Saturday 4 June 2011

செய்திகள் 04/06


நீதிகோரி யாழில் உண்ணாவிரதம்!
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதியான வவுனியாவைச் சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரி அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். 
இம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையெனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
************
கட்டுநாயக்கா ஊமியரின் இறுதிச் சடங்கு இன்று
சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் மரணமான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியரின் இறுதிச்சடங்கு இன்று மினுவாங்கொடையில் நடைபெறவுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து சிறிலங்காவில் பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், இறுதிச்சடங்கிலும் மோதல்கள் வெடிக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.
மினுவாங்கொட கல்ஒலுவ கத்தோலிக்க சேமக்காலையில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
இதனால் வன்முறைகள் வெடிப்பதை தடுக்கும் நோக்கில் கம்பகா மாவட்டத்தில் சிறிலங்கா காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என்று ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பெருந்தொகையான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்லப்பட்ட ஊழியரின் இறுதிச்சடங்கை முன்னிட்டு சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்று விடுமுறை வழங்குமாறு விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த இறுதிச்சடங்கில் எவரும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பக் கூடாது என்றும், அவ்வாறு முழக்கங்களை எழுப்புவோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
*************
ஐதேக ஆர்ப்பாட்டம்
கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் முழுப்பொறுப்பேற்று, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று ஐக்கியத் தேசியக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ காவல்துறை மா அதிபரைப் போன்று பாதுகாப்புச் செயலரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொஷான் சானக்க காவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான சம்பவத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மருதானைச் சந்தியில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்துக்கு முன்பாக அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் அங்கிருந்த காவல்துறை அதிகாரியின் தொப்பியைக் கழற்றி அவமானப்படுத்திய போதும் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தாத காவல்துறையினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? இதன் பின்புலம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
***************
படகு விபத்தில் ஓரே குடுப்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிக் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோட்டைக் கல்லாறில் உள்ள ஓடைக் கரையில் படகு கவிழ்ந்ததில் மூன்று வயது குழந்தை உட்பட காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கோட்டைக்கல்லாறு நடேசபதி வீதியை சேர்ந்த ஐவரே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.
நேற்று பிற்பகல் 5.30மணியளவில் சொந்தங்களுடன் வள்ளத்தில் சென்ற 11பேர் ஓடையின் நடுப்பகுதியில் வைத்து வள்ளத்தின் தாங்கிக்கம்பு உடைந்த காரணத்தினால் வள்ளம் கவிழ்ந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அவர்கள் தத்தளிப்பதைக் கண்டு அவர்களை மீட்க பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் ஆறு பேரையே மீட்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காணமல் போன 5 பேரின் சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதர வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
*************
யாழிற்கு சென்ற வெளிநாட்டு படைப் பிரதிநிதிகள்!
கொழும்பில் நடைபெற்ற போர் அனுபவப் பகிர்வு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நாடுகளில் 15 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட படை அதிகாரிகள் நேற்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை நேரில் பார்த்து சென்றனர்.
நேற்று விசேட விமானத்தில் சென்ற அவர்கள் பலாலி தலைமையகத்தில் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடினர்.
அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகள் செய்த அவர்கள் யாழ். நூலகம், கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் சென்றனர்.
பின்னர் யாழ். நகரின் தற்போதைய நிலைமையைப் பார்த்த அவர்கள் பலாலி திரும்பி மூன்று மணி நேர பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பினர்.
நேற்று சென்ற படை அதிகாரிகளில் யாழ்ப்பாணத்தில் முன்னர் பணிபுரிந்த இந்திய படையைச் சேர்ந்த முன்னாள் மேஜர் ஜெனரல் அசோக்குமார் மேத்தாவும் அடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
***************
ஸ்ரீலங்காப் படைகளினால் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?
அண்மையில் வடக்கில் மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் நீக்கப்பட்ட 3 லட்சத்து 31ஆயிரத்து 214 தமிழர்களில் பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள போதும், அவர்களில் பெருமளவானோர் வன்னிப் போரில் படையினரால் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
2009 ம் ஆண்டுகளில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 5 ஆகும்.
ஆனால் 2010 ம் வருடம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் தற்போது 4 லட்சத்து 81ஆயிரத்து 791 பேரின் விபரங்களே உள்ளன.
இதில் 3 லட்சத்து 31ஆயழரத்து 214 பேர் வாக்காளர்களின் பெயர்கள் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை யாழ் மாவட்டத்தின் சிறிலங்கா தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ் கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளாதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அவர்களில் பெரும்பாலோனோர் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்கள் என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதுடன், வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பல ஆயிரம் மக்களை சிறீலங்கா படையினர் பலவந்தமாக கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர்.
எனவே சிறீலங்கா அரசு அண்மையில் மேற்கொண்ட புதிய வாக்காளர் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாலாவது ஈழப்போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் ஜுலை 23 ம் நாள் சிறீலங்கா அரசு வடக்கில் உள்ளுராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஆனால் 1983 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசும், சிங்கள காடையர்களும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்களவர்களால் சூறையாடப்பட்ட நாளும் ஜுலை 23 ஆகும்.
இந்த நாளை தமிழ் மக்கள் கறுப்பு ஜுலை என நினைவுகூர்ந்து வருகையில் சிறீலங்கா அரசு திட்டமிட்ட வகையில் இந்த நாளில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
**************