Thursday 23 June 2011

செய்திகள் 23/06


அதிர்ந்து என்ன பயன்?
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் நியூயோர்க்கில் நேற்று காண்பிக்கப்பட்டபோது இராஜதந்திரிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையும், மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் கூட்டாக இணைந்து இந்த ஆவணப்படத்தை நியூயோர்க்கில் அமைந்துள்ள மன்னிப்புச் சபை அலுவலகத்தில் காட்சிப்படுத்தியிருந்தது.
பெரும் அளவிலான இராஜதந்திரிகள் இக் காணொளியைப் பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹோகன்ன மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமையில் சுமார் 15 பேர் வரையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேஜர் ஜெனரல் சில்வா போர் நடைபெற்ற காலத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியிருந்ததுடன் இந்த ஆவணப்படத்திலும் இடம்பெற்றிருந்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டும் அவர்மீது உள்ளது.
இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டபோது மண்டபத்தில் மிகுந்த அமைதி காணப்பட்டதாகவும் ஆவணப்படத்தைப் பார்வையிட்ட எவருமே அதில் இடம்பெற்றுள்ள இதயத்தை உறையவைக்கும் காட்சிகளையும் இதுபோன்ற கொடுரங்களையும் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் வழமைபோல் அங்கு போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், அவ்வாறு இடம்பெற்றிருந்தால் லிபியா மற்றும் சூடான் போன்று சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்கி இருக்கும் எனவும் பாலித்த ஹோகன்ன தெரிவித்தார்.
ஆனால் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் நீண்ட விளக்கம் அளித்த பின்னர், ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததை பாலித்த ஹோகன்ன ஏற்றுக் கொண்டதுடன் அது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பாலித்தவின் இந்த விசாரணை குறித்த கருத்தை இதுவரை காலமும் சிறிலங்காவில் இடம்பெற்ற விசாரணைகளதும் ஆணைக்குழுக்களதும் வரலாறு குறித்த பின்னணியுடனேயே பார்க்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரில் கடந்த 3ஆம் திகதி இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டபோது பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிக்கோ, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஒஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் பார்வையிட்டிருந்தனர்.
இந்த ஆவணப்படத்தின் எதிரொலியாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் தெற்காசியாவுக்கான வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி இருந்தனர்.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்தபடி சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கத்திற்கு காலக்கெடு ஒன்றை விதிக்க வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
****************
பேச்சின் நோக்கம் என்ன?
அரசாங்கத்துடன் இன்று நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்படையில் பேச்சுக்களைத் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்னமும் எந்தவொரு பிரதிபலிப்பும் தென்படவில்லையென்றும் இன்றைய பேச்சுவார்த்தை அதற்கான களத்தை உருவாக்குமென்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதற்காகப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவொன்றை அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகுமென்பதே கூட்டமைப்பின் தற்போதைய கருத்தாகுமென்று தெரிவித்த அவர் அது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லையென்றும் அறிவிக்கும் போது அதுபற்றிச் சிந்திக்கலாமென்றும் கூறினார்.
அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஒரு போதும் கூறவில்லை என்று வலியுறுத்திய சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தீர்வொன்றை எட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனையே சம்பந்தன் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
****************
இராணுவ ஆட்சியே தமிழர் பிரதேசத்தில் - சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அளவெட்டித் தேர்தல் கூட்டத்தின் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளமை, நாட்டின் வடபகுதியில் இராணுவ ஆட்சிதான் நடக்கிறது என்பதை நிரூபித்துள்ளது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அங்கு சிவில் நிர்வாகம் நடைபெறவில்லை என்றும் கூறிய அவர், அளவெட்டித் தாக்குதலை நடத்திய இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தினார்.
அளவெட்டிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினர்தான் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதிப்படுத்திய நிலையிலும்கூட அவர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் விவகாரம் என்ற பிரச்சினை சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் கிளப்பினார்.
அளவெட்டியில் என்ன நடந்தது என்பதை அவர் நாடாளுமன்றில் விபரமாக பதிவு செய்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவத்தினர்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தமது முறைப்பாட்டில் தெரிவித்த போதும், மறுநாள் நீதிமன்றுக்கு ஆரம்ப அறிக்கையில் இனந்தெரியாத நபர்களே தாக்கினர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்ற விடயத்தையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த சம்பந்தன், அளவெட்டிச் சம்பவம் போன்ற அராஜகங்களையும் அடாவடித்தனங்களையும் புரிவதற்கு வாய்ப்பாக இருக்கும் அவசரகாலச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
****************
விசாரிக்கிறார்களாம்! எதை?
யாழ். அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்ற போது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது வரை 11பேரிடமிருந்து வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராணுவத்தினர் தான் இத்தாக்குதல்களை நடத்தினார்கள் என்று விசாரணைகளிலிருந்து உறுதியானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.
எனினும் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பொய்யான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முன்கூட்டியே கூட்டங்களுக்கு அனுமதி பெறுவதும் மிக முக்கியமானதென்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
****************
இந்திய அரசியலமைப்புக்கு ஆலோசனை கூறும் பீரிஸ்!
இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமிழக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் என குறிப்பிட்ட அமைச்சர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்ற போது தாம் இலங்கை அரசின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத்துடனேயே முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது.
அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் நாட்டுக்குக் கிடையாது.
தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடன் இலங்கை சம்பந்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம் எனவும் அதில் எவ்வித பிரச்சினையுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
****************
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாம் இலங்கையர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நடத்தப்படவுள்ளதாக அதன் பிரதான அமைப்பாளர் உதுல் பிரேமரட்ண தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போணவர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது உறவுகளுக்காக ஏங்கிக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் லலித் தெரிவித்தார்.
இந்த உறவுகள் தனது தந்தையை, கணவனை மற்றும் சகோதர,சகோதரிகளை காணாது தவிப்பது மட்டுமின்றி, அவர்களது குடும்ப வருமானத்தினை ஈட்டிக் கொடுக்கும் இவர்கள் இலலாமையால் கஸ்டநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனாலேயே தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தாம் ஏற்கனவே திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடத்தியுள்ளதாகவும், இந் நிலையில் ஒரு கட்டமாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் நாம் இலங்கையர் அமைப்பில் பிரதான அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இப்போராட்டங்களை மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் நடத்தவுள்ளதாகவும் இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைவரையும் ஒன்று திரட்டி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
****************
இராணுவப் பயிற்சி எதற்கு?
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளில் பெருமளவில் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு எதிர்க் கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் மீது தாக்குதல் முயற்சிகளையும், அவர்களை சிறையில் அடைக்கும் முயற்சிகளையும் உயர்கல்வி அமைச்சர் மேற்கொள்கிறார்.
மிகவும் காட்டுமிராண்டித்தனமாக அமைச்சர் செயற்படுகிறார் எனவும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் முகாமில் இரண்டு மலசலகூடங்களே உள்ளன.
அங்கு பயிற்சி பெறும் 300 மாணவர்களும் அந்த இரண்டு மலசலகூடங்களையே பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
ஆனால், அரச ஊடகங்களில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை.
இராணுவப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என அரச சார்பு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
அதேவேளை, ஆசனிக் இரசாயனக் கலவை மற்றும் பக்றீரியாவால் விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலாபம் என்பதை மட்டும் பார்த்து 350 ரூபாய் உர மூடை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டமையாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலாபத்தைப் பார்த்து அரசு செயற்பட்டதால் விவசாயிகளே துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
அதே போன்று ஆயிரக்கணக்கான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு வழங்க வைத்தியசாலைகளில் மருந்து இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
****************