Tuesday 21 June 2011

செய்திகள் 21/06


யார் அந்தக் குழு?
இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசியக் குழுவினரே யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர் என ஸ்ரீலங்கா அமைச்சர் தெரவித்துள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்பிரதேசத்தில் உருவாகப் போகும் ஜனநாயகச் சூழலை இல்லாதொழிப்பதே இத் தாக்குதலின் நோக்கமாகும்.
இதன் மூலம் ஜனநாயக அரசியலை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள் தள்ளுவதுமே சூத்திரதாரிகளின் நோக்கமாகும்.
இராணுவத்தில் உள்ள பிடிவாதமுடைய தமிழ் மக்களுக்கு எதிரான இரகசியக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர்.
இக்குழு அரசியல் ரீதியாக செயற்படுவதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் குழுவாகும்.
எனவே இராணுவத்தில் இயங்கும் இந்த இரகசிய குழு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி கண்டுபிடித்து களைய வேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பயங்கரமான நடவடிக்கைகளை இக் குழு மேற்கொள்ளும் நிலைமை உருவாகும்.
இக்குழுவினரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
***************

கண்டுபிடித்த பாதுகாப்புச் செயலர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அளவெட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினரே என்பதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதிப்படுத்தி உள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரி ஒருவரின் தலைமையில் படையினர் குழுவொன்று சமூக மண்டபத்துக்குச் சென்றபோது அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிலருக்கும் படையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தின் போது அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்க் காவலர் ஒருவருக்கே அடி விழுந்தது.
நாடாளுமன்ற உறுப்பினரையோ கூட்டத்தில் பங்கேற்றவர்களையோ அவர்கள் தாக்கவில்லை என்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ். நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குடாநாட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, படைகளிலுள்ள சில சக்திகள் அல்லது வெளிச்சக்திகள் இதில் தொடர்புபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
சம்பவத்துடன் படையினர் தொடர்புபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
தாக்குதலை நடத்திய படையினரைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அளவெட்டிச் சம்பவத்தில் இராணுவத்தினரே தொடர்புபட்டுள்ளனர் என்று பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு கோத்தபாய உத்தரவிட்டுள்ளார் என்று அரச சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்தததையடுத்தே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ள போதிலும் வெளிப்படையான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
***************
ஐரோப்பிய முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை
ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனாட் குச்னர் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
நிபுணர்குழு அறிக்கையின் மீது ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ள இவர்கள், சிறிலங்கா அரசு இதற்குப் பதிலளிப்பதற்கு உடனடியாக காலக்கெடு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் தமது நாட்டு அரசாங்கங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகளின்படி சிறிலங்கா அதிகாரிகள் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும் என்றும் டேவிட் மில்லி பான்டும், பேனாட் குச்னரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டங்களின்படி, பொறுப்புக்கூறுதல் என்பது ஒரு கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ள இவர்கள், இவற்றுக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவ மற்றும் குடியியல் அதிகாரிகள் அனைத்துலக குற்றச்செயல்களுக்காக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
2009ம் ஆண்டு சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தாம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் வடக்கில் படை நடவடிக்கைளின் போது பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அழுத்திக் கூறியதாகவும் அவர்கள் தமது பத்தியில் குறிப்பிட்டுள்ளனர்
***************
விபரங்களை வெளியிட மறுக்கும் படையினர்
தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமற்போனோரின் பெயர் விவரங்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என அரசு அறிவித்துள்ள போதிலும், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வவுனியா அலுவலகத்தில் அந்தப் பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை.
நாள்தோறும் எதிர்பார்ப்புடன் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.
அரசு அறிவித்தபோதும், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவுக்குச் செல்லும் உறவினர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
எந்த விவரமும் தம்மிடம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்புகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனோரின் பெயர் விவரங்களை நீண்டகால இழு பறியின் பின்னர் கொழும்பு, பூஸா, வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் அவ்விவரங்கள் இன்னும் காட்சிப் படுத்தப்படவில்லை.
நாள்தோறும் எதிர்பார்ப்புகளுடன் அங்கு செல்கின்ற மக்கள் வெறுங்கையுடனும், ஏமாற்றத்துடனும் திரும்புகின்றனர்.
இது குறித்து மக்கள் தம்மிடம் முறைப்பாடு செய்கின்றனர் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
***************
அப்பட்டமான பொய் - சுரேஸ்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நல்லிணக்க முயற்சிகளைக் கெடுக்கும் வகையில் கூட்டமைப்பின் ஒருபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நிராகரித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச கூறுவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தக் கருத்து வேறுபாடுகளோ பிளவுகளோ இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாகவே செயற்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முரண்பாடு என்று கூறுவதெல்லாம் பொய்யான பரப்புரை எனவும் கோத்தாபய ராஜபக்சவின்வின் குற்றசாட்டு அபத்தமானது என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.
***************
அறிக்கையை வெளியிட கோரிக்கை
நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது.
அத்துடன் சிறிலங்காவில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமையுடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்தவாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய உறவுகளுக்கான தூதுக்குழுவே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
ஜீன் லம்பேர்ட் தலைமையிலான இந்தக் குழு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு மேற்கொண்ட கள ஆய்வுப் பயணத்தை அடுத்து இந்த அறிக்கை பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
***************
தொடரும் பதிவுகள்!
யாழ் குடா நாட்டில் இராணுவப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டு விட்டதாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க அறிவித்த போதிலும் பதிவு நடவடிக்கைகள் எவ்விதமான மாற்றமுமின்றித் தொடர்கின்றன.
யாழ் நகர், வலிகாமம் மற்றும் வடமராட்சியின் பல பகுதிகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
படையதிகாரிகள் சகிதம் வீடுகள் தோறும் பயனிக்கும் படையினர் இந்தப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக வீடுகளுக்கு வரும் படையினர் வீடுகளில் எத்தனை அறைகள் உள்ளன என்றும், கிணறு, மலசலகூடம் உண்டா? என பல்வேறு கேள்விகளைக் கேட்பதும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் இருந்தார்களா? எவராவது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் விபரங்கள் என்பன தொடர்பாக படைத்தரப்பு துருவித்துருவி விபரங்களைக் கேட்டுப் பதிவு செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான இராணுவப் பதிவுகள் படைத்தரப்பால் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றின் உதவியை நாடியது.
நீதிமன்றப் படியேறப் பின்னடித்த படைத்தரப்பு பதிவுகளைக் கைவிடுவதாகக் கூறியது.
ஆனாலும் 5, 6 தடவைகளுக்கு மேலாக இவ்வாறு கூறுவதும் பின்னர் படையினர் இரகசியமாகப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அது அம்பலமான பின்னர் கூட்டமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டுவதும் பின்னர் இடைநிறுத்துவதுமான சம்பவங்களே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
***************