Sunday 19 June 2011

செய்திகள் 19/06


யாருக்கு வழக்கு?
30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி அரசுத் தலைவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு தமது அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
*************
என்ன செய்லாம்?
சிறிலங்கா அரசுக்கான அனைத்துலக ஆதரவு குறைந்துள்ளதாகவும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது தடைகளை விதிக்கக் கோரும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அனைத்துலக ஆதரவைப் பெறத் தவறியுள்ளதாக சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடரில் பங்கேற்ற அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசகுழு வெளிநாடுகளின் போதுமான ஆதரவைப் பெற்றுக் கொள்ளத் தவறியுள்ளதாகவும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைகள் தொடர்பாக மகிந்த சமரசிங்க சிறிலங்கா அரசின் முடிவுகளை எடுக்கும் உயர்மட்டங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு 9 நாடுகளே வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்திருந்ததாகவும், ஏனைய நாடுகள் கொழும்புக்கு எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இது சிறிலங்காவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த தீர்மானத்துக்கு ஏனைய நாடுகளின் ஆதரவை தேடும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்றும் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அனைத்துலக சமூகத்தின் பலமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சர் எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
*************

மீண்டும் மரத்திலேறும் வேதாளம்!
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்துள்ளது.
அது பற்றிக் கூட்டமைப்பு ஒரு போதும் கண்டுகொள்ளாது என்றும் அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் கட்சியின் இணைச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவும் இந்தத் தெரிவுக்குழு யோசனை தொடர்பில் திருப்தியாக இல்லை என்றும் தெரியவருகிறது.
கடந்த 10ஆம் திகதி கொழும்பு சென்றிருந்த இந்திய மூவரணியைச் சந்தித்த அரசுத் தலைவர், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்காகக் கொண்டு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தான் அமைக்க உத்தேசிக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த போது, தெரிவுக் குழுவை அமைப்பது குறித்து ஆராய்ந்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களே நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை அப்போது முன்வைத்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாரத்தில் தெரிவுக் குழு அமைக்கப்படலாம் என்று அரச தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் மீண்டும் ஒரு தெரிவுக் குழுவை அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு உடன்பாடுகள் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனப்பிரச்சினை இலங்கையின் உள்விவகாரம் என்பதால், அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் கொழும்பு அரசே முடிவு செய்ய வேண்டும் என்று இந்தியா வெளிப்படையாகச் சொல்லி வந்தாலும் தெரிவுக் குழு, அனைத்துக் கட்சிக் குழு போன்றவற்றை அமைத்து காலத்தை மஹிந்த வீணடிப்பதை புதுடில்லி விரும்பவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஆணித்தரமாக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தெரிவுக்குழுவை இந்தியாவும் எதிர்க்கும் நிலையில் இலங்கையில் அதனை எதிர்க்கும் சக்திகளுக்குப் புதுடில்லியின் ஆதரவு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்று கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
*************
எதுவுமே தெரியாது - சொல்வது ஐநா! நம்புவது யார்?
ஹெலிகொப்டர்களை இலங்கை வழங்க முன்வந்திருப்பது தொடர்பாக தங்களுக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லையென ஐ.நா. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது.
உக்ரேனில் தயாரிக்கப்பட்ட எம்.ஐ.24 ஹெலிகொப்டர் மற்றும் சீனத்தயாரிப்பான வை12 விமானங்களை தாங்கள் வழங்க முன்வந்திருப்பதாக விமானப்படை பேச்சாளர் அன்டி விஜயசூரிய தெரிவித்தாக மேற்கோள் காட்டப்பட்டிருந்த நிலையில் அவற்றை வழங்குவது தொடர்பான தங்களுக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லையென ஐ.நா. தெரிவித்திருப்பதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றிபிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை வழங்க முன்வந்தமை தொடர்பான ஐ.நா.வின் மீளாய்வானது போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நீசேர்க்கியிடம் இன்னர் சிற்றிபிரஸ் கேட்டது.
நான்கு மணித்தியாலயங்கள் கடந்த பின்னர் நீசேர்க்கியின் அலுவலகம் இந்தப் பதிலை இன்னர் சிற்றிபிரஸ{க்கு அனுப்பியிருந்தது.
இது தொடர்பாக இதுவரை விபரம் எதனையும் தாங்கள் பெற்றிருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 இல் கடற்கரை குருதிப்பெருக்கு என்று ஐ.நா.வின் பிரதி உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹொம்ஸ் குறிப்பிட்டிருந்த விடயத்தில் விமானப்படை சம்பந்தப்பட்டிருந்தது.
மிக அண்மையில் பிரிட்டனின் சனல்4 இல் கொலைக்களங்கள் ஆவணத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படமானது ஜூன் 21 இல் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் உட்புறத்தே திரையிடப்படவுள்ளது.
ஐ.நா.செயலாளர் நாயகமாக பான் கீ மூன் இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலம் தொடர்பாக பொதுச் சபையில் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்பாக இது திரையிடப்படவுள்ளது.
*************
ஆலோசனை சொல்லும் முன்னாள் அமைச்சர்
அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தமானது இலங்கையை அதிகளவுக்கு மேலும் தனிமைப்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்வதாகும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மோதலுக்குப் பின்னரான தருணத்தில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான எதிர்பார்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலைமை தற்போது உருவாகி வருவதாகவும் ஐ.தே.கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான சனல் 4 இன் ஆவணப் படமானது வெளியிடப்பட்டமை நாட்டின் பிரதிமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது நீதி விசாரணைக்குப் புறம்பான கொலைகள் இடம்பெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் ஆவணத்தை சனல் 4 வெளியிட்டுள்ளது.
கொடூரமான யுத்த காயங்களை இலங்கை சுமந்து கொண்டிருக்கிறது என்றும் அங்கு மகிழ்ச்சியான நிலைமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது எனவும் உலகம் கருதியிருந்தது.
ஆனால், இன்று பதிலளிக்கும் கடப்பாட்டிற்கான உலகத்தின் அழைப்பிற்கு பதிலளிப்பது தொடர்பாக அரசாங்கம் தனது அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளாமல் இருக்கின்றமையும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்மானிக்கும் நடவடிக்கைகளில் காண்பிக்கப்படும் தன்மையும் நண்பர்களை விட்டுவிலகச் செய்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களுடன் இணைந்துகொள்வதற்கு இட்டுச் செல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும் குறுகிய பார்வையைக் கொண்ட வெளிவிவகார நிபுணர்கள் இந்த யதார்த்தத்தை உணர்ந்துகொண்டதாகத் தென்படவில்லை.
இராணுவத்தின் நடத்தை பற்றிய எதிர்மறையான தன்மையை முறியடிக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளாத வரை சர்வதேச பலம்வாய்ந்த சக்திகளால் தனிப்படுத்தப்படுவதை அதிகரிக்கச் செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
*************
தஞ்சம் விற்பனைக்கு!
இலங்கை உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு எதிராக அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் இந்தத் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.
மலேஷியாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்கும் திட்டம் மனிதாபிமானமற்றது என அவுஸ்திரேலிய க்ரீன் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, படகுப் பயணிகளை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தில் பல்வேறு பாதக நிலைமைகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
*************