Wednesday 8 June 2011

செய்திகள் 08/06


கட்டுநாயக்க உள்ளக பாதுகாப்பில் இருந்து இராணுவம் விலகல்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் உள்ளக பாதுகாப்பிற்கான சேவையில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
நேற்றிரவு அளவில் இவர்கள் அகற்றப்பட்டதாக ராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தின் நிலைமை தற்போது சுமூகநிலைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 26 ம் திகதி ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக காவல்நிலையம் மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்பின் பொருட்டு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், நேற்றிரவு முதல் ராணுவத்தினர் அகற்றப்பட்டு கட்டுநாயக்க காவல்நிலையத்தின் பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
**********
ரஷ்ய தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கெலோவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசியுள்ளது.
நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை ரஸ்யா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரப்புரைகளை மேற்கோண்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்து வரும் ரஸ்யாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் ரஸ்யா, சீனா போன்ற நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
***********



யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம்
யாழ். பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர்கள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பதவி விலகியதன் எதிரொலியாக நேற்று முதல் பல்கலைக்கழக செயற்பாடுகள் யாவும் செயலிழந்தன.
யாழ். பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள் மே மாதம் 9 ஆம் திகதி தமது பதவிகளில் இருந்து விலகிய போதும் மாணவர்களுக்கான விரிவுரைகள் இடம்பெற்று வந்தன.
எனினும் பரீட்சைகள், செயன்முறை ஆய்வுப் பணிகள் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக வெளி மாவட்ட மாணவர்கள் விரிவுரைகளைக் கைவிட்டு நேற்று தமது வீடுகளுக்குச் சென்றனர்.
இதனால் விரிவுரைகள் நேற்று நடைபெறாததுடன், கல்விச் செயற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு, சுமுக நிலை திரும்பும் போதே பல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
************
பேச்சுக்களை முறிக்க முயற்சியா?
சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் முடிவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை இப்போதே கணித்து விட முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் அனுரகுமார திசநாயக்கவின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபியுடன் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தப் பேச்சுக்களின் மூலம் உருப்படியான தீர்வுகளை எட்டவே முற்படுவதாகவும், அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமானால் அது தொடர்பாகப் பேசவேண்டும். பேசாமல் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
பிரச்சினைகளை கலந்துரையாடல்களின் மூலம் தீர்க்கவே முற்படுவதாகவும், ஆனால் இறுதி முடிவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை எவராலும் இப்போதே கணித்துக் கூறிவிட முடியாது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
இவரது நேற்றைய நாடாளுமன்ற உரையில் காணப்படும் நம்பிக்கையீனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை முறித்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முனைகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
**********



இந்திய உயர் மட்டக்குழு என்ன பேசும்?
உயர்மட்ட இந்திய அதிகாரிகள் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரைக் கொண்ட குழுவே வெள்ளியன்று கொழும்பு செல்லவுள்ளது.
இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்திய - சிறிலங்கா கூட்டறிக்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வு மற்றும் இந்தியாவின் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதே இந்தக் குழுவினது வருகையின் முக்கிய நோக்கம் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசின் முக்கிய பிரமுகர்கள் பலரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.
************



பான் கீ முனின் பதவிக்கான மௌனம்?
.நா பொதுச் செயலாளராக இரண்டாவது தடவையாக பான் கீ மூன் தெரிவு செய்யப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக பான் கீ மூன் மௌனம் சாதிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இது விவகாரம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த 40 நாட்களாக சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் எவ்வித மீளாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் இறுதிக்கட்ட போர் விவகாரங்களுக்கான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய ஐ.நாவின் நடவடிக்கைகள் ஆராயப்படுமென கடந்த ஏப்ரல் 25ஆம் நாள் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
நிபுணர் குழு அறிக்கைக்கு அமைய போர் குற்றங்களை விசாரிக்க சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்று அவசியம் எனக் கோரிய மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் அழைப்பினை பான் கீ மூன் ஆதரிக்கின்றாரா எனவும் அவ்வாறாயின் அவரின் பரிந்துரைகளுக்கு அமைய எவ்வாறான நடவடிக்கைகளை பான் கீ மூன் எடுக்கப்போகின்றார் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
குறிப்பாக சரணடைந்தபோது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு சரணடைவு தொடர்பாக உறுதிமொழி வழங்கப்பட்டதில் பான் கீ மூனின் செயல் ஆளணியைச் சேர்ந்த விஜய் நம்பியாருக்கு உள்ள தொடர்பு குறித்தும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்குப் பதிலளிக்கையில், இவ்விவகாரம் ஐ.நா உறுப்பு நாடுகளில் தஙகியுள்ளது என்று குறிப்பிட்ட பான் கீ மூன், கேள்வியின் இரண்டாவது பகுதிக்குப் பதிலளிக்கவில்லை.
சிறிலங்காவின் பதிலுக்காகத் தான் தொடர்ச்சியாகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் ஆசிய நாடுகளுக்கான குழுவுடனான சந்திப்பினைத் தான் மேற்கொண்டிருந்ததாக ஒரு ஊடவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டபோதே சிறிலங்கா விவகாரம் தொடர்பான இந்தப் பதிலை பான் கீ மூன் வெளிப்படுத்தியிருந்தார்.
.நா பொதுச் செயலாளராக தான் இரண்டாவது தடவையும் போட்டியிடுவதற்கு ஐ.நாவின் ஆசிய நாடுகளுக்கான குழு ஆதரவு தெரிவித்திருந்ததாக அவர் கூறியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
************