Saturday 25 June 2011

செய்திகள் 25/06


இனவெறி அரசின் துடுப்பாட்ட அணியை எதிர்ப்போம்!

ஆளும் மஹிந்த அரசாங்கத்தின் மாத்தறைக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இன்று சனிக்கிழமை பிரித்தானியா பிரிஸ்ரலில் நடக்கும் ஆட்டத்தில் ஸ்ரீலங்கா அணியில் இணைந்து கொள்கிறார்.
கொடூரமான ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து இந்த புகழ்மிக்க பிரதிநிதியை மீள அழைத்துள்ளது பற்றி கார்டியன் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சனல் 4 நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின்படி, இங்கிலாந்தானது இலங்கையின் கிரிக்கெட் சுற்றுலா குறித்து மீளக்கருத வேண்டும் என்று 87 வீதமான பிரிட்டன் மக்கள் கேட்டுள்ளனர்.
மஹிந்த அரசு கொலை செய்துள்ள 40ஆயிரம் தமிழர்களுக்காகவும் அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐ.நா நிபுணர் குழு ஆகியவை தெரிவித்துள்ளன.
ஆனால் அண்மையில் பி.பி.சி சிங்கள சேவையில் பேசிய ஜெயசூரிய, ஸ்ரீலங்காவானது மிக மோசமான பயங்கரவாதக் குழுவை அழித்துள்ளது என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அரசின் இச்செயலால் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.
இப்போது ஜெயசூரிய ஸ்ரீலங்கா அணியில் இணைக்கப்பட்டுள்ளதும் மஹிந்தவின் உத்தரவின் பேரில்தான் பிரித்தானியத் தமிழர்களை இழிவுபடுத்தவே இவ்வாறு அவர் செய்துள்ளார்.
ஆகவே, பிரித்தானியப் பிரஜைகளாகவும் தமிழர்களாகவும் நாங்கள் எங்களுடைய கோபத்தைக் காட்ட வேண்டும் என பிரித்தானிய இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மஹிந்தவுக்கு காட்டிய ஒரு எதிர்ப்புப்போல இப்போதும் நாங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
ஆகவே பிரித்தானியத் தமிழர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய தமிழ் இளைஞர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
***************
ஸ்ரீலங்காவுக்கு எதிராக வழக்கு?
அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செனல்4 ஊடகத்தின் முயற்சிகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முறியடித்ததனால் ஆத்திரமடைந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை இவ்வாறு இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த 23ம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்த திட்டத்தை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள சிரேஸ்ட சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
செனல்4 ஊடகத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஜே.டி.எஸ் என்னும் ஊடக அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
***************

பேச்சின் இரகசியம்?
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் கூட்டறிக்கை வெளியிட தீர்மானித்தமையினால் அது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிப்பது முறையல்ல என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் கூட்டறிக்கை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை இலங்கை மீனவர்கள் இந்தியாவிலும் இந்திய மீனவர்கள் இலங்கையிலும் கைது செய்யப்படுவது அவ்வப்போது இடம்பெற்றுவருகின்ற சம்பவங்களாகும்.
எனவே இவ்வாறு கைது செய்யப்படும் போது அதற்கென ஒரு முறைமை பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எவ்வாறெனினும் வன்முறை இதற்கு தீர்வல்ல என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய இரண்டு நாடுகளுக்கும் இடையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
***************

வடக்கில் ஜனநாயகம் எங்கே?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான மக்கள் சந்திப்பில் இராணுவம் உட்புகுந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனநாயகமோ சிவில் நிர்வாகமோ வடக்கு மக்களுக்கு இன்று இல்லாமல் போயுள்ளது.
தமிழர்களை அடிமைகளாக்கி சமாதானத்தை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் எதிர்ப்புக்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளது.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
***************
கண்ணாமூச்சி விளையாட தயார்!
போர்க் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கான தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழு வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் குறித்து முதலில் விசாரணைகள் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்ததென்று தெரியாத நிலையில், புதிய விசாரணை எனக் கூறி காலத்தை இழுத்தடித்து சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
தவறிழைக்கும் இந்தியா!
போருக்கு பிந்தைய நிவாரணப் பணிகளை முடுக்கி விடும்படி, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என சர்வதேச நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என, சர்வதேச நெருக்கடி கால குழு அறிவித்துள்ளது.
சர்வதேச நெருக்கடி கால குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் போர் நடந்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படவேண்டும்.
இது தொடர்பாக, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு பெரும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடக்கிறது.
இந்த விவகாரத்தில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.
மேலும், நிர்வாக ரீதியிலான விஷயத்திலும், ராஜபக்ஷே அரசை வலியுறுத்துவதற்கும், இந்தியா தயக்கம் காட்டுகிறது.
இலங்கை விவகாரத்தில், இந்தியா தற்போது பின்பற்றும் கொள்கைகள் பலன் அளிக்காது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும், இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
***************
திடீர் ஞானம் பெறும் ஜே.வி.பி?
மேற்குலக நாடுகள் தமது வல்லரசு கொள்கையை இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது திணித்து அவற்றை அடிமைப்படுத்திக் கொள்ள முனைவதாக ஜே வி பியின் செயலாளர் டில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜே வி பி கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யதிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளை தமது ஆதிக்கத்தின் கீழேயே வைத்துக்கொள்ள முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையையே இலங்கை விடயத்திலும் தற்போது கடைப்பிடித்து வருவதாகவும் ஜே வி யின்செயலாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளின் அதிகாரத்திற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
***************