Sunday 5 June 2011

செய்திகள் 05/06


எச்சரிக்கைக்கு எச்சரிக்கை விடும் இராஜதந்திரம்?
தனக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி நாட்டுத் தூதுவரை பாதுகாப்பு அமைச்சுக்கு அவசரமாக அழைத்து சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கண்டித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து கடும்தொனியில்- எச்சரிக்கை விடுக்கும் இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை ஜேர்மனித் தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருக்கு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அவரை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்த கோத்தாபய ராஜபக்ச, தனக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதன் மூலம் இராஜதந்திர வழி முறையை மீறியுள்ளதாக கண்டித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றிக் கவலை கொண்டால் அதுபற்றி வெளிவிவகார அமைச்சுக்கே கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சுக்கு எழுதியிருக்கக் கூடாது என்றும் அவர் அழுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் ஜேர்மனித் தூதுவர் இந்தச் சம்பவத்தில் காவல்துறைக் கொமாண்டோக்களும் தொடர்புபட்டிருந்ததாக கூறியுள்ள குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளார்.
சிறப்பு அதிரடிப்படையினர் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காவல்துறை மா அதிபர் ஒருவர் உள்ளிட்ட 25 காவலர்கள் இந்தச் சம்பவத்தில் எப்படிக் காயமடைந்தனர் என்பதையும் ஜேர்மனித் தூதுவர் புறக்கணித்து விட்டதாகவும் அவர் கடிந்து கொண்டுள்ளார்.
*************
இந்திய தூதுக்குழு விரைவில் கொழும்புக்கு!
இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் அடுத்த வார பிற்பகுதியில் கொழும்பு செல்லவுள்ளனர்.
இதன்போது இவர்கள் அண்மையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மீளவும் வலியுறுத்தவுள்ளதாக சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் உயர்மட்டக் குழுவினர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
முன்னதாக இந்தக் குழுவினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணம் காரணம் ஏதும் கூறப்படாமல் பிற்போடப்பட்டிருந்தது.
முன்னர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் கொழும்பு வரமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இந்தப் பதவியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளதால், கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவின் உயர்மட்டக் குழுவினரின் பயணத் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், பெரும்பாலும் இம்மாதம் 16ம் நாள் அல்லது அதற்குப் பின்னராக இருக்கலாம் என்றும் லக்பிம வாரஏடு தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சிறிலங்கா கூட்டறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக புதுடெல்லி சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஸ்ணா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்தத் தகவலை கொழும்பு திரும்பிய ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்
****************
மீண்டும் அழுத்தம், எதையாவது சாதிக்குமா?
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத் தொடரில் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற ஆவணப்படம் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று புதிய அழுத்தங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளன.
மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் இந்த அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைப் பற்றி பிரிட்டனின் "சனல்4" தொலைக்காட்சி ஒருமணி நேர ஆவணப்படத்தைத் தயாரித்திருந்தது.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் காண்பிக்கப்பட்டது.
பலநாடுகளின் தூதர்கள் அதனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கலங்கினர்.
அதில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளைத் தம்மால் பார்க்க முடியவில்லை என்று பலர் தெரிவித்தனர்.
ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது ஸ்ரீலங்காவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருந்த பிரதி சட்டமா அதிபர் ஏ.எம்.டி.நவாஸ், அந்தக் காட்சிகள் பொய்யானவை என்று பின்னர் கலந்துரையாடலில் மறுத்தார்.
அந்த வீடியோ நம்பகத்தன்மையற்றது என்றார்.
ஆனால், கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர், போர்க் குற்றங்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கக்கூடிய குற்றங்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது என்பதை இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
வைத்தியசாலைகள் போன்ற இடங்கள் மீது மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஒரு தடவை இரண்டு தடவைகள் அல்ல. 65 தடவைகள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
ஆவணப்படத்தைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்கா தூதர் எலீன் டொனாகோ, போர்க் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒரு தடவை இது நிரூபித்துள்ளது என்றார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆக்கபூர்வமான வகையில் பதிலளிக்குமாறு ஸ்ரீலங்கா அரசிடம் தாம் வலியுறுத்துவதாகவும் இலங்கை மக்களின் நல்லிணக்கத்துக்கும் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்குமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கொழும்பு சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் நல்லிணக்கம் பற்றி அரசு கூறிவருகின்ற போதும், வடக்கு மக்களின் சார்பில் பேசவல்லவர்களிடம் கேட்டால் அங்கு எதுவுமே நடக்கவில்லை என்பதை அறிய முடியும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த பீற்றர் பிலின்டர் தெரிவித்துள்ளார்.
**************
அறியாமாலே வெளியாகும் உண்மைகள்!
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற சர்வதேச இராணுவக் கருத்தரங்கின் போது உண்மையில் கடினமான விதத்தில் சில கேள்விகளே எழுப்பப்பட்டிருந்ததாகவும் இறுதியில் அவை எவற்றிற்கும் பதிலளிக்கப்பட்டிருக்கவில்லையெனவும் த எக்கனோமிஸ்ட் சஞ்சிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
உரிமைகள் குழுக்கள் இதனை போர்க்குற்ற வெள்ளையடிப்புக்கான முயற்சி எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தால் நடத்தப்பட்ட இந்த மூன்றுநாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்களில் பலர் அதனிலும் பார்க்க சிறப்பான ஏதோ ஒன்று இருக்கும் என்று கருதியிருந்தனர்.
பொது மக்கள் இழப்புகள் எதுவுமின்றி தமிழ்ப் புலிகளை ஸ்ரீலங்கா இராணுவம் எவ்வாறு தோற்கடித்தது என்பது தொடர்பாக உலகின் கிளர்ச்சிக்கெதிரான நடவடிக்கைகளுக்குக் கற்பிப்பதற்கு உதவியாக இந்த அமர்வுகள் இடம்பெற்றதாகக் கருதப்பட்டது.
ஜூன் 2 இல் கருத்தரங்கு முடிவடைந்தது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது ஸ்ரீலங்காப் படையினர் பொதுமக்களுக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகளை நிறைவேற்றுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஒளிநாடாவை ஐ.நா. விசேட அறிக்கையாளர் காண்பித்த மறுதினம் இந்த கருத்தரங்கு முடிவடைந்திருந்தது.
போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக முன்வைக்கப்படும் ஒவ்வொரு கருத்துகளையும் அரசாங்கம் மறுத்துள்ளது.
கருத்தரங்கில் சுய பாராட்டு உரைகள் இடம்பெற்றதுடன், பொது மக்களின் இழப்புகள் மிகவும் சொற்பமானவை எனத் தெரிவிக்கப்பட்டது.
பொது மக்கள் மத்தியிலிருந்து புலிகள் படையினர் மீது ஆட்லறி மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொண்ட போது அதற்குப் பதில் தாக்குதல்களை மேற்கொள்வதை இராணுவம் தவிர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களின் இழப்புகள் ஏற்படாமல் எவ்வாறு புலிகளை அழிக்க முடிந்தது என்று அமர்வுகளில் கலந்துகொண்டோரிடம் சபையிலுள்ள உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஆயிரக் கணக்கான பொதுமக்களைப் புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்த நிலையிலும் முன்னேறி வரும் படையினருக்கு எதிராக மனிதக் கேடயங்களாக வைத்திருந்த நிலையிலும் எவ்வாறு புலிகளை ஏனையோரிடமிருந்து வேறுபடுத்தி அழிக்க முடிந்தது என்று கேட்கப்பட்டது.
பதில்கள் நம்பிக்கையை ஏற்படுத்துபவையாக இருக்கவில்லை.
தற்போது நியூயோர்க்கில் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக பணிபுரியும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்றிருந்தார்.
புலிகளின் நிலைகள் மீதே இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அத்துடன் அடையாளம் காணப்பட்ட புலிகள் மற்றும் அவர்களின் இலக்குகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் சிவில் ஆடைகளுடன் சண்டையிட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் அப்பாவிகளிடமிருந்து புலிகளை எவ்வாறு வேறுபடுத்தியிருக்க முடியும். அதனை ஜெனரல் சில்வா விளங்கப்படுத்தியிருக்கவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் துஷ்பிரயோக குற்றச்சாட்டு குறித்து ஒரேயொரு பேச்சாளர் மட்டுமே உரையாற்றிருந்தார்.
அவர் இலங்கையர் அல்லர் அவுஸ்திரேலியாவின் கிளர்ச்சிக்கெதிரான நடவடிக்கைகளுக்கான ஆலோசகரான டேவிட் கில்சுலன் என்பவரே மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படையானதும் நேர்மையானதுமான கலந்துரையாடல்கள் இல்லாமல் இலங்கையின் முன்மாதிரியை சர்வதேச சமூகம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் என்பதைப் பார்ப்பது கடினமான விடயம் என அவர் கூறியிருந்தார் என்று த எக்கனமிஸ்ட் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
******************
சிங்கள ஜனநாயகத்தை கட்டுப்படுத்த தமிழின அழிப்புப் படையா?
எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மோதல் சம்பவத்தில் காவல்துறையினர் பல்வேறு தவறுகளை இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் கலகங்களை தடுப்பதற்கு காவல்துறையினரை ஈடுபடுத்தும் உத்தேசம் கிடையாது எனவும், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கட்டுநாயக்கவை அண்டிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பாதுகாப்பும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சம்பவத்தின் காரணமாக ஊழியர்கள் காவல்துறையினர் மீது கோபம் கொண்டுள்ளதாகவும், மீளவும் காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்துவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, காவல்துறையினருக்கு ஒழுக்கம் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
முரண்பாடான நிலைமைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
******************
மக்கள் பணத்தைச் சுரண்டும் தனியார் ஓய்வூதியம்!
தனியார்தறை ஊழியர்களின் பணத்தை அபகரிக்கும் நோக்கில் ஓய்வூதியத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனியார்துறை ஊழியர்கள் ஆயுள் முழுவதிலும் உழைத்த பணத்தை அரசாங்கம் கபடமான முறையில் அபகரிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், அது அரசாங்கத்தின் பணத்திலிருந்து வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனியார்துறை ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நபர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தும் மக்களின் உரிமைகளை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்களின் மூலம் நாட்டின் முதலீட்டுத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*************