Tuesday 14 June 2011

செய்திகள் 14/06


இலங்கையின் கொலைக்களம் - இன்று இரவு 11.05இற்கு

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று 14ஆம் திகதி லண்டன் நேரப்படி இரவு 11.05 ஒளிபரப்பப்படுகின்றது.
இந்த விவரணப் படத்தைப் பார்க்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்கொட் லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனல் 4 வீடியோவிலுள்ள காட்சிகள் உண்மையானவை எனவும், போர்க் குற்றத்திற்கான சாட்சியங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி இலங்கையில் நீதி, பொறுப்புக் கூறும் கடப்பாடு, உண்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றையும் ஸ்கொட் லீ முன்வைத்துள்ளார்.
இந்தப் பிரேரணையில் கன்சர்வேட்டிவ், லிபரல், லேபர் மற்றும் டெமோக்கிரட்டிஸ் யூனியன் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த 26 வருடங்களாக நடைபெற்று வந்த போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் லிபியாவும் ஒன்று என்பது அந்தப் பிரேரணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நேட்டோ தலைமையில் லிபியா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுடைய பாதுகாப்பில் இலங்கை தோல்வியடைந்துள்ளது என்றும், இலங்கை அரசு பொதுமக்களுடைய பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்தப் பிரேரணை சுட்டிக்காட்டியுள்ளது.
************

பிரித்தானிய தொழிற்கட்சி வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர் டக்ளஸ் அலென்சாண்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத்தீவின் அண்மைய அரசியல் நிலை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அம்மையார் ஆற்றிய உரை என்பன பற்றி அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் இடையான பகுதியில் சிறீலங்கா அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இவை போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லும் எனவும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்பதுடன், அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் சொந்த விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மை பற்றி பரந்துபட்ட கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள 2011 நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கை ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருத்தல் அவசியம்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப ஒரேயொரு வழி, உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மட்டுமே எனவும் பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.
***************

இந்திய நிலைப்பாடு?
நிரந்தரமான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்திய மத்திய அரசு வலுவான நிலைப்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பதின்மூன்று பிளஸ் என்பதிலோ பதின்மூன்று மைனஸ் என்பதிலோ காலத்தை வீணடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை.
13 என்பதற்கு அப்பாலான ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவுடனான சந்திப்பின் போது காவல்துறை, காணி அதிகாரங்கள் தீர்வுத் திட்டத்தில் உள்வாங்கப்படமாட்டாது என்று அரசாங்கத்தின் தரப்பில் திட்டவட்டமாக அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு என்ற விவகாரமானது காலாகாலமாக இழுபறிக்குள்ளேயே இருந்து வருகின்றது.
இதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதிலோ தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்க வேண்டும் என்பதிலோ அரசாங்கத்திடம் நாட்டம் இல்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட்டபோது 13 பிளஸ் என்று இலங்கை அரசு இந்தியாவுக்கு உறுதியளித்தது.
தற்போது 13ஆவது திருத்தத்தின் உள்ளடங்கலான காணி அதிகாரம் மற்றும் காவல்துறை அதிகாரத்தை வழங்க முடியாது என அரசுத் தலைவரே இந்திய தூதுக்குழுவிடம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் இது 13 மைனஸ் ஆகவே அமையும்.
அதிகாரங்களை இல்லாது செய்து முன் வைக்கப்படுகின்ற திட்டம் முழுமையானதாக அமையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்தின் மீது வலுவான போக்கையும் நிலைப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்து அவர் இலங்கைத் தமிழர் தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு கடமைப்பாடு இருக்கின்றது. அது உணரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
************
நோர்வே சிங்களத்தின் நண்பணா?
அரசுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து இலங்கை அரசின் தூதுக்குழு நோர்வே அரசுடன் பேச்சு நடத்த இருக்கிறது.
நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக்சொல் ஹெய்முடன் இலங்கைத் தூதுக்குழு பேச்சு நடத்தவிருக்கிறது.
அரசு கூட்டமைப்பு பேச்சுக் குழுவில் இடம்பெறும் அமைச்சர் நிமால் டி சில்வா தலைமையில் செல்லும் இலங்கைத் தூதுக்குழு நோர்வே அரசின் உயர் மட்டத்தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தும் என்று நோர்வே தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய முரண்பாடுகளை நீக்கி, நல்லுறவை கட்டி எழுப்பும் நோக்குடன் இந்த விஜயத்தை இலங்கை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
நோர்வே வாழ் தமிழ் மக்களுடன் இந்தக் குழுவினர் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
மேலும் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நல்லிணக்க நடவடிக்கைககள் தொடர்பிலும் நோர்வே அரசுக்கு தெரிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை இலங்கையின் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் நோர்வே அரசுடனான உறவுகளை புதுப்பிப்பதற்கு மஹிந்த ஆர்வம் கொண்டுள்ளார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
***************

பதிவு எதற்கு? அச்சுறுத்தும் அரச பயங்கரவாதம்!
யாழ். குடாநாட்டில் பொதுமக்களையும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளையும் படம் பிடித்து பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றன.
இந்த நடவடிக்கைகளில் சில இடங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
வேறு சில இடங்களில் இராணுவத்தினர் என்று தெரிவித்து சிவில் உடையில் வந்தவர்களும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் மனக்கிலேசம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு வந்தவர்கள் குடும்ப பதிவு அட்டையிலுள்ள விவரங்களை தாம் கொண்டு வந்த படிவங்களில் நிரப்பியுள்ளனர்.
அத்துடன் வீட்டில் இருந்தவர்களைத் தனித் தனியாக படமும் எடுத்துள்ளனர்.
வீட்டில் எத்தனைபேர் இருக்கின்றீர்கள்? எல்லோரும் என்ன செய்கின்றனர். எத்தனைபேர் வேலை செய்கின்றனர். வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன என்று கேட்டு விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
சில இடங்களில் விடுதலைப் புலிகளால் கரைச்சல் இருக்கிறதா என்றும் கேட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் தாம் கொண்டுவந்த புகைப்படக் கருவியினால் வீட்டையும் படம் பிடித்துச் சென்றுள்ளனர்.
தங்களின் இந்தப் பணிகளை முடித்துக்கொண்டு வீட்டில் ஸ்ரிக்கர் ஒன்றையும் ஒட்டிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பிரதேச காவல் நிலையம் ஒன்றுடன் தொடர்புகொண்டு கேட்ட போது, தாம் அவ்வாறான பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அத்துடன் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
*************

காலத்தை கடத்தும் நாடகம்!
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக்காணும் விடயத்தை பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் பிரஸ்தாப விடயத்துக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு இவ்வாரத்துக்குள் அரசுத் தலைவரிடமிருந்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமான கோரிக்கையொன்று விடப்படவுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் நோக்கில் அமைக்கப்படும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பாராளுமன்றத்தினூடாக முன்மொழிய வைப்பதன் மூலம் அதுதொடர்பில் எழக்கூடிய எதிர்ப்பலைகளை சமாளிக்க முடியும் என்றும் அரசாங்கம் கருதுவதாக தெரிய வருகின்றது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ விரிவான கலந்துரையாடல் ஒன்றையும் நடாத்தியுள்ளார்.
************