந்தளவுக்குப் பாதுகாக்கப்பட்டன என்பதையிட்டு நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவித்த பான் கீ மூன், அதனையடுத்து கடந்த 40 நாட்களாக அது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என நவநீதபிள்ளை தெரிவித்திருக்கும் கருத்தை பான் கீ மூன் ஆதரிக்கிறாரா என்பது பற்றியும், ஐ.நா.வின் நடவடிக்கைகளை மறபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அவரது பரிந்துரைகள் தொடர்பாகவும், ஐ.நா. அதிகாரியான விஜய் நம்பியார் தொடர்பிலும், குறிப்பாக சரணடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாகவும் பான் கீ மூனிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த பான் கீ மூன், அங்கத்துவ நாடுகளே இது தொடர்பான தீர்மானத்தை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு அவர் பதிலளிக்கவில்லை.
ஸ்ரீலங்கா அரசின் பதிலை தான் எதிர்பார்த்திருப்பதாகவும், தினசரி, வாராந்தம் ஸ்ரீலங்கா அரசிடமிருந்து பதில் வந்திருக்கின்றதா என்பதையிட்டு தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நிபுணர்குழுவின் அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவே அதிகளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறும் கடமைப்பாடு அவசியமானதாகும்.
நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல் செய்வது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசுடன் தான் தொடர்ச்சியாகப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் இதனைத்தான் சர்வதேச சமூகமும் விரும்புகின்றது எனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
**************

சுதந்திரத்தை இழந்த சுதந்திர வர்த்தக வலயம்!
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து உடனடியாக இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என இலங்கையில் சக்தி வாய்ந்த தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை அரசு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உயர்பாதுப்பு வலயமாக அறிவிக்கும் திட்டத்தினையும் மீளப்பெற வேண்டும் என சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 30 திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பீபீசிக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் போராட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொண்டு உரியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த சங்கம் ரோஷேன் சானக்க உட்பட பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கு 5 மில்லியன் வரையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
**************

கூட்டமைப்பு உருவாகுமா? உருப்படுமா?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஆராய்வதற்கான முக்கிய கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற இருக்கிறது.
கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக முன்னர் முயற்சி எடுக்கப்பட்டபோதும், கூட்டமைப்பில் இடம்பெறும் கட்சிகளின் விருப்பைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமக அந்த முயற்சி தடைப்பட்டு வந்தது.
நாளை மறுதினம் இடம்பெறும் கூட்டத்தில் அரசியல் கட்சியாக கூட்டமைப்பை பதிவு செய்வது குறித்து முக்கியமாக ஆராயப்படும்.
கூட்டமைப்பின் கிளைகளை வெளிநாடுகளில் திறத்தல், உள்நாட்டில் மேலும் சில கிளைகளைத் திறத்தல் ஆகியன தொடர்பாகவும் கூட்டத்தில் ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
************

அமெரிக்க இரட்டை வேடம்
அமெரிக்கத் தூதரகப் படைத்துறை அதிகாரி நீதித்துறையில் மேற்கொள்ள முயற்சித்த குழப்பங்கள் மூலம் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைந்துள்ளதாக இலிநோயிஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் பிரான்சிஸ் பொயில்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற யுத்தவெற்றி அனுபவப் பகிர்வு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட லெப். கேணல் லோரன்ஸ் ஸ்மித்தின் கருத்தின் பின்னனியில் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனே இயங்கியுள்ளது.
இலங்கையின் அழைப்பை அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் நிராகரித்துள்ளபோதும், பென்டகனின் அனுமதியுடன் ஸ்மித் மாநாட்டில் பங்குபற்றியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக பங்குபற்றிய அவரின் கருத்துக்களும் உத்தியோகபூர்வமானவையே பென்ரகனின் கருத்தையே அவர் அங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவரின் கருத்து தனிப்பட்டது என அமெரிக்காவின் வெளியுறவுத்திணைக்களம் மறுத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் சரணடைவு நடவடிக்கைகளை சந்தேகிப்பதன் மூலம் ஸ்ரீலங்கா அரசு மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை வலுவிழக்கச் செய்ய அவர் முற்பட்டுள்ளார்.
இது ஒரு இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.
எனவே தமிழ் மக்கள், அமெரிக்காவின் இந்த அணுகுமுறை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
************
இலங்கையின் படுகொலைக் களம் - என்ன செய்ய வேண்டும்?
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் ஜூன் 14ஆம் நாள் இரவு 11:00 மணிக்கு வெளியிடவுள்ள 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற ஒரு மணித்தியால காணொளி விவரணப் படத்தை வேற்றினத்தவர் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்க முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  
இலங்கையின் படுகொலைக்களம் எனும் காணொளி கடந்த 3ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்துலக மன்னிப்புச்சபை, மற்றும் சனல்-4 தொலைக்காட்சி ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் ஐ.நா பிரதிநிதிகளுக்குக் காண்பிக்கப்பட்டது.
இதனைப் பார்வையுற்ற ஐ.நா மற்றும் மனிதநேய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்தது மட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கைக்கும் அப்பால் முள்ளிவாய்க்காலில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி எண்ண தலைப்பட்டுள்ளனர்.
இது பற்றி செய்தி வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சி, ஐக்கிய நாடுகள் சபை உரிய நேரத்தில் செயற்படத் தவறியமையை சுட்டிக்காட்டி, இது தமிழ் மக்கள் தமக்கிழைத்த துரோகமாகப் பார்க்கின்றனர் எனக் கூறியதுடன், இனியும் ஐ.நா விரைந்து செயற்படாது மௌனம் காக்கக்கூடாது எனக் கூறியிருந்தது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இடம்பெற்றுவரும் 17வது கூட்டத்தொடர் விவாதத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவும் சிறிலங்கா அரசாங்கம் மீதான கண்டனங்களை வெளியிட்டு, அழுத்தங்களைப் பிரயோகித்துள்ள போதிலும், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் அங்கு அமைதி காத்துள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  
பிரித்தானிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் மிக நெருங்கிய உறவைப்பேணி தமிழ் மக்களிற்கு என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி தொடர்ச்சியாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்ற போதிலும், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக்குழு உருவாக்கப்பட்டு அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும், இன்னும் கடும் பணியாற்றி இந்த அரசாங்கத்தின் ஆதரவை முழுமையாகப் பெற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டுமன்றி, எமது பிரச்சினையை வேற்றின மக்கள் மற்றும் அரசாங்க மட்டத்தினர், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் வர்க்கம், உரிமைக்காகக் குரல் கொடுப்போர், பாடசாலை மற்றும் கல்விச் சமூகம், சாதாரண பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டு செல்லும்போது அரசாங்கத்திற்கான அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என நம்புவதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
***************