Sunday 26 June 2011

செய்திகள் 26/06


ஸ்ரீலங்காவின் சாதனைகள்?
சிறிலங்கா காவல்துறையினரால் செய்யப்பட்ட மிகவும் பாரதூரமான முறையிலான சித்திரவதைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் காவல்துறையினர் செய்த 323 பாரதூரமான குற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
1998 ஆம் ஆண்டிருந்து இன்று வரையிலும் சிறிலங்கா காவல்துறையினரால் செய்யப்பட்ட 1500 மனித சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளின் அறிக்கையினை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பொய் முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
**************
யாருக்கு உரிமை?
தென்பகுதி மக்களுக்கும், இராணுவத்தினருக்குமே வடக்கிலும் கிழக்கிலும் அதிக உரிமை இருப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற, அரசாங்கத்தின் நமக்காக நாம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான வீடுகளினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுவில் மொனராகலை, வெல்லவாய மற்றும் தேலுள்ள பகுதிகளில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டன.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த 31 இராணுவக் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் அங்கு உரையாற்றுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தென் பகுதி மக்களை விட தற்போது அதிகமாக சமாதானத்தின் லாபத்தை அனுபவிக்கின்றனர் என்றும் இந்த நிலையில் தென்பகுதி மக்களுக்கும், இராணுவத்தினருக்குமே வடக்கிலும் கிழக்கிலும் அதிக உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்க வேண்டுமே தவிர வெளிநாடுகள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
**************
ஜனநாயக விரோத அரசு?
எதிர்க்கட்சிகள் சார்பில் தம்மால் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைப்பிரேரணையை அரசு தோற்கடித்ததன் மூலம் நாட்டில் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சிப் பிரதித் தலைவர் கருஜயசூரிய, அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது பாராளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக்கட்சித்தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கருஜயசூரிய இதனைத் தெரிவித்தார்.
ஒரு ஜனநாயக நாட்டில் தகவல் அறியும் உரிமையை மறுத்திருப்பது இலங்கையில் தான் முதலாவதாக இடம்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக கரு ஜயசூரிய நேற்று கட்சித் தலைமையகத்தில் புத்தி ஜீவிகள் குழுவொன்றுடன் கலந்துரையாடினார்.
அண்மைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உண்மையை மூடிமறைத்து மக்களை தவறான திசையில் இட்டுச் செல்ல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கிலேயே இந்தப்பிரேரணையைக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக உரிமைக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய நாட்டில் அதனை மறுப்பது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
இந்த நாட்டில் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் ஊழல், மோசடி, முறைகேடுகள் தொடர்பாக பரவலாகவே பேசப்பட்டு வருகின்றது.
விசாரணைகளும் இடம் பெறுகின்றன. காலப்போக்கில் அவை மறக்கப்பட்டு விடுகின்றன. விசாரணைகளின் முடிவு என்னவென்பதை மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் முயற்சியானது குறுகியகாலத்தில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
**************
அமெரிக்க வழக்கை எதிர் கொள்ளும் மகிந்த!
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அனுப்பியுள்ள அழைப்பாணைக்குப் பதில் அனுப்பப் போவதில்லை என்று கூறியிருந்த சிறிலங்கா அரசாங்கம், இப்போது இந்த வழக்கை எதிர்கொள்ள சட்டநிபுணர் ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மகிந்த ராஜபக்சவின் நலன்களைக் கவனிக்க அமெரிக்காவைச் சேர்ந்த சட்டநிபுணர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்காவின் நீதி அமைச்சின் செயலர் சுகத கம்லத் தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை விடுத்துள்ள அமெரிக்க நீதிமன்றில் மகிந்த ராஜபக்சவின் நலன்களைக் கவனிக்க சட்டநிபுணர் ஒருவரை சட்டமா அதிபர் திணைக்களம் பணிக்கு அமர்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நட்டஈடு கோரும் மூன்று வழக்குகளிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த அழைப்பாணையை நிராகரித்து ஏற்க மறுத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தற்போது இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு முடிவு செய்துள்ளார்.
**************
இரட்டைக் குடியுரிம குற்றவாளிகளுக்கு ஆபத்து!
போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமை பெற்ற சிறிலங்காவின் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படக் கூடும் என்று சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ், கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய அதிகாரக் கொள்கை, சில புதிய வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் கொண்டு வரப்படலாம்.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டது பற்றி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரணை செய்வதற்குப் போதுமான காரணமாக உள்ளது.
லிபியா மீதான பலமான அனைத்துலக தலையீடானது, சிறிலங்கா மீதான பாரிய அனைத்துலக தலையீடு பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
**************
ஆபத்தான நிலையில் தமிழ்ப் பெண்கள்!
கொழும்பில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி வடக்கில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளவயதுத் தமிழ்ப்பெண்கள் பலர் கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போதே இந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் கர்ப்பத்தடை சத்திரசிகிசைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதான சிறுமி ஒருவர் தப்பி ஓடியதை அடுத்தே இந்தவிவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து தப்பிய அந்தச் சிறுமி காவல்துறையினரிடம் சென்று தனது நிலையைக் கூறியுள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினர் அந்தச் சிறுமியை தம்மிடம் ஒப்படைத்ததாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திசநாயக்க தெரிவித்தார்.
தப்பி ஓடிய அந்தச் சிறுமியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறிலங்கா காவல்துறையினர் மருதானையில் விபசார மையம் ஒன்றைச் சுற்றிவளைத்தனர்.
அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 8 பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அனோமா திசநாயக்க தெரிவித்தார்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 9 பெண்களில் 6 பேர் வடபகுதியையும், ஒருவர் கிழக்குப் பகுதியையும் சேர்ந்தவர்களாவர்.
முற்றுகையிடப்பட்ட அந்த விபரசார மையம், விருந்தினர் விடுதி போன்று சந்தேகத்துக்கு இடமின்றி செயற்பட்டு வந்துள்ளது.
தப்பி ஓடிய சிறுமி கொடுத்த தகவலை அடுத்து அங்கு தேடுதல் நடத்தப்பட்ட போது, அலுமாரிகளுக்குள் அந்தப் பெண்கள் எட்டுப் பேரும் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட எட்டுப் பெண்களில் இருவர் வயது குறைந்த சிறுமிகளாவர்.
இவர்கள் அந்த அறைக்குள் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த அறையில் இருந்து 1500 ஆணுறைகளும், காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற சிறுமி தாம் முல்லைத்தீவில் இருந்து தரகர் ஒருவர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளார்.
ஒரு முகாமையாளரின் கீழ் தாம் வௌ;வேறு இடங்களில் விபசாரங்களில் ஈபடுத்தப்பட்டதாகவும், அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
இதற்காக 500 ரூபா தொடக்கம் 1000 ரூபாவரை அந்த முகாமையாளர் அறவிட்டு வந்துள்ளார்.
மற்றொரு 18 வயது இளம்பெண் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் வசித்து வந்தவராவார்.
இவருக்கு கொழும்பில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி தரகர் ஒருவர் அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ மாது ஒருவரின் கீழ் இவர்களின் சுகாதாரத் தேவைகள் கவனிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அவர் மருத்துவர் ஒருவரின் உதவியையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து விபசார மையத்தை நடத்திய முகாமையாளரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இளம்பெண்களை வெளியாருடன் அனுப்புவதை தவிர்க்குமாறு வடக்கு கிழக்குப் பகுதி பெற்றோரிடம் அனோமா திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு அனுப்பும் பெற்றோர் மீது தாம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
**************
ஸ்ரீலங்காவுக்கு பொருளாதார தடை?
ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.
அண்மையில் நிறைவுற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை பிரேரிப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்த போதும், பல்வேறு காரணங்களால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போயுள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள அடுத்த மனித உரிமை அமர்வில் குறித்த பிரேரணையை முன்வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்வரும் செப்டம்பரில் மனித உரிமைக் கவுன்சிலின் ஆரம்பமானவுடன் சனல்4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பான தனது "இலங்கையின் படுகொலைக்களம்" காணொளியை மீண்டுமொரு தடவை ஒளிபரப்பத் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையொன்றுக்கான பிரேரணையை செப்டம்பரில் நடைபெறும் மனித உரிமைக் கவுன்சில் அமர்வின் போது அமெரிக்கா முன்மொழியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
**************