Saturday 11 June 2011

செய்திகள் 11/06


தொடர்ந்தும் கைதிகளை மனிதாபிமானமற்று நடத்தும் ஸ்ரீலங்கா!
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏனைய கைதிகளால் மனிதாபிமானமற்ற வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
அரசியல் கைதிகளின் ஆடைகளை ஏனைய கைதிகள் பலவந்தமாகக் கழற்றி கேவலப்படுத்துகிறார்கள்.
இவற்றை கண்டும், குருடர்களைப் போல சிறை அதிகாரிகள் செயற்படுகிறார்கள் என நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண தெரிவித்துள்ளார்.
மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண நேற்று அங்கு சென்றார்.
அங்கு தமிழ் அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர் கேட்டறிந்து கொண்டார்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு நேற்றுக்காலை சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
தாங்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் தன்னிடம் மனம்விட்டுக் கூறியதாகவும் அதில் சில விடயங்கள் தனது கண்களை கலங்க வைத்தன எனவும் தெரிவித்துள்ளார்.
**********

மோசடிகள் நிறைந்த அரச காணி விற்பனை?
கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்குச் சொந்தமான நிலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது தொடர்பான தரவுகள் எதுவும் அரசாங்க கணக்குகளில் பதியப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
இராணுவத் தலைமையகத்திற்கு சொந்தமான நிலத்தை இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது தொடர்பாக எந்தக் கணக்கும் அரசாங்கப் பதிவேடுகளில் பதியப்படவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவே இந்த நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இது ஆபத்தானதொன்று மட்டுமன்றி அரசியலமைப்புக்கும் முரணான செயலாகும்.
10 - 20 ஏக்கர் வரையிலான நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தொடர்பான எந்த கணக்கும் திறைசேரியின் கணக்கில் இடம்பெறவில்லை.
இதுபற்றிய தகவல் நாடாளுமன்றத்துக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
இராணுவத் தலைமையத்திற்கு சொந்தமான நிலத்தை சங்கிரி லா நிறுவனம் மற்றும் சீன நிறுவனம் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
**********

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பரில்?
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவிருப்பதாக அறிவித்துள்ளது.
இறுதி அறிக்கை வாய்மூல மற்றும் எழுத்து மூலமாக பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் மாத்திரமே அமையும் என்று ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மண் விக்கிரமசிங்கா தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை முழுவதுமாக படித்துள்ளனர்.
ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கை ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலளிப்பதாக அமையாது என்றும் அவர் கூறினார்.
பெறப்பட்ட சாட்சியங்களை பகுப்பாய்வு செய்வது தற்போது நடைபெறுகின்றது.
மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் ஏற்கனவே சாட்சியமளித்தவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு சாட்சியமளிக்க வைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
ஆணைக்குழு வடக்கு மாகாணத்தில் சகல பிரதேசயலாளர் பிரிவுகளுக்கும் சென்று விசாரணை நடத்தியது.
கிழக்கிலும் தென்பகுதியிலும் மற்றும் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஆணைக்குழு மகிந்த ராசபக்ச தரப்பு புரிந்த போர்க்குற்றத்தை மறைப்பதற்கும், போர்க்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்குமே அமைக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நடுநிலையாளர்கள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் மகிந்த ராசபக்சவின் ஆதரவாளர்கள் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
*************

இந்தியக் குழுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
கொழும்பு சென்றுள்ள இந்திய உயர்மட்டக் குழுவினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்து இனப்பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளது என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பிரதமரின் செயலாளர் கே.நாயக் ஆகியோர் நேற்றுப் பகல் இலங்கை சென்று சேர்ந்தனர்.
இலங்கை வரும் முன்னர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் சென்னை சென்று, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து, இலங்கை தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்ந்தார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மறு வாழ்வு, தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கையுடன் எவ்வாறு பேச்சு நடத்தப்படும் என இந்தப் பேச்சுகளில் ஆராயப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த பின்னர் இலங்கை சென்றுள்ள இந்திய உயர் மட்டக் குழுவினருடன் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய உயர்மட்டக் குழு கூட்டமைப்பை இன்று காலை சந்திக்கும். கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்வர்.
புதுடில்லியின் செய்தியை கொழும்புக்குத் தெரிவிக்கும் அதேசமயம், 2009 மே யில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் இணங்கிக் கொண்ட கூட்டறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென தூண்டுதல் அளிக்கக்கூடுமென இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
***********

மன்மோகனுக்கு மகிந்த அழைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது. 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரடங்கிய இந்திய உயர் மட்ட தூதுக்குழு, இந்த அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டமை தொடர்பான கடிதத்தை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்ததாக அரசுத் தலைவரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்
*************

கைதிகளை வைத்து அரசியல் நடத்தும் அரசு
கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள், உணவுப் பண்டங்களை கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்படுவதாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கடந்த சில தினங்களாக கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட செல்லும் தமது உறவினர்கள் கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களை கைதிகளிடம் ஒப்படைப் பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக அரசியல் கைதிகளின் உறவினர்களால் காணாமல் போனோரை தேடியறியும் குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் போசகர் கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ன மூலம் சிறைச்சாலை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் விளக்கமளிக்கையில் உணவுப் பொருட்கள் மூலமாக போதை வஸ்துப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதால் அதை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்த பதிலில் திருப்தியடையாத கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, தமிழ் அரசியல் கைதிகளிடமும் இத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
அதையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை மேற்கொள்வதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
எனவே அரசியல் கைதிகள் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பாக தமக்கு அறியக்கிடைத்தால் அவற்றிற்கான தீர்வை பெற்றுத்தர தாம் நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***********