Sunday 12 June 2011

செய்திகள் 12/06


நடந்தது இனப்படுகொலையே - அருந்ததி ராய்

பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் லண்டனில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பொன்றில் பேசுகையில் சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே என தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற இக்கொடுமையை போல் ஒன்றை தான் வேறெங்கும் கண்டதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியட்ட அவர் குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து அப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அப்பகுதிக்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் தமக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ நலன்சார்ந்த தந்திரோபாய ரீதியில் சிறீலங்காவில் இவ்வாறான கொடிய போருக்கும், அதனூடான இனப்படுகொலைக்கும் அனுமதித்துள்ளதாகவும், சிறீலங்காவில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக்கொண்டு அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், அதேவேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு தான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப்போல் நடாத்தப்படுவதை தான் கண்டதாகவும், இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலும் தெரிவித்தார்.
*************
உறுதிமொழிகளை நம்பி ஏமாறும் உறுதியற்ற கூட்டமைப்பு!
ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நீடிக்கக் கூடியதுமான தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கும் என்று கொழும்பு வந்த இந்திய குழுவினர் சந்திப்பின் போது தம்மிடம் உறுதியளித்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் மூவரணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இந்தியத் தூதரகத்தில் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி 11.45 மணி வரை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோரும், கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக் கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், அரசுத் தலைவர் சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியட்ட போது இந்தியத் தரப்புடன் நடத்திய பேச்சுக்கள் நம்பிக்கை தரக்கூடியனவாக அமைந்திருந்தன.
தமிழ் பேசும் மக்களின் முக்கிய விடயங்கள் குறித்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அந்தக் கோரிக்கைகள் சரியானவை என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்றும் இந்தியத் தரப்புத் தெரிவித்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்ட இந்தியா தொடர்ந்தும் உதவும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தியத் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இலங்கை அரசுடன் ஆறுகட்டப் பேச்சுக்கள் நடந்து முடிந்த போதும் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
இழுத்தடிக்கும் போக்கே இலங்கை அரசுத் தரப்பில் காணப்படுகின்றது என்றும் தமிழ் பேசும் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதும் தமிழ்ப் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்துவதும் தொடர்கின்றன என்றும் இந்தியத் தரப்பிடம் தெரிவித்துள்ளனர்.
**************

ரஷ்ய ஆதரவு தேடிப் பறக்கும் மகிந்த
சர்வதேச ரீதியாக போர்க்குற்றம் தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, அதற்கெதிரான செயற்பாடுகளுக்காக ரஷ்யாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செவ்வாய்கிழமை அந்த நாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக ரஷ்யாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதும், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ரஷ்யத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதும்தான் அவரது இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்ய அரசுத் தலைவர் டிமிட்ரி மெட்வீட்டுடன் தனியாகப் பேச்சுக்களை நடத்தவிருக்கும் மகிந்த ராஜபக்ஷ, அதன்போது ஐ.நா. நிபுணர்குழு வெளியிட்ட போர்க் குற்ற அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்காக நன்றிகளையும் தெரிவிக்கவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சென் பீற்றர்ஸ்போர்கில் நடைபெறவிருக்கும் சர்வதேச பொருளாதார மநாட்டிலும் பங்குகொள்ளும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, உலகத் தலைவர்கள் பலருடனும் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.
ஜுன் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவிருக்கின்றது.
இதில் சீன அரசுத் தலைவர் ஹ+ ஸின்டாவோவும் பங்குகொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஐ.நா. நிபுணர்குழு வெளியிட்ட பின்னர் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது ரஷ்யத் தலைவருக்கும் ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ விளக்குவார் எனத் தெரிகின்றது.
*************
அதிகாரம் வழங்க மறுக்கும் மகிந்த
இனப்பிரச்சினை தீர்வுக்கு 13ஆவது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தி அதிகாரபரவலாக்கலை மேற்கொண்டாலும் காணி, மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க முடியாது என சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச நேற்று இந்திய உயர்மட்ட குழுவிடம் தெரிவித்து விட்டார் என சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த அதிகாரங்களை வழங்குவதற்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக இந்திய குழுவிடம் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார்.
1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களும் மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அதை மீளப்பெற்றுக்கொண்டது.
இந்தியாவில் மாநிலங்களுக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டது போல் இலங்கையில் மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்களை வழங்கி 13வது அரசியல் அமைப்ப திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய குழு வலியுறுத்திய போது மாகாணசபைகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும், தமிழ் மக்களுக்கான பாதுகாப்புமே இனப்பிரச்சினையில் முக்கிய விடயமாக காணப்படுவதாகவும், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இனப்பிரச்சினை ஒரு போதும் தீராது என தமிழர் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.
இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது.
*****************
மக்களை ஏமாற்றும் அரசு
அவசர காலச்சட்டத்தைத் தளர்த்தப் போவதாகக் கூறி அரசாங்கம் பொதுமக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள் வாயிலாக அவசர காலச் சட்டத்தை தளர்த்தப் போவதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இரிதா திவயின" ஞாயிறு வாராந்த திவயினப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே ஜே.வி.பி. கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் அவசர காலச்சட்ட விதிகளைத் தளர்த்தப் போவதாக ஊடகங்கள் வாயிலாக அரசாங்கம் பெருமெடுப்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடொன்றின் போதும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதுபற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி சட்டமாஅதிபரே கூட அவசர காலச்சட்டத்தை தளர்த்துவது குறித்து ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒருபுறத்தில் பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டு மறுபுறத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக அவசர காலச்சட்டத்தை நீடித்துக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் அவசர காலச்சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் அடியோடு இல்லை என்பதையே அது புலப்படுத்துகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார
****************

அரசுக்கு எதிரானவர்களை அடையாளம் காண ஏற்பாடு
இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோரை வீடியோ ஒளிப்பதிவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நடைபெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதில் பங்குபற்றுவோர் இனிவரும் காலங்களில் காவல் திணைக்கள உதவியுடன் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளனர்.
அதற்கென காவல் திணைக்களத்தில் விசேட வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அணியொன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களின் எதிரொலியாகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதே நேரம் கட்டுநாயக்கவில் காவல்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் சிலர் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
பெரும்பாலும் அவர்களுக்கெதிராக எதிர்வரும் நாட்களில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
************