Thursday 16 June 2011

செய்திகள் 16/06


விசாரணை நடக்குமா?
சனல் 4 வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து சிறிலங்கா போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக பிரபல வழக்கறிஞர் ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள செய்தியில் பொஸ்னியாவின் முஸ்லிம் மக்கள்மீது சேர்பிய படையினர் மேற்கொண்ட படுகொலைகளை நினைவுபடுத்தும் காட்சிகள் அடங்கிய 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகி உலகம் பூராகவும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருந்தது.
40 ஆயிரம் வரையான பொதுமக்களைப் பலிகொண்ட, வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படைகள் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.
கைகள் பின்புறம் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் போர்க் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை, வாகனங்களில் வீசப்படும் பெண் போராளிகளின் உடல்கள் நிர்வாணமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டமை, பொதுமக்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டமை போன்ற காட்சிகளை இந்த ஆவணப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்தக் காணொளியின் பெரும்பாலான காட்சிகள் இராணுவத்தின் கைத் தொலைபேசிகளினால் எடுக்கப்பட்டவை.
இப் போர்க் குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் சிலரை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதுடன் அவர்கள் தாம் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பாக உரையாடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
ஒரு காட்சியில் 'நிர்வாணமாக இறந்து கிடக்கும் பெண் ஒருவரின் உடலை சிதைக்க விரும்புவதாக' ஒரு இராணுவத்தினன் கூறும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இக்காணொளி ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேச சமூகத்தின்மீது இது தொடர்பான அழுத்தத்தையும் அதிகரித்துள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.
***************
அமெரிக்கா வலியுறுத்தல்!
இலங்கை உட்பட்ட 14 நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமரிக்கா கோரியுள்ளது
இலங்கை, சீனா, ஈரான், லிபியா, வடகொரியா, சூடான், சிரியா, வெனிசூலா, யேமன், ஸிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், பஹ்ரெய்ன், மியன்மார் ஆகிய நாடுகளிலேயே மனித உரிமைமீறல் இடம்பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
*******************
அன்பு வந்தது, ஆசை வந்தது!
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு மீண்டும் குடியேறுவதற்கான பணிகள் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லியில் நிருபர்களிடம் கூறியிருந்தார்.
அதுதொடர்பாக தினமணி நிருபர் இலங்கைத் தூதரிடம் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது, என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர், தமிழக மக்கள் ஆகியோருடன் உள்ள நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் விதத்தில் நல்ல உறவை வைத்துக் கொள்ள இலங்கை அரசு ஆர்வத்துடன் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் சந்தித்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தெரிவித்த கவலைகளை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
***************
ஆதரவு தேடி ஓட்டம்?
மகிந்த ராஜபக்ஸ, ரஷ்யாவுக்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றார்.
ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு சொந்தமான விசேட வானூர்தி மூலம் அவர் ரஸ்யாவுக்கு சென்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ தமது ரஷ்ய விஜயத்தின் போது செய்ட் பீடர்ஸ்பேர்கில் நடைபெறவுள்ள 15வது முக்கிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபற்றவுள்ளார்.
இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், ரஷ்ய அரசுத் தலைவர் திமிட்ரி மெத்வடோவ், சீன அரசுத் தலைவர் ஹ_ ஜிண்டாவோ உள்ளிட்ட அரச தலைவர்கள் பங்குபகுகொள்கின்றனர்.
அத்துடன் இந்த மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்களுடனும் மகிந்த ராஜபக்ஸ இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ ரஷ்ய விஜயத்தில் அரசாங்க அமைச்சர்கள் பலர் பங்குபற்றுவதுடன், பிரதான பொது அதிகாரிகள் பலரும் பங்குகொள்கின்றனர்.
மகிந்த ராஜபக்ஸ இதற்கு முன்னர் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
****************
தமிழக அரசுக்கு நன்றி
மூன்று தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு கோடான கோடி உலகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானங்களைத் துணிச்சலாக நிறைவேற்றியமைக்காகத் ஈழத்தமிழர்கள் சார்பில் தமது கட்சி நெஞ்சார்ந்த பாராட்டுக்;களையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறது எனவும் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இனப் படுகொலை நடைபெற்றதைச் சுட்டிக்காட்டி சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜக்கிய நாடுகள் சபை யுத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கு சம உரிமையுடன் கூடிய வாழ்வுரிமை நிலை நாட்ட சர்வதேச அழுத்தங்கள் தேவை என்பதை உணர்த்த பொருளாதாரத் தடை போன்ற இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியதையிட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்; எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இராமநாதபுர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கச்சதீவை மீட்க எடுத்த முயற்சி தமிழக ஈழத்தமிழர் மீனவர்கள் மோதாமல் சுமுக நிலையை எட்டுவதற்கும், ஸ்ரீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப்பலியான 500க்கு மேற்பட்ட தமிழ் மீனவர்களின் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படவும், வெகுவாக உதவும் என்று நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
********************
சர்வதேச நீதிமன்றில் வழக்கு ஏற்பு
டென்மார்க் தமிழர் பேரவையினர் கடந்த மே மாதம் முதலாம் நாளன்று நீதி கேட்டு கையளித்திருந்த முறைப்பாட்டை தாம் ஏற்றுக்கொண்டு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழக்கறிஞரின் அலுவலகத்தினர், முறைப்பாட்டை ஆராய்ந்து பதில் அனுப்புவதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிகின்ற சிறிலங்கா அரசு மீது விசாரனை செய்யுமாறு வேண்டி கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலும் அதன் தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி மாதத்திலும் வழக்கறிஞரால், அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பதில் கிடைக்காததால் டென்மார்க்கிலிருந்து அனைத்துலக மக்களவைகளின் ஆதரவோடு டென்மார்க் தமிழர் பேரவை அமைப்பின் உறுப்பினர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு 1000 கிலோமீற்றர்கள் என்னும் மிதிவண்டிப் போராட்டத்தை கடந்த மே முதலாம் நாள் முன்னெடுத்து, அனைத்துலக நீதிமன்றத்திடம் தமது முறைப்பாட்டை போர்க்குற்றவியல் நாளன்று நேரடியாகக் கையளித்திருந்தனர்.
அஞ்சல் மூலம் வழக்கறிஞரால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதுவித பதிலும் அனுப்பிவைக்காத அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழக்கறிஞரின் அலுவலகத்தினர், இப்பொழுது டென்மார்க் தமிழர்களின் முறைப்பாட்டை தாம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், ரோம் உடன்படிக்கைக்கு அமைய முறைப்பாட்டை ஆராய்ந்து பதில் அனுப்புவதாக டென்மார்க் தமிழர்பேரவையின் வழக்கறிஞருக்கு மே 23ம் நாள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையால் பரிந்துரைக்கப்படாமல் லிபியா நாட்டு தலைவர்கள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழக்கறிஞர் அவர்கள் வழக்கு தொடர்ந்தமையை திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் தம்மை சந்தித்த அதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம வழங்க்கறிஞரிடம் எடுத்துக்காட்டியிருந்தனர்.
வழக்கறிஞருடன் கலந்தாலோசித்ததும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான மேலதிக விபரங்களையும் இனப்படுகொலை புரிகின்ற சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமனறில் பதியப்பட்டுள்ள முறைப்பாட்டின் பதிவிலக்கத்தையும் ஊடகங்களுக்கு தெரியப்படுததுவதுடன், சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலையின் ஆதாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் அனைவரும் வழங்கக்கூடிய வழிமுறைகளையும் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்ததும் விரைவில் அறியத்தரவுள்ளதாக டென்மார்க் தமிழர் பேரவையினர் அறிவித்துள்ளனர்.
********************