Friday 3 June 2011

செய்திகள் 03/06


சிறிலங்காவின் கொலைக்களம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சனல் 04 தொலைக்காட்சி ஊடகத்தினால் இன்று காட்சிப்படுத்தப்படவுள்ள இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத்தின் தலைப்பு ”சிறிலங்காவின் கொலைக்களம்” என்பதாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும், இந்தப் போர்க்குற்ற ஆவணப்படம் ஒரு மணி நேரத்துக்கு ஓடுகிறது.
சரணடைந்த தமிழ்க் கைதிகள் ஆயுதப் படைகளால் சுடப்படும் காட்சிகள் இதில் முதலில் காண்பிக்கப்படும்.
கைத்தொலைபேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை காண்பத்திருக்காத மிகவும் பயங்கரமான காட்சிகளையும் இந்த ஆவணப்படத்தில் சேர்த்துள்ளது.
மிகவும் அவதானமாக முக்கிய சில விடயங்களைக் கருத்தில் எடுத்த பின்னரே இந்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்த முடிவெடுக்கப்பட்டது என்று சனல்4 தொலைக்காட்சியைச் சேர்ந்த டொரோத்தி பர்னே தெரிவித்தார்.
ஒளிப்படங்கள், இராணுவத்தின் உத்தியோகபூர்வமான வீடியோக் காட்சிகள், செய்மதி மூலம் பெறப்பட்ட படங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் கலும் மக்ரேயின் நெறிப்படுத்தலில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசானது அதன் போர் வலயங்களுக்குச் சுயாதீன ஊடகவியலாளர்கள் செல்லத் தடைவிதித்திருந்தது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளையும் அங்கிருந்து வெளியேற்றி இருந்தது.
இவ்விரு தரப்பினர்களினதும் பிரசன்னம் யுத்த வலயங்களில் தடுக்கப்படும்போது, தனது சொந்த நாட்டு மக்கள் மீதுதான் மேற்கொள்ளும் தாக்குதல்களை நிரூபிக்க எந்தவொரு ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கமாட்டா என ஸ்ரீலங்கா அரசு நினைத்திருந்தது.
ஆனால் மறுதலையாக, கைத்தொலைபேசிகள் மற்றும் செய்மதி தொழிநுட்பம் போன்றவற்றிற்குள்ள சக்திகளை அரசு கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டது.
பலவருட காலங்களாக யுத்தக் காட்சிகளை ஆவணப்படுத்தி வருபவா; என்ற வகையில் இலங்கையில் இடம்பெற்ற காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் கடினமானவையாக உள்ளன என மக்ரே தெரிவித்துள்ளார்.
அந்தக் காட்சிகள் தமக்கு மிகுந்த வலிகளைக் கொடுத்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாகச் சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறுமானால் சிறிலங்காவின் கொலைக்களம் என்ற இந்தப் படம் பல கேள்விகளைக் கேட்டு நிற்கும் என்றும் மக்ரே தெரிவித்தார;.
**************

ஊழியர் மீதான வன்முறைக்கு ஜேர்மனி கண்டனம்! தமிழின படுகொலைக்கு?
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் செயலரை எச்சரித்துள்ள ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர், சிறிலங்கா காவல்துறையினர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் எல்லைமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது சிறிலங்காவில் ஜேர்மனியின் தற்போதைய மற்றும் எதிர்கால முதலீடுகளில் எதிர்மறையான பாரிய தாக்கத்தை ஏற்படக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள பல ஜேர்மனி நிறுவனங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிரடிப் படையினர் கூட ஜேர்மனி நாட்டு நிறுவனங்களின் கட்டங்களுக்குள் புகுந்து தொழிலாளர்களைத் தாக்கியதாகவும், அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஆனால் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஜேர்மனி தூதுவர் புளொட்னர், இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கே கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும், பாதுகாப்புச் செயலருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜேர்மனித் தூதுவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை கோத்தாபய ராஜபக்சவை பெரிதும் எரிச்சலடைய வைத்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, வழக்கத்துக்கு மாறாக- ஜேர்மனித் தூதுவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதம், கட்டுநாயக்க தாக்குதல்களால் சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக கொழும்பு இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
*************
இந்திய இரகசியப் பயணமும் பரகசியமான தோல்விச் செய்தியும்!
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்கில் சிறிலங்கா அதிபரால் அமைச்சர் பசில் ராஜபக்ச, கடந்த 26ம் நாள் காலை புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இந்தியா அவரை கண்டுகொள்ளாமல் அன்றையதினமே திருப்பி அனுப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் சிறிலங்கா அரசு அனைத்துலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்தநிலையைச் சமாளிக்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணமும் தோல்வியிலேயே முடிந்தது.
இதையடுத்து இந்தியா கொடுத்துள்ள அழுத்தங்களை குறைத்து , நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நோக்கில், தனது சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் இரகசியமாக புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு அங்கு பெரிய வரவேற்பு ஏதும் அளிக்கப்படாததுடன், இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்போது, சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனான பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் காணப்படும் முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்று பசில் ராஜபக்சவிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை. இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்க அமைச்சர் பசில் ராஜபக்ச கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
இதனால், அவர் கடந்த 26ம் நாள் மாலையே கொழும்பு திரும்பியுள்ளார்.
கடந்த 26ம் நாள் காலையில் இந்தியா சென்ற பசில் ராஜபக்ச, தேசிய சிவ்சங்கர் மேனனைச் சந்தித்து விட்டு அன்று மாலையே கொழும்பு திரும்பியதை, சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
*****************
ஊடகவியாலளரை பாதுக்காக்க அனுமதியில்லை! கொல்லவே அனுமதி!
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ சிறிலங்கா வருவதற்கான அனுமதியை இரண்டாவது தடவையாகவும் சிறிலங்கா அரசு மறுத்துள்ளது.
கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூவை சிறிலங்காவிற்கு அழைத்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, உட்பட காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுள்ளன.
இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் லெபனான் தலைநகர் பேரூட்டில் கூடிய இந்த அமைப்புக்கள் எடுத்துள்ளன.
37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்களை உள்ளடக்கிய சர்வதேச சுதந்திரமான கருத்துக்கூறல் பரிவர்த்தனை அமைப்பு சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளன.
***********

அரச இனவழிப்பு பயங்கரவாத பரப்புரையில் யாழ் அரச அதிபர்!
சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் உரையாற்றியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற போர் நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் குறித்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மத்தியில் விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய இறுதிநாள் அமர்வில் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோருடன் இமெல்டா சுகுமாரும் மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றி விளக்கமளித்தார்.
இங்கு இமெல்டா சுகுமார் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு மக்களை புலிகள் பணயமாக வைத்துக் கொண்டே போர் செய்தனர் எனவும் இந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு சிறிலங்கா இராணுவம் மிகவும் நியாயபூர்வமாக செயற்பட்டது எனவும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவம் எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றும் வடக்கு மக்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மீட்டெடுத்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபராக இருந்த இமெல்டா சுகுமார், 2009 ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியாவில் தங்கியிருந்தார்.
இவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த போதும் சிறிலங்காப் படையினர் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தப் போர்க் கருத்தரங்கில் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமான- தெரிவு செய்யப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும், அதிஉயர் நிர்வாக அதிகாரிகளும், வெளிநாட்டுப் பேராளர்களுக்குமே உரையாற்றச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டிலேயே இந்த போர்க் கருத்தரங்கில் இமெல்டா சுகுமார் உரையாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*************

ஒளிந்து கொள்ளும் அரசு?
உத்தேச தனியார்துறை ஓய்வூதியத் திட்டத்திற்கான பலத்த எதிர்ப்பு காரணமாக அதனைக் கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முகமாக நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆயினும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் பணிந்து போயுள்ளதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் வகையில் அதனை வேறு ஒரு பெயரிலும், மாற்று வழியிலும் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பும் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் முடிவினையடுத்து பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்தும் தனியார் துறை ஓய்வூதியத் திட்டம் குறித்த மசோதா அகற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கிடையே மீண்டும் அவ்வாறான ஒரு திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதாயின் முதலில் அதனை வௌ;ளை அறிக்கையாகவே முன்வைக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐ.தே.க. கோரிக்கை விடுத்துள்ளது.
**************